Thursday, October 25, 2018

இலங்கையின் தமிழ்ச் சூழலில் வரலாறு பற்றிய புரிதலும் வரலாற்று எழுத்துக்களும் - 01


மிகவும் பரிச்சயமானதும் எல்லோரும் பயன்படுத்துவதும் சரியாக விளங்கச் சிக்கலானதும் வரலாறுதான். வரலாறு தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் அறிந்த வரலாறும் வெவ்வேறானது. பொதுசனம் முதற் புலமையாளர்கள் வரை வரலாற்றை தம் வசதிக்கேற்பக் கட்டமைக்கிறார்கள். அது வரலாற்றை விளங்குவதைச் சிக்கலாக்குகிறது.

இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வை விளங்கிக் கொள்ளல் குறித்துக் கவனஞ் செலுத்தி; தமிழில் வெளிவந்த வரலாற்று எழுத்துக்கள் பற்றியும் அவ்வெழுத்துக்களினூடாகத் தமிழ்ச் சூழலில் வரலாறு குறித்து ஏற்பட்ட புரிதல்கள் குறித்த குறிப்பான ஆய்வுகள் மிகக்குறைவானவையே

தமிழில் வரலாற்று உணர்வு 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி கொள்கிறது. இலங்கையில் வரலாற்றுக் கல்வியும் வரலாறு பற்றிய அறிமுகமும் காலனியக் கல்வியினூடாகவே தொடங்குகின்றன. இக்கல்வியிற், காலனியப்பட்ட சமூகங்கள் வரலாறற்ற சமூகங்களாக்கப்பட்டுக், காலனியாதிக்க நலன் சார்ந்து, காலனியாதிக்க நாடுகளின் வரலாறுகளே வரலாறாகக் கற்பிக்கப்பட்டன.

காலனியவாதிகள் முன்வைத்தவரலாரற்ற சமூகம்என்பதை ஏற்க மறுத்த ஆங்கிலவழி நவீன கல்வி பெற்றவர்களாலேயே தமிழ் வரலாற்றுணர்வும் வரலாறு சார் எழுத்துக்களின் அடிப்படைகளும் தொடக்கப்படுகின்றன. அவ் வகையில் மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையைத் தமிழ் வரலாற்றுணர்வுத் தோற்றத்துடன் தெளிவாக அடையாளங் காணலாம். (இவரது "The Tamils Eighteen Hundred Years Ago" நூலை இங்கும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்" நூலை இங்கும்தரவிறக்கி வாசிக்கலாம்) இலங்கையின் தமிழ் வரலாற்றுணர்வின் தோற்றப் புள்ளியும் அங்கேயே அமைகிறது எனலாம்.

இவ்வரலாற்று எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தின் நினைவில் இழந்துபோன பெருமைமிகு பொற்காலங்கள் குறித்தும் அப் பொற்காலங்களை மீளவும் நிறுவுதற்கான தமிழரசுகள் குறித்தும் அருட்டுணர்வுகளை ஏற்படுத்துமாறு அமைந்தன. அவ்வாறு, தமிழில் வரலாறு பற்றிய தொடக்கநிலைப் புரிதல்கள் பெருமைமிகு பொற்காலங்களையும் அவற்றை மீட்கும் தமிழரசு பற்றியனவாயும் அமைந்தன. தமிழ்ச் சூழலில் வரலாறு பற்றிய இப்புரிதல் ஏறக்குறைய இன்றளவும் நிலைத்தே காணப்படுகிறது.

தொடர் வளர்ச்சிப்போக்கில் இவ்வரலாற்றுப் புரிதல் தமிழகத்திலும் இலங்கையிலும் சற்று விலகிய பாதைகளிற் செல்லத் தொடங்கியது. எழுச்சி பெற்ற பார்ப்பன சமூகத்தின் முழு ஆதரவையும் ஆரிய மேன்மையை விரும்பிய காலனிய இந்தியவியலாளர்களின் ஆதரவையும் பெற்று மிகச் சிறப்பான இடத்தைக் கொண்டிருந்த சமஸ்கிருதத்தை எதிர்கொள்ளும் தேவை தமிழகத்தில் எழுந்ததனால், அதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழக வரலாற்றுணர்வு அமைந்தது.

