Monday, July 16, 2012

பேரன் தந்தையூடாகத் தொடர்ந்து வரும் மரபும் யாவும், கற்பனையும்.


யாழ்ப்பாணத்தில் பிரதேச பத்திரிகைகளாக வந்துகொண்டிருக்கும் மரண அறிவித்தல் மற்றும் கிசுகிசு பாணி பத்திரிகைகளை மிகுந்த சகிப்புத்தன்மையுடன் வாசித்தபடி கழிந்துகொண்டிருக்கின்ற பெரும்பாலான காலைப் பொழுதுகள்… இன்று சகிப்புதன்மை எல்லைக்குச் சென்று பரதேசிப் பத்திரிகைகளை தூக்கி எறிந்து விட்டு வேறு ஏதும் வாசிக்க கிடைக்குமா என்று தேடியபோது எதேச்சையாக 12 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த (2000) ‘கரைதேடும் அலைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. யாழ்/ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் தமிழ் மன்ற வெளியீடாக இது இருந்தபடியால் அதை வாசிக்கலானேன். அக்கல்லூரியின் பழையமாணவியாகிய ‘ஆரபி சிவஞானராஜா’ அவர்களின் 7 கதைகளை அது உள்ளடக்கி இருந்தது.
 எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்களின் எழுத்துக்களை விட புதிதாக எழுதுகின்றவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன் நான் என்பதால் அத்தொகுதியை ஒரே மூச்சில் வாசித்தேன். கதைகளின் சொல்லுமுறை மற்றும் அழகியல் இன்னோரன்ன  விமர்சனப் புண்ணாக்கும் விடயங்களை நான் மாணவப்பருவ அல்லது அறிமுக தொகுதிகளில் தேடுவதில்லை. என்னைப் பொறுத்தவரையிலும் எல்லாருடைய அனுபவமும் அவை எழுதப்பட்ட எழுத்தும் முக்கியமானவையே.. இரண்டு விடங்களை மட்டுமே நான் கருத்தில் கொள்வேன்.
1.அந்தப்படைப்பாளியின் சொந்தத்தன்மை (orginality) உள்ளதாக அந்தப்படைப்பு உள்ளதா ?
2. அறம் மற்றும் நீதித்தன்மைக்கு நெருக்கமா தாக அதன் உள்ளடக்கங்கள் உள்ளனவா? என்பவை மட்டுமே.
மாணவப்பருவத்துக்குரிய சிந்தனைகளுக்கு வெளியேயான தேடல்களுனுடனும் யாழ்ப்பாண சமூகத்தில் ஆரபி உடன்பாடாத வழங்கங்களை வெளிப்படுத்துவதாக இந்தத் தொகுதி அமைகிறது.  சீதன வக்கிரம், தாய்தந்தையரின் அரவணைப்பு அற்ற குழந்தையின் மனநிலை,  பிள்ளைகளை அதீதமாகக் கட்டுப்படுத்தும் பெற்றோரால் பிள்ளைகள் எதிர் கொள்ளும் பிரச்சினை, வெளிநாட்டு பணம் சமூகத்தில் ஏற்படுத்தும் மாறுதல்கள், எயிட் நோய் பற்றிய விழிப்புணர்வு என அக்காலகட்டத்தினதும், மாணவப்பரவங்களின் சமூக அக்கறைக்குரிய விடயங்களையும் முன்னிறுத்தி கட்டிறுக்கமான கதைகளாக இத்தொகுதியின் கதைகள் அமைகின்றன.
மாணவப்பருவத்தில் அகில இலங்கைரிதியான நடத்தப்படும்  சிறுகதைப் போட்டியில் இருதடவை முதற் பரிசினைப் பெற்றுள்ள ‘ஆரபி சிவனாராஜா’ பரிசு பெற்றுக்கொண்டதற்கான தகுதியை இத்தொகுதியின் மூலம்நிரூபித்துள்ளார். ஆயினும் ஆரபி சிவஞானராஜா இத்தொகுதியின் பின் தொடர்ந்தும் எழுதினாரான இப்போதும் எழுதகிறாரா என்ற விடங்கள் தெரியவில்லை. மாணவ்பருவங்களில் படைப்பாளுமைமிக்கவர்களாகத் திகழும் பெண்கள் அதன்பின்பு படைப்புகளில் இடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லாத சமூக அமைவு காரணமாக மாணவப்பரவத்துடன் தமது படைப்பாற்றலை நிறுத்தி கொள்வது வழமையாகத்தான் உள்ளது. இதனுள் ஆரபியும் உட்கொள்ளப்பட்டராக இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
ஆரபியின் கதைகளை விட இத்தொகுதியில் முக்கியமாகப்பட்டவை வேறு இரண்டு விடயங்கள்.
முதலாவது, இத்தொகுதிக்கு வந்துள்ள முன்னுரை, அணிந்துரை, ஆசியுரை, பின்அட்டைக்குறிப்பு போன்ற சடங்குரைகளில் வெளிப்பட்ட ஆணாதிக்க சார்பும் ஆரபி என்னுரையில் சொல்லியுள்ள இவற்றிற்கு மாறான உண்மையும் ஆகும்.
இத்தொகுதியில் ஆரபியின் ஆசிரியர்கள் மற்றும் மதிப்புக்குரியவர்களினால் எழுதப்பட்ட சடங்குரைகள் அனைத்திலும் ஆரபியின் படைப்பாற்றல் பேரன் மற்றும் தந்தை வழியே மரபாக வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக  இந்நூலின்பின்னட்டையில் ஆரபியை அறிமுக்ப்படுத்தும் முகமாக ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் தமிழ்மன்ற பொறுப்பாசிரியர் கவிஞர். மஇபாஇ மகாலிங்கம் எழுதியள்ள குறிப்பு இவ்வாறு உள்ளது.
 “சமூகத்தின் முரண்பாடுகளுக்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கும் எதிரான ஆவேசம்…..
பிறரால் கைவிடப்பட்ட அல்லது அலட்சியப்படுத்தப்பட்ட ஜீவன்களிடம் கருணை சொரியும் மனிதாபிமானம்…..
விஞ்ஞானத்துறைக் கல்வியினூடு பெற்றுக் கொண்ட உளவியல் ரீதியான அணுகுமுறை…..
தான்காணும் உலகின் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் கூர்ந்து நோக்கும் கலைத்துவம் செறிந்த பார்வை…….
 இவை அனைத்தும் கலந்த தொகுப்புத்தான்
கரைதேடும் அலைகள்
என்று ஆரபியின் படைப்பு ஆளுமையை மெச்சும் அக்குறிப்பு இறுதியாக இவ்வாறு முடிக்கிறது.
சின்ன வயதில் கன்னி முயற்சி எனினும் கலைத்திறன் வயதையும் மீறியது. பேரன், தந்தையினூடாக தொடர்ந்து வரும் கலைமரபு இதற்கு காரணமாக இருக்கலாம்.
என்னு ஆரபியின் படைப்பு மற்றும் கலைத்திறனுக்கு பெரன் தந்தை என்ற ஆண்வழி மரபைக் காரணமாக்கி படைப்பு என்பதே ஆண்களுக்கானது என்ற ஆணாதிக்க சிந்தனை மரபை அப்படியே முன்மொழிகறது.
ஆனால் தனது கதைக்கான ஊற்றுக்களை என்னுரையில் ஆரபி இப்படிச் சொல்கிறார்.
“என் தளிர்ப் பருவத்திலிருந்தே கதைகள் சொல்லி என் ஆர்வத்தை தூண்டிய, தெய்வமாகிவிட்ட அப்பம்மாவிற்கும், ‘கரைதேடும் அலைகள்’ வெளிவர உந்துதலாயிருந்த என் அப்பப்பாவிற்கும் எந்நாளும் என் வணக்கங்கள்”
திட்டமிட்டு ஆரபி இதைச் சொன்னாரா என்பது தெரியாது ஆயினும் தன் கதைகளுக்கான ஊற்று பேரனோ, தந்தையோ அல்ல பேத்தியாகிய அப்பம்மா என்பதை ஆரபி இதில் தெளிவாகச் சொல்லியுள்ளார். பெரும்பாலும் எல்லோருடைய மனங்களிலும் பதிந்துள்ள கதைகள் பற்றிய ஆர்வங்களுக்கு அம்மம்மாவே அல்லது அப்பம்மாவேதான் காரணமாக அமைகிறார்கள். ஆயினும் ஆணாதிக்க சிந்தனை இவற்றை ஏற்கவும் பார்க்கவும் மறுத்து படைப்பு என்பதை ஆண்மரபாக அப்பப்பாவின் அப்பாவின் மரபாக மட்டுமே எற்க விழைகிறது.

