Wednesday, December 28, 2011

வெற்றுக் குவளைகளும் வெறும் மனிதர்களும்

கதவிடுக்கிலிருந்து புறப்பட்ட காற்று
காவலரணைத் தாண்டி நின்று
காத்திருக்கிறது வெற்றுக் குவளையுடன்

காணாமல்ப் போன மனிதர்களையும்
களித்துக் குடித்த நாட்களையும் தேடி.....
காத்திருந்து....... காத்திருந்து....... காத்திருந்து......
தன் நினைவுகளை மீட்ட காற்று
களைப்படைந்தது ஒருநிமிடம்
கைவிடப்பட்ட உலகத்தில்
கவனிக்க ஆளின்றி
வெற்றுக் குவளைடன் எதிர் கொள்கிற்து
ஒவ்வொரு வெறும் மனிதர்களையும்

கனவான காலங்கள் காற்றுக்கு
மீண்டும் மீண்டும் தன் நண்பர்களைக்
நினைவுபடுத்தியபடி இருந்தது
காற்றின் நண்பர்கள் காலத்தின் நண்பர்களல்ல
அவர்களும் காற்றுத்தானே
போய்விட்டார்கள்
தனியாகவும் கூட்டாகவும்

காற்று மீண்டும் மீண்டும் தேடுகிறது
தனக்கான நணபர்களை
வெறுமையில்லாத நண்பர்களை
ஒவ்வொரு முடிவிலும் தோல்விதான்.
கனவான காலங்கள் காற்றுக்கு
மீண்டும் மீண்டும் தன் நண்பர்களைக்
நினைவுபடுத்தியபடி இருந்தது

காற்றுக்குக் கவலைதான்
தன்போலவே இருப்பதில் மகிழ்ச்சி கண்டது
தனக்கேயான கையாலாகத்தனத்துடன்

கடைசியில் காற்று
மீண்டுமொரு முறை பார்த்துக்கொள்கிறது!
வெற்றுக் குவளைகளை ஏக்கத்துடன்.......................................................................
பழையபடியே புறப்படுகிறது
தன்குவளைகளை நிரப்ப
தனியாக............

Tuesday, December 20, 2011

அன்பையும் அறிவையும் அன்னையிடமே வாங்கினோம்

அன்புமாய் அறிவுமாய் நின்ற பேருரு
அம்மா என்றவுடன் அன்பு என்பதுதான் நினைவில் வரும். நாம் எந்தளவுக்கும் அன்பானவர்களாக இருக்கலாம்  அது அம்மாவிடமிருந்து தான் உங்களுக்கு வந்திருக்கும். ஆனால் அறிவென்றவுடன் அம்மாவை நாம் சேர்ப்பதில்லை. காலகாலமாக எம் மத்தியில் ‘அறிவு’ என்பது தந்தையோடுதான் அடையாளப்படுத்தப் படுகிறது.

“தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்” என்று அவ்வைப் பாட்டியோடு தொடங்கி “அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு” என்றும் ” அன்னையிடம் நீ அறிவை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்” என்று அடிக்கடி ஞாபகமூட்டப்படுகின்ற சினிமாப் பாடல்கள் வரை  அறிவுக்கான தந்தையின் அத்தோரிட்டி  சந்தேகத்திடமின்றி நம்பவைக்கப்படுகின்றது. இவ்வாறு அறிவை ஆணுக்குரியதாக்கிய ஆணாதிக்கத்தையும் இருட்டடிப்பையும் நாம் அறிந்து பார்க்க முயற்சியாவது செய்திருக்கின்றோமா? பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால்த்தான் தந்தையிடமிருந்து அறிவைப் பெற்றுக் கொள்ளவேண்டி ஏற்பட்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? ஆசிரியத் தொழில் பெண்களுக்குரியது என்றாகிவிட்ட நிலையில், நர்சரி பள்ளியிலிருந்து உயர்தர வகுப்பு வரை கல்வி போதிக்கும் 70% ஆசிரியர்கள் பெண்களே என்பதையும் நாம் கவனத்தில் எடுத்திருக்கின்றோமா? எம் சமூகத்தின் அறிவுப் பரவலாக்கத்தில் பரும் பங்கு வகிப்பது பெண்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றோமா? 

பெரும்பாலான பதில்கள் இல்லையென்றுதான் வரும். அறிவை ஆணுக்குரியதாகவும், அப்பாக்குரியதாகவுமே தொடர்ந்தும் வைத்திருப்பது ஆணாதிக்கமின்றி வேறு எதுவாக இருக்க முடியும்? எம் சமூகத்தில் அறிவும் கல்வியும் அப்பாவிடமிருந்தா பரவல்படுகிறது? அன்னை வெறும் அன்பை மட்டும்தான் எமக்கு வழங்குகிறாளா?

நடுத்தர வர்க்கத்தாரிடம் வேண்டுமானால் குழந்தைகள் “அறிவை” தந்தையிடமிருந்து பெற்றுக்கொள்வது பாதியளவு உண்மையாக இருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்து கீழுள்ள  உழைக்கும் மக்களிடமும் கிராம மக்களிடமும் அறிவு தந்தையால் பரவல்ப் படுத்தப்படவில்லை.  அவர்களின் குழந்தைகள் தம் தந்தையிடமிருந்து கல்வியை கற்றுக் கொள்வதுமில்லை. இதனால் தந்தைக்குக் குழந்தைகளின் கல்வி மீது அக்கறை இல்லை என்று நான் சொல்ல வருவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடுவது அவர்களும் தம் குழந்தைகள் நல்ல அறிவாளிகளாக, கல்விமான்களாக வரவேண்டும் என்பதில்  அதீத ஆசைகள் உள்ளவர்கள் தான். ஆனால் அவர்கள் தம் குழந்தைகளுக்கு கல்வியைச் சொல்லிக் கொடுத்து அறிவைப் அவர்களிடம் கொண்டு செல்ல வாய்ப்புக்கள் இல்லை என்ற நிதர்சனத்தையே சொல்லவருகிறேன்.

30 ஆண்டுகால போரையும் இறுதியில் பேரழிவையும் சந்தித்த எம் சமூகத்தில் அறிவையும் கல்வியையும் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பாதிக் குழந்தைகளுக்குத் தந்தைகள் அருகில் இல்லை. இருந்தவர்களும் சொல்லிக் கொடுக்க வாய்ப்பு இருக்கவில்லை. இந்த சூழலில் எம்மத்தியில் இன்றளவும் எழுத்தறிவு வீதமும் கல்வியும் அறிவும் உயர்நிலையில் இருப்பது யாரால்? அது எம் தாய்மார்களால்த்தான் என்ற உண்மை எம் மண்டையில் உறைக்கும்.

யுத்தம் ஏற்படுத்திய கொடும் விளைவுகளான கணவனை இழந்த தாய்மார்களின் பிள்ளைகளும் ,        காணாமல் போனவர்கள், சிறையிலும் தடுப்புக்காவலில் இருக்கின்றவர்களினதும்,  இருந்தவர்களினதும் குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்தது எப்படி? பிரத்தியேக வகுப்புக்கள் கூட இல்லாத கிராமங்களில், பிரத்தியேக வகுப்புக்கள் இருந்தாலும் அனுப்ப முடியாத வறுமை நிலையில் அக்குழந்தைகளுக்கு கல்வியைச் சொல்லிக் கொடுத்தது அக் குழந்தைகளின் அன்னைகளே.

காலையில் வேலைக்குச் சென்று கடுமையாக உழைத்து இருட்டில் வீடு திரும்பும் தந்தைமார்களுக்கு, தம் குழுந்தைகளுக்கு கல்வியையும் அறிவையும் ஊட்டுவதற்கு எவ்வாறு முடியும், கடும் உடலுழைப்பில் சோர்வில் குடித்துவிட்டு வரும் தந்தைமார்களின் குழந்தைகள் கல்வியையும் அறிவையும் பெற்றுக் கொண்டது யாரால்?  இன்றைய புதிய கல்வித் திட்டங்களில்  வழங்கப்படுகின்ற ஒப்படைகளிலும் செயற் திட்டங்களிலும் பிள்ளைகளுக்கு ஒத்தாசைகளும் உதவியும் செய்வது யார்? அப்பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் தொட்டு அனைத்தையும் பெற்றுக் கொடுத்ததும், கொடுப்பதுவும் யார்? அப்பிள்ளைகளின் பாடசாலை சென்று அப்பிள்ளைகளின் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன் படி அப்பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வது யார்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் அந்தப் பிள்ளைகளின் அன்னை என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

எம் சமூகத்தில் அன்பையும் அறிவையும் அன்னையிடமிருந்துதான் பெற்றுக்கொண்டோம். இன்னும் தெளிவாகச் சொன்னால் எம் சமூகம் அன்பையும் அறிவையம் பெண்களால்த்தான் பெற்றுக் கொள்கிறது.