அதேவேளை, இலங்கையிற் காலனிய அரச ஊழியத்தினூடு தம்மை இலங்கையின் எழுச்சி பெற்ற சமூகமாக்கிக் கொண்ட இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வு பண்டைப் பெருமை மிக்க இலங்கையின் தமிழரசை முன்னிலைப்படுத்தித் தொடங்குகிறது. குறிப்பாக, ஆரியச் சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண இராச்சியம் முன்னிலைப்படுத்தப் பெறுகிறது. இலங்கையில் தமிழ் வரலாற்று எழுத்துகளின் தொடக்கமும் வரலாறு பற்றிய புரிதல்களும் அதைச் சார்ந்தே அமைந்தன.

இந்தியவியலில் பொதுப்போக்காக இருந்த சமஸ்கிருத ஆரிய மேன்மையை மையப்படுத்திய காலனிய அறிஞர்ளே இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தை மீளக்கண்டறிந்தனர். அதனூடு சிங்கள பௌத்த அரசை முதன்மைப்படுத்த இலங்கையின் வரலாறு பயன்பட்டது. அதுவே இலங்கை வரலாறு என்று ஏற்கப்பட்டது. சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதிகள் காலனியவாதிகளின் சமயப் பண்பாடுகளை மறுத்து எதிர்ப்பதனூடு எழுச்சி கொண்டபோதும், தமக்குச் சாதகமாகக் காலனியவாதிகள் கட்டமைத்த இவ்வரலாற்றுப் போக்கைக் கையகப்படுத்தித் தமது அரசியல் மத அபிலாட்சைகளுக்கான பாதுகாப்பை இவ் வரலாற்றுணர்வின் பின்னணியிற் பெற்றுக்கொண்டனர்.

சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதிகளின் எதிர்நிலையில் நின்ற தமிழ்ச் சமூகம் காலனியக் கல்வி முன்வைத்த வரலாறு தனது அபிலாசைகளுக்கு மாறாக இருந்த போதிலும்; அதையே இலங்கை வரலாறாகக் கற்கும் நிலை ஏற்பட்டது.

தமிழிற் முதன்முதலிற் பொது வாசிப்புக்கு வந்த வரலாற்று எழுத்துக்கள் காலனியக் கல்வித் தேவைகட்காக எழுதப்பட்டவையும்  மொழிபெயர்க்கப் பட்டவையுமே. குறைபாடுகள் இருந்தாலும் அவை அக்கால வரலாற்று எழுத்தியற் போக்கைத் தம்முட் கொண்ட சிறந்த நூல்களாக இருக்கின்றனசிங்கள / தமிழ் அறிஞர்கள் என்ற பிரிநிலையில் அல்லாமல் வரலாற்றறிஞர்கள் என்ற நிலையில் இரு பகுதியினரும் சேர்ந்தே வரலாறு எழுதலை மேற்கொண்டனர். ஜீ.ஸி. மென்டிஸம் எஸ்.ஜே. பேக்மனும் இணைந்து எழுதிய 'நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம்” அதில் (நூலகம் திட்டத்தில் இதன் 03 பாகங்களையும் தரவிறக்கி வாசிக்கமுக்கியமானதுமு; சிறந்ததுமான வரலாற்று அறிமுக நூலாகும். அதே காலகட்டத்தில் பண்டைய ஈழம் எனக் குறிப்பிட்டு எழுதப்பட்ட தமிழ் வரலாற்று நூல்களும் அவ் வகையினவாகவே அமைந்தன. அதாவது காலனி-தேசியவாத கலப்புச் சிந்தனை சார்ந்த வரலாற்று எழுத்துகள் தமிழர், சிங்களவராகிய இரு பகுதியினர்க்;கும் பொதுவான வரலாற்று எழுத்துக்களாயிருந்தன.