இரண்டாவது தான் வளர்ந்த கண்ட கேட்ட சமூக அறியாயங்கள் என்று தான் கருதியவற்றை மாற்றவேண்டும் என்ற  அக்கறையோடு எழுதப்பட்ட இக்கதைகள் பற்றி முக்கிய குறிப்பிலும் கதைகளின் கீழும்

“இக்கதைகளில் வரும் சம்பவங்கள், பாத்திரம் யாவும் கற்பனையே”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதில் சொல்லப்படுவை சமூக யாதர்த்தம் அல்ல அவை புனைவுகள் என்ற ஒரு அர்த்தப்பாட்டை இத்தொகுதிக்கு வழங்க முற்படுகிறது. இதன் மூலம் கதைகள், கவிதைகள் உட்பட எழுதப்படும் அனைத்துமே கற்பனைகள் என்ற என்னத்தை வளர்த்து இக்கதைகள் என்ன நோக்கத்திற்காக எழுதப்படுகின்றனவோ அவற்றை வாசிக்கும் மனங்களில் பதியவிடாது திசைதிருப்புகின்றது. சமூக அமைப்பு….  கவிதைக்கு பொய்யழகு என்பதுவும், கதைகள் யாவும் கற்பனையே என்பதை பள்ளிபருவத்திலிருந்து தொடர்ச்சியாகப் மனதில் பதிக்கப்படுவதால் தானே கவிதைகளாகும்ஈ கதைகளினாலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போகிறது போலும்