இந்த சூழலை நாம் உள்வாங்கிக் கொண்டால்த்தான் எம் சமூகத்தில் அறிவுப் பரவலாக்கத்திலும் சமூகத்தின் அசைவியக்கங்களிலும் பெண்களின் பங்களிப்பையும் அன்பான அன்னையின் அறிவுப் பரிமாணத்தையும் சரியாக உணர்ந்து கொள்ள முடியும். அதனை உணர்ந்து கொண்டால்த்தான் சமூகத்தில் பெண்களுக்கான கௌரவத்தை சரியாக வழங்க முடியும்.

Saturday, December 17, 2011

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை……

கடந்த 15-12-2011 அன்று திருகோணமலை நகர்வாழ் இந்து மக்கள் பெருமிதத்துடன் கோணேசமலையைப் பார்த்தார்கள். தாம் சொல்லவேணடிய செய்தி ஒன்றை அழுத்தமாக சொல்லிவிட் திருப்தி அந்த மக்களின் மனங்களில் இருந்திருக்கும். ஆம் தங்க நிறத்தில் ஆஜானுபாகுவான 33அடி சிவன் சிலை அன்று திறப்பட்டது. திருகோணமலை நகரின் பெரும்பாலான இடங்களில இருந்து பார்க்கும் போது சிவனில் பட்டுத் தெறிக்கும் கதிரவனின் தங்க ஒளி கோணேசபூமி என்பதன் கட்புல அடையாளத்தை பரவவிட்டபடி இருக்கின்றது. மீண்டும் பக்தியும் ஆன்மீகப் பெருக்கும் கொண்ட நிகழ்வாக அது அமைந்திருந்தது.


கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட பிரமாண்ட சிலை பக்தியோடும் ஆன்மீகத்தோடும்  மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் கோணேசமலை எனபதே பக்தியைத் தாண்டிய அரசியல், நிர்வாக முக்கியத்துமுள்ள இடமாகவே இருந்து வருகின்றது. திருகோணமலையின் வரலாறு என்பது கோணேசர் மலையிலும் கோணேசர் கோவிலிலும் நடைபெற்ற மாற்றங்களாகவே உள்ளன. அந்த வகையில் கோணேசர் கோவில் ஏற்படுத்தப்பட்டள்ள இந்த மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும்.

  • பேரினவாத அரசியலின் நிகழ்ச்சிதிட்டங்கள் மிகநேர்த்தியாகவும் விரைவாகவும் அமுல்படுத்தப்படுகின்ற திருகோணமலையில், தமிழரின், இந்துக்களின் பெருமைக்குரியதும் சடங்கியல் வழிபாட்டில் முக்கியம் பெறுவதுமான கன்னியா வெந்நீருற்றில் வெற்றிகரமாக சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரல் கண்ணுக்கு முன்னே வெற்றிகரமாக ஆர்ப்பரித்துக்கொண்டு நடக்கும் காலத்தில் தமிழ் இந்து அடையாளத்தையும் அதேயளவு ஆர்ப்பாட்டத்துடன் அறிவிக்கின்றதாகவே இச்சிலை பார்க்கப்படுகிறது.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான கோணேமாமலையை சிங்கள பௌத்தமாக்கும் நோக்குடன் கோட்டைவாயிலுக்கு அருகாமையில் கோணமலையின் வடக்குப்பக்கமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரை உரி ய கவனிப்பை சிஙகள மக்களிடமே பெறாமல் போனதால்,  கதிர்காமம் போல் கோணேசர் கோயிலையும் ஏதோ ஒரு வழியில் சிங்கள பௌத்தத்தினுள் உள்வாங்கும் ஆசையுடன்  கோணேசர் கோயிலின் பிரதான வீதியின் இருமருங்கிலும் சிங்களவரின் கடைகள் ஏற்படுத்தி  கோணேசர் கோயிலுக்கு இதுவரை இருந்த இந்துத் தமிழ் அடையாளத்தை மாற்றுகின்ற இராணுவ மற்றும் சிங்கள அதிகாரிகளின் திட்டமிடலை  துணிவுடன் எதிர்கொள்கின்ற மாதிரியாக இச்சிலை அமைக்கப்பட்டது.
  • திருகோணமலையின் பெரும்பாலான இடங்களில் இருந்து பார்கக்கும் போது கோணேசர் மலையில்த் தெரியும் வெண்ணிற 10அடி உயர புத்தர்சிலை கோணேசமலைக்கு வழங்குகின்ற சிங்கள பௌத்த அடையாளத்தை வெற்றிகொள்வதாக இச்சிலை அமையும்.
  • திருகோணமலை பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பின் வெளிப்படையான அடையாளமாக பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அவர்கள் மொழியில் சொல்லப்பட்ட பதிலே இச்சிலை.
  • சிங்கள பௌத்தம் அரசமதமான நாட்டில், முக்கிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிகாரிகள் இராணுவ மற்றம் படைத்துறையைச் சேர்ந்தவர்களாகவும் சிங்கள பௌத்த கடும்போக்களராக இருக்கின்ற மாவட்டத்தில், கடற்படையினரின் கண்காணிப்பில் இருக்கின்ற பிரதேசத்தில் , 2ம் கஜபா ரெஜிமேன்டின் வலிமையான தளமாக பல ஆண்டுகள் செயற்படுகின்ற இடத்தில் இவற்றை எல்லாம் எதிர்க்கின்றதை வெளிப்படுத்துவதாகவே இச்சிலை அமைக்கப்பட்டது.

நான் மேற்சொன்னவை ஊதிபெருப்பிக்கப்பட்ட வலிந்து திணிக்கின்ற கருத்துக்கள் என்று நீஙகள் எண்ணலாம், ஆனால் இச்சிலை அமைப்பினைத் திட்டமிட்டவர்கள், இச்சிலை அமைப்பு ஆதரவு வழங்கியவர்கள், இச்சிலையை பார்க்கின்ற திருகோணமலை தமிழ் இந்துக்களின் மனநிலை இவற்றில் ஒன்றிலாவது இருக்கின்றதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

போர்த்துகேயர் கோணேசர் கோயிலை அழித்தது தொட்டு காலங்காலமாக திருகோணமலையின் தமிழ் மனங்களில் நிலைபெற்றள்ள அரச எதிர்ப்பு மனநிலைகளின் படியேதான் இச்சிலை பற்றிய கருத்தமைவுகளும் அமைந்திருக்கின்றது. இதில் புதிதாக எதுவுமில்லை. தமிழ் அடிப்படைவாத மனநிலையில் உள்ளவர்களால் இது கொண்டாடப்படவும் வரவேற்கப்படுவதுமான இச்செயலின் அடிப்படைவாத மதப்பாசிச சிந்தனைகள், தமிழினத் துவேசங்கள் ஆன்மீக பக்தி முலாம் பூசி  மறைக்கப்படுகிறது.

இல்லை இது ஆன்மிக உணர்வை அரசியலாக்கும் உன்னுடைய திட்டமிட்ட முயற்சி என்பவர்கள், இன்று இலங்கையில் அமைக்கப்படும் சிலைகள் வெறும் மத அடையாளங்கள் அல்ல. அவை இன மேலாதிக்கத்தினதும், மத அடிப்படைவாதத்தினதும் அடையாளமாகவே அமைகின்றது என்பதை மறுக்கின்றார்களா?

தமிழர் பிரதேச மெங்கும் அமைக்கப்படும் புத்தர்சிலைகளை பௌத்தத்தின் பக்தியினதும் ஆன்மீக உணர்வின் அடையாளமாக அப்பாவித்தனமாக நம்பமுடியுமென்றால் கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட ருத்திரன் சிலையையும் நான் இந்து ஆன்மீகத்தின் அடையாளமாக நம்பிக் கொள்கிறேன். ஆனால் தமிழர் பகுதியில் பரவலாக அமைக்கப்படும் புத்தர் சிலை பௌத்தத்தின் ஆன்மீக அடையாளமல்ல சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரல்படியே அமைகிறது என்பதை ஏற்றுக்கொண்ட  நான் கோணேசர் கோயிலில் அமைக்கப்பட்ட ருத்திரன் சிலையை தமிழ் இந்து அடிப்படைவாதத்தின் அடையாளமாகவே கருதமுடியும்.

தெளிவான தொடர்ச்சியான பண்டைய வரலாற்று ஆதாரங்களை உடைய வரலாற்றுப் பெருமையும், ஞான சம்பந்தர், சேக்கிழார், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல்பெற்ற திருத்தலம் என்பதால் கிடைத்த பிரத்தியும் தரமுடியாத ஆன்மீக உணர்வை 33அடி சிலை ஏற்படுத்திவிடும் என்பது அறிவின் பாற்பட்டதல்ல.