நேரடி பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது முதல், சிங்களப் பெருந் தேசியவாதத்தை வலுப்படுத்தும் வரலாற்றாய்வுகளையும் வரலாற்று எழுத்துக்களையுமே இலங்கை அரசும் வரலாற்றுத் துறையும் ஊக்குவித்தன. இலங்கையிலிருந்த ஏனைய சமூகங்களின் வரலாற்றை அது மறுத்தது.
தென்னாசிய வரலாற்றுத் துறையிற்; புகழ்பெற்ற .எல். பஷாம் போன்றோர் இலங்கை வரலாற்றுத் துறையில் ஆசிரியர்களாகவும் இலங்கை அரசாங்கத்தினூடுவியத்தகு இந்தியா (நூலகம் திட்டத்தில் இந்நூலை தரவிறக்கி வாசிக்க) “ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும்” (நூலகம் திட்டத்தில் இந்நூலை தரவிறக்கி வாசிக்க)
போன்ற சிறந்த நூல்களை சுதேச மொழகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருந்த போதும், புலமையும் நேர்மைத்திறமும் மிக்க வரலாற்றாசிரியர்களின் உருவாக்கமும் வரலாற்று எழுத்தயிலும் பரம்பலும் போதியளவில் தோன்றவேயில்லை. பிரச்சனை என்னவென்றால் தேசியவாதம் வரலாற்று உண்மைகளின் தேடலுடன் குறுக்கிடுகிறதுஅதைத் தாண்டுவது எத்தேசியவாதிக்கும் அடையாள அரசியலுக்கு உட்பட்டவருக்கும் எளிதல்ல. (நன்றி பேராசிரியர் சி.சிவசேகரம்)

தமது நம்பிக்கைகளும் அபிலாசைகளும் கட்டமைத்த வரலாற்றுக்கும், வரலாற்றுக் கல்வி முன்வைத்த வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாட்டாலும் அதிலும் முக்கியமாகத் சிங்களப் பெருந்தேசியவாதத்துக்கு மாற்றாகத் தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சியாலும்,  கல்விகற்ற தமிழ் சமூகம் இலங்கைக்கான பொதுவரலாற்றை ஏற்க மறுத்ததுஅதனால் இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வு இலங்கையில் அதன் பாரம்பரியத் தமிழ் அரசுகளைத் தேடுவதாகியது.

அதற்கேற்பவே இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் புரிதல்; அமைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் வரலாறு பற்றிய இப் போக்கையும் நம்பிக்கையும் வலுப்படுத்துமாறு அமைந்தன. சிங்கள பௌத்த பேரினவாத முனைப்பில் இலங்கையின் வரலாறு மேலும் மேலும் மாறுகையில் அதனை எதிர்த்துத் தமிழ் இன உணர்வு நிலையில் வரலாற்றை எழுதுவதாக தமிழ் வரலாற்று எழுத்துக்கள் மாறின. தமிழில் எழுதப்பட்ட வரலாறுகளிற் பெரும்பாலும் அனைத்துமே மேற்குறிப்பிட்ட போக்கிலிருந்து விலகவில்லை.

தமிழில் பேராசிரியர்.கா.இந்திரபாலா, பேராசிரியர்.சி.பத்மநாதனையும், பேராசிரியர்.ஆ.வேலுப்பிள்ளை, பேராசிரியர்.சி.அரசரெத்தினம்  சிங்களத்தில் பேராசிரியர்.லெஸ்லி குணவர்தன, பேராசிரியர்.சிரிவீர, பேராசிரியர்.சுதர்ஷன் செனவிரத்ன போன்ற வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்கள் இலங்கையின் வரலாற்று எழுத்துக்களை நேர்செய்ய முயன்றபோதிலும் தமிழ்ச் சமூகத்தின் அக்கறை அவற்றின்பாற் செல்லவில்லை. தமிழர் மத்தியில் இருந்த தமிழ் இன அபிமான வரலாற்றுணர்வுகளில் தளர்வு ஏற்படவில்லை. ஆயினும் இன்றும் தரம் ஆறு தொடக்கம் வரலாற்றைக் கட்டாய பாடங்களில் ஒன்றாக, அது பொய்யான வரலாறு என்று ஆணித்தரமாக நம்பியவாறு, நாம் கற்கிறோம்.
(தொடரும்)

