Wednesday, May 25, 2011

யுத்தத்தின் 5ம் அத்தியாயம்; அதிகாரத்தை எதிர் கொள்ளும் பெண்களும் ஆண்மையின் அழிவும் -1

'இங்கு இருப்பவைகளையும்
இன்று நடப்பவைகளையும்
அவர்களும் இவர்களுமே உருவாக்கினார்கள்.” - சம்பூர் வதனரூபன்

இன்றைய ஈழ சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இந்த குரல் கேட்கவாவது செய்யும். அந்த அடிப்படையில் அவர்களும் இவர்களும் உருவாக்கி தந்த இன்றைய நிலைகள் பற்றி நாம் சிந்திக்க, குறுக்கறுக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நோக்கிலேயே இந்த முயற்சியை முன்னெடுக்கிறேன். ‘யுத்தகாலத்தில் பெண்கள்’ என்ற விடயம் மிக பரந்த சொல்லாடல்; களத்தை கொண்டது. இதில் ஆண்நிலை நோக்கில் சிந்திக்க பழக்கப்பட்ட் ஆணாக இருக்கி
ன்ற நான் விரிவாகவும் ஆழமாகவும் என்ன கூறிவிடமுடியும். ஆயினும் இதுவரை யுத்தகாலத்தில் பெண்கள் என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட சொல்லாடல்களிலிருந்து சிறிய விலகலை கட்டுரை மூலம் செய்ய முயற்சிக்கின்றேன். மிகக்குறுகிய என்னுடைய அறிவின் எல்லைகளுடன் செய்யப்படும் ஒரு முயற்சி என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். இது பற்றிய எதிர்கள், எதிர்வினைகள், எதிர்வினையாற்றல்களை மிக விருப்போடு எதிர்பார்க்கிறேன்.

யுத்தகாலத்தில் பெண்கள் என்ற இந்த தொனிப் பொருளில் இதுவரை காலமும் பதிவு செய்யப்பட்டவை உரையாடலாக்கப்பட்டவை எல்லாம் பெண்கள் யுத்தத்தை எதிர்கொண்டதால் அடைந்த அநீதியான எண்ணங்களுக்கும், சொற்களுக்குள்ளும் அடங்காத அவலங்களை, வலிகளை மட்டும் பேசுவதாக, அல்லது அந்த அவலங்களை, வலிகளை அதீதமாக முன்னிறுத்தி அது மறுக்கின்ற மனிதம் பற்றிய சொல்லாடகளாகவே நிகழ்த்தப்பட்டள்ளன.

இது யுத்தத்தின் சமகால எதிர்கொள்ளலில் மிக அவசியமான, தவிர்க்கமுடியாத சமூக மற்றும் தேசியத்தின் தேவையாகவும் இருந்தது. அந்த வகையில் இந்த சொல்லாடகள் நிகழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட பிரஞ்ஞை மற்றும் பெண்ணிய இயங்கு தளத்தின் முன்நகர்வுகளையோ, போரின்போதான பெண் இருப்புக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய அவசியத்திற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை நாம் மறக்கவோ மறுதலிக்கவோ முடியாது. கூடாது. இதில் பெண்ணிய, பெண்நிலை சார்ந்து முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் (
movement ) அணிதிரட்டல்கள், தனி மற்றும் குழச்செயற்பாடுகள், போராட்டங்கள் முக்கியமான பங்கை ஆற்றின.

பால்நிலை ரீதியில் அதிலும் குறிப்பாக பெண்உடல் மீதான அதிகாரப் பயங்கரத்தை எதிர்நோக்கிய ஒடுக்குமுறைக்கு உள்ளான அல்லது விடுதலையை கோரிநின்ற ஈழத்தமிழ் சமூகத்தின் பெண்கள்; ‘பெண்உடல்’ என்ற ரீதியில் தனிhயாக எதிர்கொண்ட துயரங்களுக்கும் அவலங்களுக்கும் அப்பால் சமூகத்தளத்தில் தான் அதிக நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். சமூக உறவுக்குட்படுத்தப்பட்ட உறவுநிலைகள் மற்றும் சமூக சூழ்நிலைகள் எமது ஈழத் தமிழ் பெண்களின் மீது ஏற்படுத்திய அசுர நெருக்கடிகள் எண்ணளவிலும் பண்பளவிலும் அதிகமானது. ஆயினும் இதுவரை இவை அதனது முழுப்பரிமாணத்திலும் வெளிப்படுத்தவில்லை. ஒரளவு வெளிப்படுத்தப் பட்டவற்றிலும் தமிழரசியல் மயப்பட்ட சூழல், சமூக, தேசிய தேவைகளைக் சார்ந்தே செய்யப்பட்டன.