சிலை அமைத்து முடியும் வரை பெரிதாக விளம்பரப்படுத்தப்படாமல் விட்டதுடன், சிலை பொலிஸ் அட்தியட்சர் ஒருவரைக் கொண்டு திறக்கப்பட்டது வரை மிகத்திட்டமிட்டு இச்சிலை விவகாரம் மேற்கொள்ளப்பட்டது.

விளம்பரப்பரப் படுத்தப்படாமையை  பெரிய விடயமாகக் கொள்ளாது விட்டாலும், இந்துக்களின் புனித ஆலயத்தில் பெருமிதமாக அமைக்கப்பட்ட சிலை இந்துவோ, தமிழரோ அல்லாத பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியைக் கொண்டு திறக்கப்பட்டது எந்த ஆன்மிகத்தினுள்ளும் பக்தியினுள்ளும் அடங்குகிறது. பிராமணச் சடங்குகள் நிறைந்த இந்துமத்தில் பிராமணர்களால் மட்டும் சடங்கியல் தகுதி செய்யப்பட்டு புனிதப்படுத்தப்படும் சிலைகளே சக்தியும் ஆன்மீக வலுவும் உள்ளதாக நம்பப்படும். அவ்வாறாயின் இச்சிலையை அமைத்தவர்களின் நோக்கமும் இச்சிலை அமைக்கப்பட்டத்ன நோக்கமம் ஆன்மீகமல்ல என்பது தெளிவாகும். இதை அமைத்த கோணேசர் ஆலய அறங்காவலர் சபையினர் தமது திட்டமிடல்களை மெச்சிக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு உண்மையையும் கவனிக்கவேண்டும்.

கோணேசமலையை சிங்க பௌத்த அடையாளமாக்கல் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்துதான் திருகோணமலையின் சிங்கள பௌத்த ஆளும் வர்க்கம் அதே அளவு புகழும், வரலாறும் சடங்கியல் புனிதமும் கொண்ட கன்னியாவை குறிவைத்தது.

  1. முதற்கட்டமாக  தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதி என்பதால் அங்கு ஏற்கனவே இருந் பிள்ளையார்கோயிலை புனருத்தாருனத்திற்காக இடிக்கும் வரைகாத்திரந்து  மீண்டும் கட்டுவதற்கு நீதிமன்றத் தடை பெறப்பட்டது.
  2.  அதே இடத்தில் புதிதாக அரசமரத்தின் கீழ் புத்த விக்கிரகம்அமைக்கப்பட்டது.
  3. எல்லாவற்றிக்கம் மேலாக  தற்போது அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. இதற்காகவே புத்த பிக்கு ஒருவர் அங்கு தங்கியிருந்து முழுநேரம் ஒலிபெருக்கியில் அங்கு வருபவர்களிடம் நிதி சேகரிக்கிறார்.
  4. அங்கிருந்த இந்துப் புராணக் கதைகொண்ட அறிவிப்புப் பலகையை அரசஅதிபர் நேராகவே வந்து பிடுங்கிக் கொண்டு சென்றார். அத்துடன் தமிழ்ர் ஆட்சியதிகாரம் உள்ள உப்புவெளி பிரதேசசபையிடமிருந்து  கன்னியா வெந்நீருற்றின் பராமரிப்பு நிர்வாகம் பறிக்கப்பட்டது.

இப்பொழுது கோணேசர் கோயிலில் சிலை அமைக்கப்பட்டதை  கவனியாது விட்ட அரசநிர்வாகம் இதைவிட பிரமாண்டமாக கன்னியாவில் புத்தர் சிலை அமைக்கப்படுவதையும் அவ்வாறுதான் செய்யும். அப்போது தமிழ் உணர்வு பொங்கிக் கொப்பளிக்கும் போது ஒன்றும் செய்ய முடியாது.

புத்தர் சிலை அமைப்பவர்களின் நோக்கமும் கோணேசர் கோயிலில் ருத்திரன் சிலை அமைத்தவர்களினதும் நோக்கம் ஒன்றுதான். அது மத அடிப்படைவாத பாசிச நிகழ்சிநிரலையும் உணர்வுகளையும் உள்ளடக்கியது. வெறும் பக்தி, ஆன்மீக சாயங்களால் இதை மறைத்துக் கொள்வதன் மூலம் அமைதியையும் நிம்மதியான வாழ்வுச் சூழலையும் திருகோணமலையில் ஏற்படுத்தமுடியாது.

வரலாறு மற்றும் பண்பாட்டு ரீதியிலும் இச்சிலை தொடர்பான விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் உள்ளன. படிம அமைப்பு ரீதியிலும் இச்சிலை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அது பற்றியும் நாம் கவனத்தில் கொள்ளவெண்டும். ஆனால் அதைவிட இந்த அரசியல் உள்நோக்கம் அபாயகரமானது.  உள்ளே பரஸபர சந்தேகமும் அதிருப்தியும் அச்சமும் கொண்டதாக அமைந்தாலும் அமைதியாகவே இருக்கும் திருகோணமலை இயல்புநிலை மோசமாக்குவதற்கு தூண்டுகொலாகவே அமையும்

திருகோணமலை என்பது மூவினங்களும் வாழ்கின்ற மதச்சார்பின்மையுள்ள மாவட்டமாக இருந்தால்த்தான் அது அமைதியாக இருக்க முடியும் என்பது ஏன் உணர மறுக்கிறோம்.

மதவிமர்சனங்களை நான் தற்போது குறைத்துவிட்டேன். கோணேசர் மீது அதன் பண்டைய வரலாற்று பெருமையால் எனக்கு பாசம் அதிகம்.  அதைத் தாண்டியும் மத விமர்சனங்களை தீவிரமாக செய்யவேண்டியே உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்  ரொமிலா தாப்பரின் கூற்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசியமானது என்றே கருதுகிறேன்.

 “மதவிமர்சனம் என்பது சமுதயப் புரட்சியினை கொண்டுவரும் நோக்கத்துடன், உணர்வுக்காக நடக்கும் போராட்டம்; மனித மனங்களை வெல்வதற்கான ஒரு போர். வெறுவார்த்தைகளில் கூறுவதென்றால், மதசார்பின்மைக்கான போராட்டம்”.



Monday, December 5, 2011

இருட்டினில் நீதி கிடக்கட்டுமே……

எமது சமூகத்தில் மிக உயர்ந்த நம்பிக்கையை பெற்றிருப்பது நீதிமன்றம். பொது நல வழக்கு மற்றும்  அரசியல் சார்ந்த வழக்குகளில் நீதி மன்றத்தின் நம்பிக்கை கேள்விக்குட்படுத்தப்பட்ட போதும். சிவில் வழக்குகளில் நீதிமன்றத்தை நாம் பெருமளவில் விமர்சிப்பதில்லை. எது எவ்வாறாயினும் நாம் ஏற்றுக் கொண்ட  அல்லது வாழகின்ற சமூகு அமைப்பில் நீதியை தருவதற்கு உள்ள ஒரே இடம் நீதி மன்றமே.

ஆயினும் நீதிமன்றம் செல்லாமல் இருப்பதே ஒரு கௌரவமான வாழ்க்கை என்ற எண்ணங்கள் ஊறிப்போன சமூகமாக எம் சமூகம் இருந்து வருகின்றது.’கோர்ட்டும், ஆஸ்பத்திரியும் கால்வைக்கக் கூடாத இடங்களாகவே’ பெரியவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. நீதி மன்றம் என்பது குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக மட்டுமே பொது மக்களின் புத்தியில் பதிந்துள்ளதே ஒழிய, நீதியை நிலைநிறுத்துகின்ற இடமாக பொதுப்புத்தியில் பதியவில்லை.

இதனாலேயே பலர் நீதிமன்றம் சென்றதில்லை. சென்றவர்களும் பொதுப்புத்தியில் பதிந்த கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நீதி மன்றத்தின் நடைமுறைகள் அவ்வாறுதான் இருக்கின்றன. ஏனைய நீதி மன்றங்கள் பற்றித் தெரியாது ஆனால் வடக்கு கிழக்கு நீதி மன்றங்களில் இதிலிருந்த பெருமளவு வேறுபடாது.