Wednesday, October 17, 2018

கதைகளை வாசித்தலும் எழுதுதலும் - வீ.கௌரிபாலனின் கதைகளோடு


வீ.கௌரிபாலனுடைய கதைகளை எதிர்கொண்ட மூன்று (எஸ்.சத்யதேவன், உமா ஜீ, சி.கிரிஷாந்வாகசருடைய அனுபவ எதிர்வினைகள் இதனுள் அடங்கியுள்ளது. வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலியின் இழைகள் போன்றது இந்தக் குறிப்புகள். மூன்றும் ஒரே தளம்தான் ஆயினும் எதுவுமல்ல எதுவும். எனவே தொடராக முதலாவதை அடுத்து இரண்டாவதையும் அடுத்து மூன்றாவதையும் அல்லது மூன்றாவதை அடுத்து இரண்டாவதை அதையடுத்து முதலாவதையும் வாசிக்கலாம்.    அவ்வாறில்லையாயின்  தனித்தனியே வாசிக்கலாம். தேர்வு, வாசகர் உடையது.


எச்சில் பாலும் ஒப்பனை நிழலும் வீ.கௌரிபாலனின் கதைகள் - எஸ்.சத்யதேவன்

ஒவ்வொருவரிடமும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. ஒவ்வொவரும் சில நூறு முறையாவது கதைசொல்லிகளாக இருந்திருக்கிறோம். மனித சமூகத்திடம் உள்ள கதைகள் பல ஆயிரம் கோடிகளை  தாண்டிச் செல்லும். ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்குள் கதைகளின் அதிகரித்தபடியே இருக்கின்றன. வாழ்வு என்பதை இன்னதுதான் என்று வரையறை செய்ய முடியாதது போலவே கதை என்பதையும் இன்னதுதான் என்று வரையறை செய்யமுடியாததாகவே இருக்கின்றது. கதைகளின் ஆயுளையும் கதைகள் மீதான ஆர்வத்தையும் சரியாக குறிப்பிட முடியாது. ஆயினும் நமது சமுதாயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைகளாலும்; கதைகளோடும் தான் வாழ்கிறது

தமிழ்ச் சமூகத்தின் முதல் கதை எது என்ற கேள்விக்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல. ஆயினும் தமிழில் தோன்றிய ஆரம்பக் கதைகள் வாய்மொழியாகவே நெடுங்காலம் வாழ்ந்தன என்பதை நாம் அறிந்துள்ளோம். தமிழில் கதை என்று திட்டமிட்டு எழுத்தில் எழுதப்பட்ட முதல் கதையாக வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் கொண்ஸ்ரன்ரைன் ஜோசப் பெஸ்கி பாதிரியார் எழுதிய  'பரமார்த்த குரு' கதை இருக்கலாம் என்று நான் ஊகித்து வைத்துள்ளேன். பல்வேறு பிரதேசங்களில் வழங்கிய வாய்மொழிக்கதைகளை இணைத்தே பரமார்த்த குரு கதையை வீரமாமுனிவர் எழுதினார். இன்றுவரை வேடிக்கை கதைகளாக விளங்கும் அக்கதைகளை இந்துமத மடாதிபதிகளை ஏளனஞ் செய்ய அல்லது சக போட்டியாளர்களான சீர்திருத்த (புரட்டஸ்ரன்ட்) கிறிஸ்த்தவர்களை ஏளனஞ் செய்யவே வீரமாமுனிவர் எழுதியதாக நம்பப்படுகின்ற போதிலும் தான் அக்கதைகளை எழுதியமைக்காக அவர்கூறிய காரணங்கள் பேச்சுத் தமிழ் இலக்கணத்தை  வெளிநாட்டு மதத் தொண்டர்களுக்கு இலகுவாகப் புரிய வைக்கவும் எழுத்துப் பிழைகளை தடுப்பதற்காகவுமே அவை எழுதப்பட்டன என்பதாகவே இருக்கின்றது.