இன்னும் கவனமாகப் பார்த்தால் பொதுசனம் என்ற அழைக்கப்பட்ட ‘தூரகிராம சாதாரணப் பெண்கள்’ எதிர் கொண்ட இந்த அசுர நெருக்கடியானது; இறுக்கமானது என்று சொல்லப்பட்ட பழமைக்கூறுகள் கொண்ட எமது ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் விரிசல்களை அல்லது புதிய அணைவுகளை ஏற்படுத்தியதுடன், தற்போதைய சமூக உருவாக்கத்தில் முக்கிய பங்கையும் ஆற்றியுள்ளது என்பதை நாம் கவனிக்கவில்லை. இவை இதுவரையான உரையாடலுக்குள் சேர்த்துக் கொள்ளப்படவுமில்லை.ஆனால் இவற்றின் அதிர்வுகள் ஈழத்தழின் பெண்களின் வாழ்வுகளில் எல்லா இடங்களிலும் உணரப்பட்டிருக்கிறது என்ற வேதனையான உண்மையுடன் எமது சிந்தனைகளின் எல்லைகள் சாத்தியப்பாடுகள் பற்றி நாம் குறுக்கோட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

அவ்வாறு செய்யும் போது யுத்தம் பற்றிய பொதுவாக இருக்கும் நாசகார பேரவலங்கள் பற்றிய புரிதல்களோடு, எமக்கேயான அனுபவத்தில் யத்தத்தின் அசுர நெருக்கடி உருவாக்கிய முற்போக்கு அம்சங்கள், தள,இயங்குநிலை முன்நகர்வுகளை பற்றியும் எமது புதிய புரிதல்களை நாம் உருவாக்கவும் உருவாக்கியதை தக்கவைக்க வேண்டியதையும் நாம் செய்தாக வேண்டும்.

இந்தவகையில் பெண்ணிய இயங்கு தளங்களில் சாதாரண பெண்கள் தமது நிலையில் மாபெரும் அதிகாரங்களை எதிர்கொள்ள அதீதமாக நிர்பந்திக்கப்பட்டார்கள். அதேவேளை யுத்தம் கொண்டுவ்நத மாபெரும் அசுர நெருக்கடிகளால் அதுவரையிலும் சமூகத்தில் அதிகாரமாகவும், முன்னிலைப்பட்டும் இருந்த ‘ஆண்மை’ என்பது அழிக்கப்படலும் நிகழ்ந்தேறியது. ஆண்மை அழிப்பு என்பது பெண்ணிய இயங்குநிலை மிக நலன்சார்ந்த ஒன்று என்பது மறுதலளிக்க முடியாத ஒரு விடயமாகும். ஆனால் இது எமது ஈழத் தமிழ் சூழலில் பெண்ணிய, பெண்நிலை சார்ந்த இயக்கங்களாலோ (
movement ) அணிதிரட்டல்களாலோ, தனி மற்றும் குழுச்செயற்பாடுகள் போராட்டங்களாலோ சாத்தியமாகவில்லை.

இதை சாத்திய படுத்தியது யுத்தம் தமிழ் சமூகத்தின் மீது கொடுத்த அசுர நெருக்கடியால் உருவான அதீத துயரம் தோய்ந்த தாங்கொணா வலிகளும், அழுத்தங்களுமே. இந்த மாபெரும் அசுர நெருக்கடியை எதிர்கொள்ள ஆண்மை பின்வாங்கிய வேளை தூரகிராம சாதாரண பெண்களே இந்த அசுர நெருக்கடியை எதிர்கொள்ளவும் இந்த நெருக்கடிக்கு காரணமான அதிகார நிறுவனங்களை எதிர்கொள்ளவும் பலவந்தமாக நிர்பந்திக்கப்பட்டார்கள். அதிகாரத்தையும அசுரநெருக்கடியையும் தவிர்க்க முடியாத நிலையில் பலவந்தமாக எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட பெண்கள் அதனாலேயே சமூகத்தின் இயங்குதளத்தில் முன்னிலைக்கு தள்ளப்பட்டார்கள்

இந்த இடத்திலேயே நாம் யுத்தம் ஏற்படு;த்தியவை பற்றிய
புதிய புரிதலுக்குள் போக முயல்கிறோம்.