இங்கு நான் நீதிமன்ற நடைமுறை என்பதன் மூலம் கட்டமைப்பு பற்றியோ அதன் நீதிவழங்கும் தன்மை அதனது நியாயப்பாடுகள், பொருத்தப்பாடுகள் பற்றியோ சொல்வதற்கு வரவில்லை. நீதி மன்றத்திற்கு சென்று ஒருவர் தன்னுடைய வழக்கை கொண்டு செல்வதில் உள்ள நடைமுறைகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

ஏனெனில் நீதிமன்றத்தினுள் செல்வதற்கு ஒருவர் விரும்பாமைக்க பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகஇருக்கின்றது. சமீபத்தில் நீதி மன்றத்திற்கு சென்ற போத எனக்கேற்பட்ட அனுபவம் இந்த கருத்தை உறுதிசெய்வதாகவே படுகின்றது.

பெரும்பாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருப்பதில்லை. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவரை பொலிசாரே அழைத்து வருவர். இவர்கள் ஒன்று நண்பர்கள்/உறவினர்களுக்கு பிணைகட்டுவதற்கு அல்லது நண்பர்கள் / உறவினர்களின் வழக்கின் நிலமைபற்றி தெரிந்து கொள்வதற்கு அல்லது பலசமயம் வாதிகளாக, பாதிக்கபட்டவராகவே இருப்பர்.

நீதி மன்றத்திற்குள் நுழையும் போது வாசலில் உள்ள பொலிசார் அவர்களை வழிமறித்து அவர்களது செல்போன், குடை, ஹெல்மட் போன்றவற்றை வெளியில் வைத்துவிட்டு வரச் சொல்லுவார்கள். இவற்றை வைப்பதற்கான பாதுகாப்பிடத்தை  நீதி மன்றமோ அரசோ ஏற்படுத்தியிருக்காது. நீதி மன்ற வளாகத்திற்கு வெளியில் தனியார் ஒருவர் வைத்திருக்கும் சிறிய பாதுகாப்பு கடையினுள் (பாதனிக்கு டோக்கன் பெறுவது போல் பெற்றுக்கொண்டு) வைத்துவிட்டு வருவேண்டும். அவற்றின் பாதுகாப்பிற்கு நீதிமன்றத்தினதோ அரசினதோ உத்தரவாதமில்லை.

வாசல் தாண்டி உள் நுழையும் போதே உள் கடமையில் ஈடுபட்டிருக்கும் நீதி மன்ற பொலிசாரால்  சத்தம் போடாதே என சைகையாலும், மெல்லிய குரலிலும் எச்சரிக்கப்படுவதுடன் பொதுவரவேற்பறையின்  ஓராமாகப் போடப்பட்டிருக்கும் கதிரைகளில் உட்கார்ந்திருக்கமாறும் எச்சரிக்கை செய்யப்படுவார். உள்ளே வந்தவர் மறப்பேதும் சொல்லாமல் கதிரைகள் இருக்கம் ஓரங்களுக்கு உடனடியாகச் செல்லவேண்டும். நீதி மன்றத்திறற்கு அவர் புதிதாக வ்நதிருந்தாலே அல்லது தமது உறவினரதோ/நண்பாகளோ அல்லது வழக்கு எங்கே நடைபெறுகிறது என்ற தகவல் தெரியாமல் அவ்விடத்தல் 2நிமிடங்கள் நின்று சுற்றுமுற்றும் தேடிப்பார்தாலோ உடனடியாக காவலில் உள்ள பொலிசார் அவரிடத்தில் நெருங்கி வந்து ஓரத்திற்கு செல்லுமாறு அதட்டுவார். சிலவேளை கையால் தள்ளுவதும் உண்டு.

நீதி மன்றத்தின் பொது வரவேற்பறையில் வரவேற்பு உதவியாளரோ/ தகவல் உதவியாளரோ இருக்க மாட்டார். பொலிசின் கட்டளைப்படி அங்கே அவரைப்போலவே பலர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கதிரைகளில் எங்கே போவது என்று தெரியாமல் பாடசாலைப் பிள்ளைகள் போல அமைதியாக அமர்ந்திருப்பார்கள். கதிரைகள் கிடைக்காதவர்கள்  நின்றபடி இருந்தார்கள். ஒரு சிலர் அருகிலிருந்தவர்களிடம் கதைப்பதற்கு வாயைத் திறந்தவுடன் கதைக்காதே என்ற அதட்டலுடன் பொலிசார் அவர்களை நோக்கி கடுமையான ஒரு பார்வையை வீசி அடக்குவார். பாடசாலையில் பழக்கப்படும் பழக்கம் இதற்கு நன்றாக ஒத்துழைக்கும்.

பொலிஸார் கவனிக்காத நேர இடைவெளிகளில் தான் இரகசியமாக தகவல்களை பாதி சாடையிலும் உதட்டசைவிலும் கேட்டுக் கொள்ளவேண்டும். அல்லது அவ்வழியில் செல்லும் வக்கீல் ஒருவர் உங்களிடம் என்ன விடயம என்று கேட்கும் வரைக்கும் காத்துக்கிடக்க வேண்டும்.

நீதி மன்றம் பற்றிய பயத்தோடு புதிதாக ஒருவர் நீதி மன்றுக்கு வருவாராக இருந்தால் அவர்நிலமை என்ன. ஓரமாக நின்று கொண்டிருக்க வேண்டியதாகவே இருக்கும்.
அரைநிலப்பிரபுத்துவ அடிமை முறை மிக அப்பட்டமாக வெளித்தெரிவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் நீதிமன்றத்தில் தான் என்பதை மிக தெளிவாகவே அறிய முடியும். நீதி மன்றம் என்பது நீதியைச் சொல்லுகின்ற இடம் என்ற எண்ணம் நீதி மன்றத்தின் வரவேற்புக் கூடத்திலோ அல்லது நீதி மன்றத்திலோ காத்திருக்கும் ஒருவருக்கு ஏற்படவாய்பே இல்லை.

தனக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது, அநீதி இழைக்கப்பட்டள்ளது,  நீதி எனக்குத் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதி மன்றத்திற்கு வருபவர், அங்கே காவலர்களையும் நீதவானையும் பயத்துடனே பார்த்து மௌனமாக அவர் சொல்லுவதை ஏற்பதுபோலவே நீதிமன்ற நடைமுறைகள் உள்ளன.

அமைதியாக்குதல் என்பது அடக்குமுறையின் அடையாளம் தானே. நீதி மன்றிலேயே அடக்குமுறை சட்டரீதியாக அனுமதிக்கப் பட்டமாதிரித் தான் பொலிசாரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். நீதி சொல்கின்ற நீதவான் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,  நீதி சொல்கின்றவரிடம் பயமும் மரியாதையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவே இந்நடைமுறைகள் உள்ளன. இதன்படிக்கு நீதிமன்றத்தில் வழங்கப்படும் நீதியை பயத்தாலும், அடிமைமுறையான மரியாதையாலும் மட்டுமே ஒருவர் ஏற்றுக் கொள்ளும் படி தயார் படுத்துப்படுகிறார்.

குறைந்த பட்சம் நீதியைச் சொல்பவர் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி தனக்கு நீதி கிடைத்தது என்ற நம்பிக்கையை உருவாக்குதற்கான தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பரவாயில்லை. அடிமைத்தனப் பயத்தையும் அதனால் ஏற்படுகினற் மரியாதையும் பய்னபடுத்தித்தான் நீதிகள் வழங்கப்படுகிற நீதி என்ன நீதியாக இருக்க முடியும்.  இந்த ‘நீதி’ யைத்தான்  நாம் போற்றுகின்றோம். இந்த நீதி கிடைக்கவில்லை என்றுதான் நாம் போராடுகின்றோம்.

பேரினவாத அரசின் சட்டங்களும் செயல்ப்பாடுகளும் நீதிமன்றம நீதி செய்யும் என்ற நம்பிக்கையை  எமது நாட்டின் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்படுத்தவில்லை. ஆனால பயங்கரவாதச் தடைச் சட்டமும், அவசரகாலச் சட்டமும் நீதி, நீதி மன்றம் என்ற அக்கறையற்று கிடந்த கணக்கற்றவரை நீதி மன்றத்தின் வாயிலும் வக்கீலின் வீடுகளிலும் தவம்கிடக்கும் படி செய்துள்ளது.

தன் கணவனோ, சகோதரனோ, பிள்ளையோ கைது செய்யப்பட்டு நீதி மன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் கேள்விப்பட்டு நீதி மன்றத்திற்கு வரும் கிராமத்து மிகவறிய ஏழை பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். முதன் முதலாக நீதி மன்றத்திற்கு வரும் அவர்களை பொலிசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி, ஏன் வந்திருக்கிறார் என்றுகூட அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் ‘ஓராமாகப் போய் நில்’ என்று சொன்னால் அவர் என்ன செய்வார். ஏற்கனவே செய்யப்பட்ட கொடுரங்களை பார்த்து பொலிசார் என்றாலே பயங்கொண்டிருக்கும் அவர்களை,  நீதிமன்றில் வைத்து பொலிசார் ‘ஓரமாய்ப் போய் நில்’ என்றால் மூச்சுக்கூட விடாமல் ஓரமாக போய் நின்றுகொண்டேதானே இருப்பார்கள்.