கதைகள் இயங்குகின்ற பிரதானவெளி புனைவாக இருந்தாலும் கதைகள் வாசகரிடத்து ஆற்றுகின்ற வினைகள் புனைவின்பம் என்பதைத் தாண்டி வியாபிக்கின்றது. கதைகள் எழுதப்படுவதிலும் இவை முக்கியபங்காற்றுகின்றன. எல்லாமே புனைவு என்று சொல்லப்பட்டாலும் முற்றிலும்  புனைவான ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியங்களை மனிதமனம் சென்றடையவில்லை. புனைவு எனக் கூறப்படுபவற்றினுள்ளே உள்ள  உண்மைகளையும் உண்மை என்று என்று கூறப்படுவற்றினுள்ளே உள்ள புனைவுகளையும் தேடியபடியே வாசகமனம் பயணிக்கின்றது. கதைகள் பற்றி எழுதப்பட்டவை அக்கதைகள் வெளிப்படுத்துவனவற்றையும் தாண்டி  எதை எழுதியுள்ளன என்ற சந்தேகத்தைத் தாண்டியும் கதைகள் பற்றியும் எழுதவேண்டியதை இதுவே அவசியமாகிறது.

கதைகள் என்பது வெறும் சம்பவங்களின் பதிவுகளோ குவியல்களோ அல்ல. அவ்வாறானவை செய்திகள் என்றே அழைக்கப்படுகின்றன. போர்க்கால வாழ்வியலில் இருந்து வெளிவரும் கதைகளில் செய்திகளில் இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் அவை கதைகளாக வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களின் விகசிப்பும் கிளர்த்தும் அனுபவங்களும் அதிர்வுகளும் வேறுவகையானது. கதைகள் கதாசிரியர்களின் கட்டுப்பாட்டைத் மீறி நழுவிச் சென்று பயணிக்கின்றன.

கதைகளை எழுதுவதும் எழுதப்பட்ட கதைகள் பற்றி எழுதுவதுமாகவே தற்காலத் தமிழ்க் கதையுலகம் அமைந்துள்ளது. ஆயினும் வாசிப்பு குறைந்து செல்வது போலவே கதைகளும், கதைகள் பற்றிய எழுத்துக்களும் குறைவடைந்து செல்கின்றன. எண்ணற்ற கதைகளில் சிலவே நூல்களாக்கி வாசகரிடத்து செல்கின்றனஎல்லாக்கதைகளும்  வாசிக்கப்படுவது இல்லை. வாசிக்கப்பட்ட அனைத்துக் கதைகள் பற்றியும் எழுதுவதுமில்லை. சில கதைகளை அவை உங்களுக்குள் ஆற்றும் வினைகளையும் விகசிப்புகளையும் சாதாரணமாக எதிர்கொள்ள முடியாது. சதத் ஹஸன் மாண்டோவினுடைய கதைகளை என்னால் சாதாரணமாக எதிர்கொள்ள முடியாது திணறி இருக்கிறேன்.   கௌரிபாலனின் கதைகளும் அவ்வாறே சாதாரணமாய் எதிர்கொள்ள முடியாத கதைகளாகத்தான் அமைந்தன.

மிதக்கும் மொழியில் உருகியோடும் கதைகளாக வாழ்வை வரைந்த கௌரிபாலனின் முதற் தொகுதிக்கான முன்னுரையில்இத்தொகுப்பில்  அடங்கியுள்ள புனைவுகள் தமிழ்ச் சிறுகதை; துறைக்கு ஒரு வித்தியாசமான புதுவரவாகவும், புது வரைவாகவும் அமைந்துள்ளமை வாசகர்கள் உணர்வார்கள்என்று இலங்கையின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான நந்தினி சேவியர் குறித்திருப்பார்;; அவை வெறும் உபசார வார்த்தைகள் அல்ல என்பதை அத்தொகுதிப்பின் வந்த கௌபாலனின் கதைகளோடும் பயணிக்கும் வாசகர்களும் எளிதாக உணர்வார்கள். புனைவுகள் என்ற ஒற்றைச் சொல்லோடு கடக்கமுடியாதபடி மனத்தின் மீது பலங்கொண்டு தாக்கி அலறச்செய்பனவாக அமைந்தவை அவருடைய கதைகள். கதைகளை வாசித்தல் என்பதை புதிய தளத்திற்கு  நகர்த்திசெல்லும் முயற்சியில் பயணிக்கின்ற எழுத்துக்கள் கௌரிபாலனுடையவை.