சரி அவருக்கு அருகில் நிற்பவர்களாவது அவர் ஏன் வந்திருக்கிறார் என்று கேட்டு அவருக்குத தேவையான உதவிகள் செய்ய முடியுமா? என்று பார்த்தால் அதுகூட சாத்தியமில்லை. தெரிந்தவர்களையாவது தேடித் திரிந்து உதவி கேட்பதென்றால் அதற்கும் வழியில்லை. எந்த நீதி மன்றம் என்று தெரியாமல் முழித்தபடி நிற்க வேண்டியது தான். தடுத்துவைக்கபட்ட/ கைது செய்யப்பட்ட தன் மகனோ, கணவனோ, உறவினனோ வந்திருக்கிறாரா என்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடைக்குப்பட்ட கூண்டுக்குள் பார்பதற்கும் அனுமதிக்க மாட்டார்கள். யாராவது வக்கீல் இரக்கப்பட்டு வந்து உதவி செய்தால் மட்டுமே அவர் நீதி கிடைக்கு மிடத்துக்குச் செல்லமுடியும்.

இவ்வாறான சந்தர்பங்கள் எமது நாட்டில எவ்வளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி நாம் சிந்திக்காமல் இருந்தது ஏன்? இந்த கேள்வி நியாயமான பதில்களை நாம் ஒவ்வொருவரும் தேடுவதை மறப்போமானால் நாம் நீதி பற்றியும், உரிமைகள் பற்றியம் எவ்வளவு கதைத்தாலும் அர்த்தமற்றதாகவே அமையும்.

நீதி கிடைப்பது கிடைக்காதது ஒருபுறம் இருக்கட்டும். அடக்குமுறைகளைத் தாங்கி அமைதியாக இருந்து அதிஸ்டத்தின் படிதான் நீதி கிடைக்கு மிடத்திற்கே போகலாம் என்றால் அந்த நீதி இருட்டிலேயே கிடக்கட்டுமே…..

வரலாற்றில் திருக்கோணமலையல்ல; திருகோணமலையே வாழும்

திருகோணமலை பற்றிய தகவல்களை எழுத்தில் பதிவு செய்யும் போது 'திருகோணமலை' என்று எழுத வேண்டுமா அல்லது' திருக்கோணமலை' என்று எழுதவேண்டுமா என்பது திருகோணமலை கலை இலக்கிய வாதிகளிடையே வாதவிவாதத்திற்கு உரியதாக இருந்து வருகிறது.  திருகோணமலை என்று எழுதவதையே பெருமையாக் கொள்ளும் தலைமுறை வளர்ந்து அதைபெருமையுடன்  பின்பற்றிக்கொண்டு இருக்கின்றது. இதில் திருகோணமலை இந்துக்கல்லூரியின் பங்கு முக்கியமானது. இந்துக் கல்லூரியின மாணவர்களே திருகொணமலையின் கலைஇலக்கிய நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பதால் ''திருகோணமலை'' எனப் பேசுவதுதான் சரியானது பெருடையானது என்றாகிவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு மயூரண்ணா (மு.மயூரன்) ''திருகோணமலையும் திருக்கோணமலையும்'' என்ற பதிவை எழுதியிருந்தார். திருகோணமலை பெயர்க்காரணங்களை ஆராய்ந்துள்ளதுடன், திருணமலையை எழுதும் போது 'திரு'வுக்கும் 'கோணமலை' க்கும் இடையில் கண்டிப்பாக "க்" போடவேண்டும் என்று கட்டாயப்படுத்துபவர்களது வாதங்கள் நேர்மையான முறையில் முன்வைத்து தனது நிலைப்பாட்டையும் முன்வைத்திருந்தார். அதலில் நான் திருக்கோணமலை என்பதை மறுப்பதற்கு வலுவான சான்றுகள் வைத்திருப்பதாக என்னுடைய நிலைப்பாட்டை குறிப்பிட்டதுடன் என்னையும் பின்னூட்டமிட அழைத்திருந்தார். சோம்பல் காரணமாக அதற்கு இதுநாள்வரை முறையான பதில் எதையும் நான் எழுதவில்லை. அத்துடன் அந்த விடயம் சென்று விட்டது. தற்போது திருகோணமலை பற்றிய வரலாற்று நூல்களை வாசித்தபோது இந்த விடயம் ஞாபகம் வந்தது. அத்துடன் எனது பதிலையும் எழுதிவிடுகிறேன்.

"திருக்கோணமலை" என்பதை வலியுறுத்துபவர்கள் சொல்லும் காரணம் தமிழ் இலக்கணப்படி "திருக்கோணமலை" என்று புணர்ந்து தமிழ்த் தன்மையையுடன் காணப்பட்டது. அது காலப்போக்கில் தமிழ்த்தனமையை இழந்து ''திருகோணமலை'' ஆகிவிட்டது. தமிழ்களாகிய நாம் திருகோணமலையின் தமிழ் தன்மையை அடையாளப்படுத்த "திருக்கோணமலை" என்றே அழைக்க வேண்டும், திருகோணமலை என்பது தமிழ்த்தன்மைக்கு விரோதமானது என்பதே. மேலும் திருகோணமலையின் அடையாளமும் சிறப்பும் "திருக்கோணேஸ்வரம்" தான் ஆகவே கோணேசப் பெருமானின் தெய்வீகத் தன்மையைச் சேர்த்து திருகோணமலையின் சைவ/இந்து பாரம்பரியத்தையும் உறுதிப்படுத்த "திருக்கோணமலை" என்பதே ஏற்புடையது என்பதே.


"திருகோணமலை" என்பதை நாம் வலியுறுத்துவதற்குக் காரணம் வரலாற்று ரீதியானது. திருகோணமலையின் வரலாற்று தன்மை மறையாமல் காப்பது. மூவின மக்களும வாழும் திருகோணமலையின் தன்மையை அப்படியே ஏற்றுக் கொள்வது. என்பதாக அமையும். இதற்கு நாம் வரலாற்றுக் காலங்களில் திருகோணமலை எவ்வாறு அழைக்கப்பட்டு வ்நதிருக்கிறது என்று பார்ப்பது பயனுடையதாக அமையும்.

திருக்கோணமலையை வலியுறுத்துபவர்கள் பிழையான வரலாற்றுத் தகவல்களை குறிப்பிடுகின்றார்கள் அவை வருமாறு

10,11 ஆம் நூற்றாண்டு சோழர்காலக் கல்வெட்டுக்கள்.

15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழில் “விலைக்கு மேனியில்” என ஆரம்பிக்கும் திருப்புகழில் “திருக்கோணாமலை தலத்தாரு கோபுர” என்றும், “தொடுத்த வாளென” என்று ஆரம்பிக்கும் திருப்புகழில் “திருக்கோணாமலை தருக்குலாவிய” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மொழி மொழிபெயர்ப்புக்கள் :-
ஆங்கிலத்தில் Trincomalee. “c” க்குப் பதிலாக “h” வந்திருக்க வேண்டும்.
சிங்களத்தில் "திருகுணாமலய". "கு" க்குப் பதிலாக "கோ" வந்திருக்க வேண்டும்.

கோணேசர் கல்வெட்டில் “திருக்கோணமலை” என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. (குளக்கோட்டன் காலம் சர்ச்சைக்குரியது.ஆகவே இது 11 அல்லது 13 ஆம் நூற்றாண்டுக்குரியது).
1889 இல் ஸ்ரீமான் வே.அகிலேசப்பிள்ளை அவர்கள் எழுதிய “திருக்கோணாசல வைபவம். ஆகியவை ஆகும்.

வரலாற்றில் திருகோணமலை எவ்வாறு அழைக்கப்பட்டது என்பது பற்றிய முதலாவது தகவல் மகாசேனன் காலத்தில்தான் கிடைக்கிறது.  மகாவம்சம் மகாசேனவின் ஆட்சிக்காலத்தில் மகாயன பௌத்தத்திற்கு ஆதரவாக ஏனைய மதங்களுக்கெதிராக அவன் மேற்கொண்ட  நடவடிக்கைகளில் அவனால் இடிக்கப்பட்ட விகாரைகளினுள் "கோகர்ணப் பிராமண விகாரை"யும் ஒன்று என்றுகூறுகிறது.மகாவம்சத்தின் உரை நூலான "மஹாவங்சதீக" இது பற்றிய தெளிவான குறிப்புக்களை தருகிறது. இது கோணேஸ்வரமே என்பதை வராலற்றியலாளர் கலாநிதி.செல்லத்துரை குணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.1

மகாசேனன் ஆட்சிக்காலம் கி.பி 3ம் (275-301)நூற்றாண்டு. எனவே அக்காலத்தில் கோகர்ணம் என்பதே திருகோமலையின் பெயராக இருந்திருக்கிறது. இதையே மகாவம்சம் "கோகண்ண" எனக் குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள திருக்கோகர்ணம் என்ற சிவதலத்திலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்பது செ.குணசிங்கம் குறிப்பிடுகிறார்.2

அடுத்த குறிப்பு  'வாயுபுராணத்தில்' வருகின்ற குறிப்பில் திருகோணமலை 'கோகர்ணம்' என்றே குறிப்பிடப்படுகிறது.
 "இந்தத் தீவின் கிழக்குக் கரையில் கோகர்ணம் எனப்பெயர்கொண்ட சங்கரருக்கான பெரிய கோவில் ஒன்று இருக்கின்றது" 3. இதில் குறிப்பிடப்படும் "கோகர்ணம்" கோணேஸ்வரமே. வாயுபுராணம் அதன் இறுதிவடிவத்தை அடைந்தது கி.பி 4ம் நூற்றாண்டு அல்லது கி.பி5ம் நூற்றாண்டு.3 "சூளவம்சத்தில்" உள்ள ஒரு கதையில்க்கூட திருக்கோணமலைப் பிரதேசம் "கோகர்ணம்" என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.4

ஆக கி.பி 5ம் நூற்றாண்டுவரை திருகோணமலையும் கோணேஸ்வரமும் 'கோகர்ணம்" என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.


இதற்கு அடுத்ததாகத்தான் மிகப்பிரபலமான திருஞானசம்பந்தருடைய தேவாரம் கோணேஸ்வரத்தின் மீது பாடப்படுகிறது. அதிலே அவர் கோணேஸ்வரத்தை "கோணமாமலை" என்றே குறிப்பிடுகிறார். திருஞான சம்பந்தரின் காலம் கி.பி 7ம் நூற்றாண்டு. எனவே கொணேஸ்வரத்தின் பெயர் கி.பி 5ம் நூற்றாண்டிற்கும் கி.பி 7ம் நூற்றாண்டிற்கும் இடையில் "கோணமாமலை" என்று வழங்கத் தொடங்கியிருக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தின் பத்து பாடல்களிலும் "கோணமாமலை" என்றே குறிப்பிடப்படுகிறது.கோணமலை என்ற அல்ல.5 ஏனெனில் அவர் துளுவ நாட்டிலுள்ள திருக்கோகர்ணத்தை "கோகர்ணம்" என்றே குறிப்பிடுகிறார்.6

கி.பி. 7ம் நூற்றாண்டுவரை திருகோணமலையின் பெயரில் "திரு" ஒட்டவில்லை. தமிழகத்தில் எழுச்சி பெற்ற சைவ,வைணவ பக்தி இயக்கங்களின் செல்வாக்கினால் தோவரங்களிலும், திவ்விய பிரபந்தத்திலும் பாடல்பெற்ற சைவ, வைணவத் தலங்களுடன் அவற்றின் புனிதத் தன்மையைக் குறிக்க 'திரு"சேர்த்துக் கொள்ளப்படத் தொடங்கியிருக்கலாம். இதுவரையான சான்றுகளின் படி திருகொணமலையின் பெயர் திருக்கோணேஸ்வரத்தை மையப்படுத்திய அமைந்துள்ளதை கவனிக்க.

இதற்கு அடுத்ததாக கிடைக்கும் சான்றுகள் மிகமுக்கியமானவை. ஏனைய சான்றுகளைப் போல அல்லாமல் இச்சான்றுகள் வலுவானவை. ஏனெனில் அவை கல்வெட்டுச் சான்றுகளாகும். தவிர கோணேசர் ஆலயத்தையும் அதுஅமைந்துள்ள ஊரையும் தனிதனியாகக் குறிப்பிடும் முதல் வரலாற்றுச் சான்றுகளாக இவைஉள்ளன. திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட மானாங்கேணிக் கல்வெட்டும், நிலாவெளிக்கல்வெட்டுமே அவை. இவை இரண்டம் சோழராட்சிக்குரியவை. இவை தொடர்பில் காலநிதி.செ.குணசிங்கம் அவர்களும் பேராசிரியர்.சி.பத்மநாதன் அவர்களும் விரிவான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.


மனாங்கேணிக் கல்வெட்டு கி.பி 11ம் நூற்றாண்டில் சோழரின் பிரதிநதியாக இலங்கையில் ஆட்சி செலுத்திய "சோழஇலங்கேஸ்வரனுடையது ஆகும் சோழஇலங்கேஸ்வரன் 1023 ல் பட்டமேறினான் என்பதை பேராசிரியர் சி.பத்மநாதன் மிக்கபுலமையுடன் சான்றுப்படுத்தியுள்ளார்.7 ஆக இக்கல்வெட்டு 11ம் நூற்றாண்டுக்குரியதாகும். பெரும்பாலும் சிதிலமடைந்த இக்கல்வெட்டை கலாநிதி செ.குணசிங்கம் பிரதியெடுத்து வாசித்துள்ளார். இதனை ஒட்டி பேராசிரியர்.சி.பத்மநாதனும் "இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்" என்ற நூலில் இக்கல்வெட்டு தொடர்பான விரிவானக குறிப்புக்களை வழங்கியுள்ளார்.8 திருகோணமலை வரலாற்றாளர் கலாநிதி.க.சரவணபவனும் தமது 'வரலாற்றுத் திருகோணமலை"  நூலில் இதுபற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.9

செ.குணசிங்கம் அவர்கள் வாசித்த அக்கல்வெட்டின் வாசகம் வருமாறு க.சரவணபவன் தனது வரலாற்று திருகோணமலை நூலில் குறிப்பிட்டுள்ளார். (அடிக்குறிப்பில் செ.குணசிங்கம் அவர்களது கட்டுரை குறிக்கப்பட்டுள்ள)

.......ஸ்ரீ சோழ இல............
..தேவற்கு யாண்..............
....டி சொழ மண்டெ.........
...ந்த்ர சோழ வள....
.....சோழ வளநா.......
...மலை ஸ்ரீ மச்சு.......
....மூலஸ்த்தானமு........
....வர முடையார்...
...ள மண்டலத்தி..........

சிதைந்த எழுத்துக்கள் இட்டு நிரப்பி திருத்தி எழுதப்பட்ட வாசகம்

ரான உடையார் ஸ்ரீ சோழ இலங்கேஸ்
வரதேவற்கு யாண்டெட்டாவது
மும்முடி சோழ மண்டலத்து
இராஜேந்திர சோழவளநாட்டு கோண
மாமலை ஸ்ரீ மச்சுகேஸ்வரம்
ரமுடையார் மூலஸ்த்தானமும்
ஸ்வரமுடையார் கோயிலும்
சோழ மண்டலத்து இராஜே
ந்த்ரசிங்க வளநாட்டு இன்னம்
பர் நாட்டு
வேளான் கணபதி. 

மேற்குறித்த வாசங்களை பேராசியர்.சி.பத்மநாதனும் உறுதிப்படுத்தியுள்ளார்.10 ஆயினும் வாசகத்தின் 6வது வரியில் வரும் "மலை மச்சு(கேஸ்வர)" என்பது கோணேசர் கோயிலைக் குறிக்கிறது. மச்சகேஸ்வரம் கோணேசர் கொயிலின் பெயர்களில் ஒன்று.இத தொடர்பான விளக்கம் தட்சின கைலா புராணத்தின் மச்சாவதாரச் சருக்கத்தில் காணப்படுகிறதாக குறிப்பிடப்படப்படகிறது.11 இக்கல்வெட்டில் "மலை" என்பது கொணேசர் கோவில் இருக்கும் திருகோணமலையைக் குறிக்கிறது. "மச்சகேஸ்வரம்" எனபதே கொணேசர் கோவிலைக் குறிக்கிறது.

"மலை" என்பதற்கு முன்னால் உள்ள எழுத்துக்கள் சிதைவடைந்த படியால் அதை செஇகுணசிங்கம் அவர்கள் "கோணமாமலை" என்றும் சி.பத்மநாதன் அவர்கள் "திருகோண மலை" யென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டின் வரலாற்று பொருள் ஒ்னறு என்பதால் அதுபற்றி அவர்கள் பெரிதும் கவனிக்கவில்லை. "மலை" என்பது மட்டுமெ தெளிவாக உள்ளதால் கோணமாமலையா? திருகோணமலையா? திருக்கோணமலையா? என்ற பெயர் தொடர்பில் இது நமக்கு வழிகாட்டாது. ஆயினும் கோணெசர் கோவிலின்றும் திருகோணமலையை தனித்து குறிப்பிடப்பட்டுள்ளத என்பதை அறியமுடியும்.