90களின் ஆரம்ப காலத்தில்; சிறுகதையுலகில் நுழைந்துகொண்ட கௌரிபாலன் 2003 இலேதான் 'ஒப்பனை நிழல்' என்ற தனது 10 கதைகள் கொண்ட முதலாவது தொகுதியை 'கீழைத் தென்றல் கலாமன்ற' வெளியீடாகக் கொண்டுவருகிறார் (2010 இல் பரிசல் வெளியீடாக மீள்பதிப்பு செய்யப்பட்டது). நீண்ட இடைவெளிகளில்த்தான் கௌரிபாலனின் கதைகள் தம்மை வெளிப்படுத்துகின்றன. அதே போல அக்கதைகளின் நழுவியோடும் பாதைகளில் பயணித்துச்  செரித்துக்கொள்ளவும் நீண்ட இடைவெளிகள் தேவைப்பட்டவனாகவே நான் இருந்தேன். அதன் பின்னர்  விடுதலை அவாவிய மனவிருப்புகள் பேரவலமாக மாறிய இரண்டாயிரத்தின் இரண்டாம் தசாப்தத்தின் ஆரம்பங்களிலேதான் மீண்டும் கொளிபாலனின் கதைகள் 'காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்என்னும் தொகுதியாக தம்மை வெளிக்காட்டுகின்றன.

ஒப்பனை நிழலின் ஆசிரியராக அல்லாமல் கௌரி அண்ணாவாகவே அறிமுகமானவர், அவரது கதைகள் வெளிச்சம்படாமல் தூங்கிக்கிடந்த காலங்களில்க்கூட அது பற்றி அக்கறையில்லாது வழக்கம் போலவே கலை இலக்கிய வெளியில் இயங்கியவர் கௌரிபாலன். அவருக்குத் தெரிந்திருக்கின்றது தன்னுடைய கதைகள் தம்மைத் தாமே வெளிப்படுத்தும் சாத்தியங்கள் உள்ளவை என்றுபோர்க்கால வாழ்வின் வரலாறு நுழையாத சூட்சும இடங்களில் நிலைகொண்டவை அவரது கதைகளின் நிலைகளன்கள். 'அப்பே றட்டவும்' 'தாயம்மாவும்' 'எச்சில் பாலும்' அதன் நித்தியமான சாட்சிகள்.


காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்! - உமா ஜீ

எனது வாசிப்பனுபவத்தில் (அது ஒன்றும் அவ்வளவு விரிவானதல்ல எனினும்.. என்வரையில்) ஈழத்திலிருந்து இப்படியொரு சிறுகதைத் தொகுப்பைப் படித்ததில்லை. எதிர்பார்க்கவுமில்லை.

எழுத்தாளர் வி. கௌரிபாலன் பெயரையும் இந்தப்புத்தகம் கிடைக்கும் வரையில் அறிந்திருக்கவில்லை. சரியாகச் சொன்னால் ஞாபகமில்லை. ஏனெனில்  தொகுப்பிலிருக்கும்தப்புகதையை எங்கோ வாசித்திருக்கிறேன்.
யுத்தத்தையும், வன்முறையையும் நேரடியாக எதிர்கொள்ளும் மனிதர்களை, அவர்களின் மனநிலையை மட்டுமே பிரதிபலிக்காமல் அறியப்படாத அல்லது  நாம் அறியவோ அக்கறை கொள்ளவோ விரும்பாத ஒரு தரப்பின் கதைகளையும்  அதிகமாகப் பேசுகிறது.

நாம் என்றுமே இருந்து பார்க்க விரும்பாத, தயக்கம் கொள்ளும், சொல்லப்போனால் இனம்புரியாத அச்ச உணர்வு சூழ்ந்து கொள்ளும் வாழ்க்கையை எதிர்கொண்ட - இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் வன்முறையால் உதிரிகளாக்கப்பட்டவர்களின் கதைகள்!

யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு தவிர அதிகம் பேசப்படாத ஒடுங்கியும், பதுங்கியும் வாழ விதிக்கப்பட்ட இன்னுமின்னும் சிலதரப்புகள் இருக்கின்றன. அவர்களின் கதைகளைப் பேசுகிறது. போராட்டகாலத்துக்கு சமாந்தரமாக, நேரடியாகப் பங்குகொள்ளாத தரப்பொன்றின் மீது திணிக்கப்பட்ட புற, அக ரீதியான கீறல்களை அப்படியே உள்ளபடியே போகிறபோக்கில் அதே வீரியத்துடன் சொல்கிறது.

ஆரம்பத்தில் அவ்வளவு வசீகரமாகவோ, உடனே உள்ளீர்த்துக்கொள்வதாகவோ இருக்கவில்லை. எழுத்து கொஞ்சம் கடினமானதாகத் தெரிந்தது. ஒருசில பக்கங்களிலேயே மெல்ல மெல்ல நெருங்கி ஆக்கிரமித்துக் கொண்டது.

ஒரு கட்டத்தில் ரத்தமும், சதையும், நிணமும் மெல்லச் சூழ்ந்து, அவ்வப்போது சற்றே திடுக்கிட செய்துவிட்டது. வாசிக்கும்போது நானிருந்த மனநிலையா என்று தெரியவில்லை. வெறுமையையும், வலியையும், ஒருவித அச்சவுணர்வையும் கூடவே தீராத அலைக்கழிப்பையும் கொடுத்துவிட்டது. அதிகம் சொல்லப்படாத, சமூகத்தின் கதைகள் இவை!

மென்னிழைகளால் நெய்யும் பூமி - சி.கிரிஷாந்

எந்தவொரு கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக அந்தரங்கமானது. அது தான் கலையின் வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன் மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம் ஏற்படுத்துவது கிளர்த்துவது
ஈழத்து சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு கதையைத் தானும் படித்திருக்கிறேன். மிகப் பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன். ஆனால் முழுமை கூடிய இப்படி ஒரு  தொகுப்பை படித்ததில்லை. ஒரு மகத்தான கலைஞனின் கைகளுக்குத் தான் இப்படி எழுதுவது சாத்தியம் . வாழ்வின் எல்லைகளற்ற சாத்தியங்களை தொடராமல், சாதாரண வாழ்வின் சாத்தியங்களின் விரித்துச் சென்று அகமும் புறமுமாய் விரியும்  கதைப் பரப்புக்களை நெய்கிறார் கௌரிபாலன்.
இந்த தொகுப்பை பற்றி எதுவும் அதிகம் பேசத் தேவையில்லை. தொகுப்பு தானே தன்னளவில் அதிகம் பேசக் கூடியது. அதன் உள்ளமைப்பே அதன் எல்லைகளை எந்தவொரு புற வார்த்தையையும் விட விரித்துச் செல்லும் வல்லமை கொண்டது. ஆனாலும் ஒரு வாசக அனுபவ அடிப்படையில் இந்த கதைகளின் போக்கை அது வாசகனை இழுக்கும் பக்கங்களை ஏனைய முக்கிய அம்சங்களை தொகுத்துச் சொல்லலாம். அதுவே இந்த பத்தியால் ஆகக் கூடிய சாத்தியம்.

முதலாவது இவர் யார் என்பதை இவரை எங்கே வைக்கலாம் என்பதை பார்க்கலாம். ஈழத்தைப் பொறுத்தவரையில் உருவாகியிருக்கும் மிக முக்கியமான இந்த தலைமுறை கதை சொல்லிகளின் படைப்புக்கள் எள்ளலையும் மிக அதீத அரசியல் நிலைப்பாடுகளையும் பேசுவதாக உள்ளது. ஆனால், இவர்களிடம் இருந்து வெகு சுவாரசியமான படைப்புக்களை அடையாளம் கண்டிருக்கிறோம். இவர்கள் எல்லோரிலும் இருந்து மாற்றாக உருவாகியிருக்கும் கதை சொல்லல்  முறை. வாழ்வை தரிசிக்கும் தளம் என்பவை கௌரிபாலனை தனித்துவப் படுத்துகிறது.