அடுத்து சான்று நிலாவெளிக் கல்வெட்டாகும். திருகோணமலை திருக்கோணமலை பற்றிய விவாதத்தில் மிகமுக்கியமான சான்றாக இது அமைகிறது. நிலாவெளி பிள்ளையார் கோயில் கிணற்றின் படிக்கட்டாக அமைந்துள்ள இக்கல்வெட்டையும் நான் முன்பு குறிப்பிட்ட வரலாற்றறிஞர்கள் வாசித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். இச்சாசனத்தை காலநிதி.செ.குணசிங்கம் 11ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திற்குரியதாகவும் கலாநிதி.கா.இந்திரபாலா 10ம் நூற்றாண்டிற்குரியதாகவும் கொள்கின்றனர்12. பேராசிரியர்.சி.பத்மநாதனும் இக்கல்வெட்டு 10ம் 11ம் நூற்றாண்டிற்குரியது என்கிறார்13.

பேராசிரியர்.சி.பத்மநாதன் இக்கல்வெட்டின் வாசகத்தை "இலங்கைத் தமிழ் சாசனங்கள்" என்ற நூலில் 406ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ் (வஸ்தி ஸ்ரீ)...
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

கலாநிதி செ.குணசிங்கம் அவர்களது வாசிப்பின் சாரத்தை கலாநிதி.க.சரவணபவன் "வரலாற்றுத் திருகோணமலை" நூலில் 125ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மச்ச கேஸ்வரமுடைய மகாதேவர்க்கு நிச்சலழி
வுக்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம, கிரி
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும்
தேவாலயமும் மேனோக்கின் மரமும்
 கீழ் நோக்கின் கிணறும் உட்பட
 இந்நிலத்துக் கெல்லை தெற்கெல்லை
கல்லு குடக்கு எத்தகம்பே எல்லை
வடக்கெல்லை சூலக்கல்லாகும் சுடர் கோணமாமலை தனில்
நீலகண்டருக்குரிய நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையில் அகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பன்மயே
சுரரட்ஸ


செ.குணசிங்கத்தின் வாசிப்பாக க.சரவணபவனின் நூலிலுள்ள பந்தியில் சி.பத்மநாதன் வாசிப்பில் உள்ள சில வரிகள விடப்பட்டுள்ளன. ஆயினும் அவை நம்முடைய பேசுபொருளுக்கு சமப்ந்தமில்லாதவை எனவே நமக்கு ஒத்திசைவானவற்றைப் பற்றி பார்ப்போம்.

இக்கல்வெட்டின் விளக்க வாசகம் வருமாறு

'கிழக்கே கடல், மேற்கே எட்டம்பே, வடக்கே சூலம் பொறிக்கப்பட்ட எல்லைக் கல், தெற்கே எல்லைக்கல் என்பன எல்லையாகக் கொண்ட உரகிரிகாமம், கிரிகண்டகாமத்து பாசன நிலமும், வானம் பார்த்த நிலமும் அது உள்ளடக்கியுள்ள தேவாலயமும், மரங்களும், கிணறுகளும் திருகோணமலையிலுள்ள மச்சகேஸ்வரத்து மகேஸ்வரருடைய தினப் பூசைச் செலவுக்காக சூரியனும் சந்திரணும் உள்ளவரை நிலதானம் செய்யப்படகின்றது. நான்கு எல்லைகளுக்குள் அடங்கிய இந்த இருநூற்றி ஐம்பது வேலி நிலமும் கோணமமாமலையில் வீற்றிருக்கும் நீல கண்டத்தை உடைய சிவனுக்குரியதாகும். இந்த நிலதானம் திருக்கோணேஸ்வரத்து அறங்காவலர்களான சிவனடியார்கள் குழுவின் பாதுகாப்பில் இருக்கும்.'14

செ.குணசிங்கம், சிஇபத்மநாதன் ஆகிய இருவரதும் வாசிப்பில் "திருகோணமலை மச்சகேஸ்வரமுடைய" என்ற வரி தெளிவாக உள்ளது. "திருகோணமலை" "கோணமாமலை" என்ற பெயர்கள் இக்கல்வெட்டில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருப்பதை இரு அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.15

கவனிக்க 'திருக்கோணமலை' அல்ல "திருகோணமலை என்றே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருகோணமலை மச்சகேஸ்வரம் எனக்குறிப்பிடப்படுவதனால் 'திருகோணமலை" என்பது கோணேசர் கோயிலை குறிக்காமல் அது அமைந்துள்ள ஊரைக்குறிக்கிறது. கோணேசர் கோயில் 'மச்சசேஸ்வரம்' எனக்குறிப்பிடப்படுகின்றது. அதே போல் "கோணமாமலை தனில் நீலகண்டர்க்கு" என்ற வரிமூலம் 'மச்சகேஸ்வரம்' அமைந்ததுள்ள மலையின் பெயர் கோணமாமலை எனப்பட்டதை அறியலாம். 7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரும் "கோணமாமலை அமர்ந்தாரே" என்று திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ளது கோணமாமலை என்பதை குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து 7ம் நூற்றாண்டில் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள இடத்தின் பெயர் மாறாமலே 11ம் நூற்றாண்டிலும் இருந்துள்ளதை அறியலாம்.

இக்கல்வெட்டின் மூலம் திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்துடன் மையப்படுத்தாமல் ஊராக அடையாளப்படுத்தப்படவதையும், "திரு" என்ற பகுதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் அறியலாம். ஆகவே கோணமலையுடன் "திரு" என்ற பகுதி 11ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு முன்னரேயே கோணமலையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். அப்போதே திருவுக்கும் கோணமலைக்கும் இடையில் "க்" இல்லாமல் இருப்பதையும் கவனிக்கலாம்.

திருக்கோணேஸ்வரத்தை மையப்படுத்தாமல் ஒரு ஊராக அல்லது மக்கள் வாழிடமாக திருகோணமலையை குறிக்கும்போது "திருகோணமலை" என்றே குறிப்பிடப்படுகிறது. இதே 10ம் 11ம் நூற்றாண்டுகளில் திருகோணமலையில் தமிழ் பௌத்தர்களும் செல்வாக்குடன் வாழந்திருக்கிறார்கள் இதை இராசஇராசப் பெரும்பள்ளியும் அதில் கண்டெடுக்கப்பட்ட, அதைப்பறி குறிப்பிடுகின்ற சோழராட்சிகால கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். எனவே அப்போது திருகோணமலை திருக்கோணேஸ்வரத்துடன் அடையாளப்படுத்தப்படவில்லை. 'திருகோணமலை' என்ற பெயர் இதில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் பிரதிநிதிப் படுத்துகின்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. 'திருகோணமலை" என்பத ஒற்றை அடையாளத்தை ஒரு மத இன மேலாதிக்கத்தை மறுதலிப்பதாக அமைந்திருக்கிறது. இது மிகவும் முக்கியமானது.

ஆயினும் போர்த்துகேயருடைய காலம்வரை கோணேசர் கோயிலும் அது அமைந்திருந்த கோணமாமலையில் இருந்த சைவ சமூகமே திருகோணமலையின் முக்கியத்துவம் மிக்கதும் பெருநிதிக்குவியமாகவும் செல்வாக்குமிக்கதாகவும் விளங்கியது.

 தமிழக்கத்தில் எழுச்சிபெற்ற 2ம் பாண்டிய பேரரசு காலத்தில் அதனை உருவாக்கிய முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் திரகொணமலை மலைவரை படையெடுத்தவந்தான். இப்படையெடுப்பை முதலாம் ஜடாவர்மனோடு துணையாட்சி செய்த ஜடாவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253 -1281)இலங்கைமீது படையெடுத்து தனது வெற்றியைக் குறிப்பதற்காக தனது வம்ச  இலட்சினையான இரட்டைக் கயல் அடையாளத்தை திருகோணமலையில் பொறித்து சென்றான். இது பற்றி தமிழக்த்தில் உள்ள அவனது பதினொராம் ஆட்சியாண்டக்குரிய குடுமியாமலைச் சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது

அரைசு கெழுதாயம் அடையவாரி
கானா மன்னவர் கண்டு கண்டேங்க
கோணமாமலையிலும் திரிகூடக்கிரியிலும்
உருகெழு கொடிமிசை இருகயலெழுதி
எனை வெந்தனை ஆணை கொண்டு 16

இன்று திருகோணமலை பிரெடரிக் கோட்டை வாயிலின் இரு மருங்கிலும் உள்ள இரட்டைக் கயல் சின்னங்கள் இவனுடையதே என்று நம்பப்படுகிறது. இதிலும் திருகோமணலை என்ற குறிப்பிடாது கோணமாமலை என்று திருக்கோணேஸ்வரம் அமை்நத மலையின் பெயரே குறிப்பிடப்படுகிறது. அது நான் முன்குறிப்பிட்ட மாதிரி திருகோணமலையின் மையப்பகுதி கோணமாமலையாக இரந்தபடியாற்தான். இது திருக்கோணேஸ்வரம் எவ்வளவு செல்வாக்காகவும் நிதிக்குவியமாகவும் விளங்கியது என்பதை உணர்த்த போதுமானதாகும். ஆனால் இதில் "திரு'' என்ற அடைமொழி காணப்படவில்லை. கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள கோணமாமலைப் பகுதியைப்பற்றியயெ இது குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்.