இவர் யாருக்காக கதை சொல்கிறார்?  என்னை பொறுத்தவரையில் யாருக்காகவும் சொல்லவில்லை. கதை தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு எளிமையான இதயத்தை காலம் தேர்வு செய்திருக்கிறது.
கதை சொல்லும் நுட்பத்தில் இவர் தனது முத்திரையை உருவாக்குகிறார் அதன் மிக நுட்பமான விவரணைகள். அறுபடாத அல்லது தெறிக்காத நீண்ட காட்சி தொடர் அமைப்புக்கள், உவமைகள். படிமங்கள் மூலம் ஒரு காட்சி உலகை அங்குலம் அங்குலமாக நெய்கிறார். கதையின் மொழி உடைத்துப் பரப்பிய கவிதை வரிகள். வேறு என்ன சொல்ல? உவமைகளிற்கு ஒரு உதாரணம் "திசை தப்பிய சமுத்திர வெளியில் படகு அலைந்த போது, வானில் தும்பிக்கை கொண்ட முகில் கூட்டம் சில நாட்கள் பின் தொடர்ந்து வர தாம் கரை தட்டியதாக, அப்பா சொன்ன போது, தான் பிள்ளையாரப்பாவை வேண்டிக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள்."

டோர்னாடோ சூறாவளியையும் மனித நம்பிக்கைகள் உலகைப் பார்த்து விரியும் விதத்தையும் இவ்வளவு அழகாக பதிவு செய்த வரிகளை அடையும் தருணங்களில் கலைஞனின்  மந்திர விரல்கள் சொற்களை சொற்களால் உருவாக்கிய படி நம்பிக்கையை வாழ்வினால் உருவாக்குகிறது.

ஒவ்வொரு கதையாக விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை மிக நேர்த்தியான படைப்புக்கள் என்று எல்லாவற்றையுமே சொல்கிறேன்உலகத்தரமான கதைகள் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த கதைகளை பரிந்துரைக்கிறேன்.

மனித வாழ்வின் சிதைவுகளை, மனித மனங்களின் ஒழுங்கமைப்பை, மனித கண்ணீரின் விலைமதிப்பை ஒவ்வொரு கதையும் தனக்கே உரிய ஒழுங்குருவாக்கலுடன்  படைக்கிறது. தான் வாழும் பூமியை ஒரு கலைஞன் நேசிக்கிறான், தனது எளிய வாழ்வை  நேசிக்கிறான், தனது மனிதர்களை. தனது இயற்கையை இதனது இயலாமைகளை எல்லாவற்றையும். அதனாலேயே அவன் படைக்கிறான். அவன் மூலமாக படைப்பும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

'காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் புத்தகத்தின் ஆரம்பத்தில் சில வரிகள் உண்டு. 'யுத்தத்தின் எச்சங்களாக மனச் சிதைவுகளுடனும், உடற்ச் சிதைவுகளுடனும், உடல் உறுப்புகளுக்குள் செல்த் துண்டுகளுடனும், துப்பாக்கி ரவைகளுடனும் வாழ்ந்து கொண்டிருப்போருக்குஇந்த புத்தகத்தை சமர்பிக்கிறார் என்று, அதுவே அவரின் படைப்பு அனுபவங்களின் வெளிப்பாடும்.

யுத்தம் முடிவடைந்த பின் யுத்தத்தின் மக்கள் என்னவானார்கள்? யார் அவர்களை பராமரிக்கிறார்கள், யாருக்காக போராடினோம் என்ற கேள்வி எப்படி எழுந்தது. இந்த வாழ்வும்  போராடமும் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான், அப்படியான மனிதர்களுக்கு இந்த சமூகம் பொருட்படுத்தும் படியாக எதனையும்  செய்யவில்லை, மதிக்கக்கூட இல்லை, அதற்குப் பதில் பயப்பிடுகிறது. ஒதுக்கி வைக்கிறதுஎளிமையான ஒரு துளிக் கண்ணீர் தான் அவர்களுக்காக நாம் சிந்தியது. கண்ணீரைவிட அடர்த்தியானது இரத்தம். அவர்களுக்கு கொடுக்க இந்த கலைஞனுக்கு இருப்பது இவை தான். ஞாபகத்துக்கும் வாழ்வுக்குமான மாயப் புதிரிலிருந்து பிறக்கும் இக்கதைகள், இந்த மனிதர்களின் வாழ்வின் மறக்க முடியாத தழும்புகள். அலைகளில் சிதறியும்  காடுகளில் பதுங்கியும், வீடுகளில் ஒடுங்கியும் வாழ்ந்த ஒரு சமூகத்தின் கதைகள் தான் இவை, இவர்களுக்கு இக் கதைகள் இருளில் கண்ணீரொளிரும் மெழுகுவர்த்திகள்.