திருகோணமலையில் 'திரு'வுக்கும் கோணமலைக்கு இடையில் "க்"  சேர்த்தபடி கிடைக்கும் சான்று அருணகிரிநாதருடைய 'விலைக்கு மேனியர்" என்ற திருப்புகழில் வரும்

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே

என்ற அடிகளே. இதன் பொருள்வருமாறு "என்றுமே நிலைத்து நிற்கின்ற நான்மறைகளை அன்புடன் ஓதிவரும் பெருமைமிகு அந்தணர்கள் வாழுகின்ற திருக்கொணாமலை என்கின்ற திருத்தலத்தில் ஓங்கிநிற்கும் கோபுர வாயிலினுள் அமைந்திருக்கும்
'கிளிப்பாடுபூதி' என்னும் நிலையினுள் எழுந்தருளி இருப்போனே!" என்றாகும்.

அருணகிரிநாதர் திருப்புகழில் "திருக்கோணமலை" என்றில்லை. "திருக்கொணாமலை" என்றுதான் உள்ளது. திருக்கோணமலைக்காரர் குறிக்கும் அடுத்த திருப்புகழ்

"தொடுத்த வாளென விழித்து மார்முலை" என்பதாகும் இதில்வரும்

அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
 டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.

என்ற வரிகளே அவைகள். இதன் பொருள் வருமாறு ''அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார் மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும் அருக்கொணாமலை என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய பெருமாளே."

இதில் குறிப்பிடப்பவது அருட்கொணாமலை என்ற வரிகளே ''திருக்கொணாமலை" என்ற வரிகள்கூட இல்லை. இந்த அருட்கொணா மலை கதிர்காமத்திற்கு அருகில் உள்ள ஊர் என்று நம்பப்படுகிறது.17

இதன்படிக்கு அருணகிரிநாதர் திருகோணமலையை அல்லாமல் கோணமாமலையில் உள்ள கோணேஸ்வரத்தின் கொபுரத்தில் உள்ள முருகனைக் குறிக்கின்றார் என்பதுதான் ஏற்புடையது. எனினும் இத்திருப்புகழ் திருக்கோணேஸ்வரத்தின் மீது பாடப்பட்டதாக உறுதிப்படுத்தபடுத்தமுடியவில்லை. திருப்புகழிலில் வேறு எவ்விடத்திலும் இத்தலம் பற்றியோ இப்பெயர் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. தவிர அதில் "திருக்கோணமலை" என்றில்லை "திருக்கொணாமலை" என்றுதான் இருக்கிறது. கி.பி 7ம் நூற்றாண்டிலும் கி.பி 13ம் நூற்றாண்டிலும் கோணேஸ்வரம் அமைந்துள்ள இடத்தின் பெயர் "கோணமாமலை" என்றிருப்பதை சான்றுகளோடு மேலே காட்டினோம். அருணகிரி நாதர் கி.பி.15ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனவே அவர் கோணமாமலையில் இருந்த கோயில் பற்றி அறிந்திருந்தவராக இருந்திருக்கலாம் என்பது ஏற்புடையதன்று. திருப்புகழின் சந்த்திற்கு அமைவாக அவர் "கோணமாமலை" 'கொணாமலை" எனக்குறிப்பிடுகின்றார். பகத்தியியக்கத்தன் மரபின் படி தலங்களை "திரு" எனும் புனித பகுதியோடு சேர்த்து குறிப்பிட விரும்பியிருக்கிறார். அதன்போது ச்நதத்திற்கு அமைவாக "திருக்கொணாமலை" எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் எற்புடையது. ஏனெனில் கோணேஸ்வரத்தைக் குறிக்கும் 7ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட எல்லாச் சான்றுகளும் கோணமாமலை என்றே குறிக்கின்றன. இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.


மேற்சொன்ன சான்றுகளின் படி "திருகோணமலை" என்ற பெயர் ஏற்த்தாழ 1000 ஆண்டுகால பழமையானது. 1000 வருடம் வரலாற்றில் வாழந்த பெயராக இருக்கிறது. இந்த ஊரின், இந்த மக்களின் தனித்துவத்தையும் சகிப்புத்னமையையும் சொல்கின்ற பெயராக இருக்கின்றது. அதை தனியே இந்துத் தமிழுடன் நெருக்கமாக்குவதற்காக திருக்கோணமலை ஆக்குவது நியாயமற்றது. ஒரு சாராரின் சுயநலத்தின் பாற்பட்டது. 'திருக்கோணமலை" என்றழைக்கபடவும் எழுதப்படவும் தொடங்கி ஒரு நூறு வருடம் இருக்குமா அதை அழுத்தமாக வலழயுறத்தத் தொடங்கி 50 ஆண்டுகள்தான் இருக்கும் வெறும் 50 ஆண்டுகால பழக்கத்திற்காகவும் ஒருசாராரின் நன்மையை மட்டும் கருத்தில்க் கொண்டு 900ம் வருடமாக நாம் பெருமையாக வாழ்ந்த வாழ்க்கைத்தன்மையை அழிக்கிறீர்கள். எமது வரலாற்றுப் பெருமையையும் சகிப்புணர்வுடைய வாழ்வையும் மறைக்கிறீர்கள்.

தவிர இன்று திருகோணமலையும் போய் திருக்கோணமலையும் போய் 'திருக்கோணமலைய' என்றாகிக்கொண்டு வருகின்றது. அதைக் காப்பாற்றுவதற்கு முடியாமலுள்ளது. 'திருக்கோணமலை' எனபது உச்சரிப்பிலும், அதன் உருவாக்கத்தின் அடிப்படைத் தன்மையிலும் "திருக்கொணாமலைய"வுக்கு மிக நெருக்கமாக அமைந்து உதவிசெய்கிறது எனபதை பகுத்தறிவுள்ள எவரும் உணர்ந்துகொள்ள முடியம்.இவற்றைத் தடுப்படுதற்கும் எமது வரலாற்று பெருமையும் சகிப்புணர்வுள்ள வாழ்வியலையும் தக்கவைத்துக் கொள்ள நாம் திருகோணமலையை "திருகோணமலை" என்று அழுத்திச் சொல்வதே உதவிசெய்யும். திருகோணமலை வரலாற்றை பரந்த தேடலுடன் நுட்பமாக எழுதியுள்ள கலாநிதி க.சரவணபவன் திருகோணமலையின் வரலாற்றைக் கூறும் தனது இரு நூல்களின் பெயர்களையும் "வரலாற்று திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை" என்று "திருகோணமலை" என்ற பெயரைக் குறித்துள்ளமை அறியாமையினால் அல்ல.

வரலாற்றில் திருக்கோணமலை இருக்கவில்லை; திருகோணமலையே இருந்தது. திருகோணமலையில் ஒருசார்பு இருக்கவில்லை சகிப்புத்தன்மையே இருந்தது.


அடிக்குறிப்புக்கள்



1. குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.12., பக்.37-38.
2.மே.கு.நூல். பக்.61-62.
3. மே.கு.நூல். பக்.55-63
4.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.68-69.
5.திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம்,2003, பக்.560-562
6.மே.கு.நூல், பக்.723-725.
7.பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.98.
8.மே.கு.நூல், பக்.101-103
9.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.123-124.
10.பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.407
11. மே.கு.நூல், பக்.103.
12.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.126-127
13. பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.105.
14.சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.125-126
15. பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு,2006, பக்.106.
16.குணசிங்கம்.செ,கோணேஸ்வரம்,பேராதனைப் பல்கலைக்கழகம், 1973, பக்.113- 114 , <<சரவணபவன்.க,வரலாற்றுத் திருகோணமலை,திருகோணமலை வெளியீட்டார்கள்,2003,பக்.180-1181
17 இந்த இணைப்பில் உள்ளது http://www.kaumaram.com/thiru_uni/tpun0649.html