Friday, February 1, 2013

தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்பாஷை - மீள் பதிப்புக்கான பதிப்புரை

எழுநா,நூலகம் கூட்டுவெளியீடாக விரைவில் வெளிவரவுள்ள  தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் 'தமிழ்ப்பாஷை' எனும் நூலின் பதிப்புரை

19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும் எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம் பிள்ளை, நல்லை நகர் ஆறுமுகம் பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரின் பணிகள் தமிழுலகில் பெரிதும் அறியப்பட்டவை. யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிகள் பற்றிய செய்திகள் பல அப்பிரதேசங்களைத் தாண்டித் தமிழுகின் பரவலான கவனிப்பைப் பெறாது போனமை ஒரு தீநேர்வாகும். நற்பேறாகஇ  வித்துவான் எப். எக்ஸ். சி. நடராஜா அவர்களின்  “ஈழமும் தமிழும்” என்ற நூல் நமக்கு யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான ஈழத்தமிழறிஞர்கள் பற்றிய  தகல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பேருதவியாக அமைகிறது.

யாழப்பாணத்தைப் போலவே ஈழத்தின் ஏனைய பிரதேசத்தவர்களும் தத்தமது பிரதேச தமிழறிஞரின் பணிகளை தமிழ் உலகிற்கு  அறியப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்தவகையில் மட்டக்களப்பு நகர் அரும்பெரும் கொடையாக முத்தழிறிஞர் சுவாமி விபுலானந்தரைத் தந்து தமிழுலகில் தன்னை நிராகரிக்கப்பட முடியாததாக ஆக்கிக் கொண்டது.  ஈழத்தின் பழைமைமிக்க தமிழ் நகரான திருகோணமலை நகரின் தமிழறிஞர்களின் பணிகள் பற்றிய தேடலில் திருகோணமலை தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டபோது சி.வை.தாமோதரம் பிள்ளைஇ சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்இ உ.வெ.சாமிநாதையர்இ கலியாணசுந்தர முதலியார் ஆகியோரால் நன்கு மதிக்கப்பெற்றவரும்இ அவர்களின் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாக இருந்தவருமான தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்பணிகள் பற்றி அறிந்து வெளிக்கொணர்ந்தார்கள்.

திருகோணமலை சித்தி. அமரசிங்கம் அவர்கள் அம்மாவட்டத்தின் முக்கியமான கலை இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய பதிவுகளைச் செய்வதில் முன்னின்று உழைத்திருக்கிறார். அவரே தி. த கனகசுந்தரம்பிள்ளையினுடைய தொகுப்பினை வெளிக்கொணர்ந்தவருமாவார். இதில் திருகோணமலை இந்து இளைஞர் மன்றத்தினதும் அதன் முன்னைநாள் பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம் அவர்களதும் முயற்சி குறிப்பிடத்தக்கது.

தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் தமிழ்ப்பணிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தவேளை தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் இளைய சகோதரரும் தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதியவருமான  தி.த.சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் அறியமுடிந்தது. சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்தின் கீழைத்தேய சுவடி நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றிய சரவணமுத்துப்பிள்ளை ஆங்கிலப்புலமையுடன் தமையனார் போலவே நிறைந்த தமிழறிவு பெற்றிருந்தார்.  தீநேர்வாக இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டதால் தமிழுக்கு அன்னாரின் பணி மிகக்குறைந்தளவே கிடைத்தது. தன் வாழ்நாளினுள் சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புக்களை நூலாகக் கொண்டுவரும் ஆசை இருந்தபோதும் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கு இருந்த சூழ்நிலைகளால் அவரது வாழ்நாளுக்குள் அதனைத் தனிநூலாக வெளிக்கொணர முடியாது போயிற்று. சித்தி அமரசிங்கத்தின் உதவிகொண்டு சரவணமுத்துப்பிள்ளை பற்றிய தகவல்களை “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற தமது நூலில் தனி அத்தியாயமாக் சு.செபரத்தினம் அவர்கள் வெளிக்கொணர்நதார்கள்.

சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புகளிலே புகழ்பெற்றவை தமிழின் முதலாவது வரலாற்று நாவலான மோகனாங்கியும்இ தத்தைவிடுதூது எனும் பிரபந்தமும் ஆகும். 1919ம் ஆண்டில் ‘’சொக்கநாத நாயக்கர்” என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பு கண்ட மோகனாங்கியோ அதன் மறுபதிப்பான சொக்கநாத நாயக்கரோ இன்று கிடைப்பதற்கில்லாமற் போயிற்று. நவீன பெண்விடுதலைச் சிந்தனை கொண்டதும் இதில் பாரதிக்கு முன்னோடியாக இருந்தது என்று கொள்ளத்தக்கதுமான ஓரு நூல் தத்தைவிடுதூது ஆகும்.   இது பற்றித் தமது ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள் நூலில் மிகவும் விதந்தெழுதியிருப்பார் பேராசிரியர் க. கைலாசபதி. இதில் உள்ள பாடல்களையும் உள்ளடக்கி ஒருநாவல் வடிவில் “தத்தைவிடு தூது” என்ற நூலாக திருகோணமலையின் முதல் பெண் நாவலாசிரியர் நா.பாலேஸ்வரி அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் உறவினர் வழிவந்த நா.பாலேஸ்வரி அவர்களிடமிருந்துதான் சரவணமுத்துப்பிள்ளையின் மற்றொரு படைப்பான “தமிழ்பாஷை” கிடைத்தது.

மோகனாங்கி தவிர்ந்த தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புகள் அடங்கிய இந்நூல்இ தி.த.கனகசுந்தரம் பிள்ளை அவர்களின் புதல்வர் தி.க.இராஜசேகரன் அவர்களால் தொகுக்கப்பெற்றது. நா.பாலேஸ்வரி அவர்களிடமிருந்து இந்நூல் பற்றி அறிந்து கொண்ட பேராசிரியர் செ.யோகாராசா அவர்கள் தி.த. சரவணமுத்துப்பிள்ளை வரலாற்று நாவலாசிரியர் மற்றும் முன்னோடிப் பெண்விடுதலைச் சிந்தனையாளர் மட்டுமல்லாது மொழியியல் பார்வையும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்ட தமிழியற் சிந்தனையாளர் என்பதை அவரது “தமிழ்பாஷை” என்ற கட்டுரை மூலம் அறிந்து அதை அறிவுலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

 1892ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியினுள் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கும் போது சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய தொடக்க உரையே “தமிழ்பாஷை” என்னும்  ஆய்வுக்கட்டுரையாக அமைகிறது. இக்கட்டுரையின் முக்கியத்துவத்தைப் பல இடங்களிலும் அழுத்தமாக வலியுறுத்தியதுடன்இவ்வுரை பற்றிச் சிறந்த கட்டுரைகளையும் எழுதியவர்  பேராசிரியர் செ.யோராசா ஆவார். அன்னாரின் முயற்சியால் 2011ம் ஆண்டு கிழக்குமாகாண சாகித்திய விழா மலரில் ‘தமிழ் பாஷை” கட்டுரை இடம்பெற்றதுடன் 2012ம் ஆண்டு கிழக்கு மகாண சாகித்திய விழாவில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் பெயரால் ஒரு ஆய்வரங்கும் நடாத்தப்பட்டது.

கிழக்கு மாகாணம் பெருமையுடன் மீட்டெடுத்த தி.த.சரவணமுத்துப்பிள்ளையின்  பணிகளில்இ தமிழியல் ஆய்வுப் பணிகளின் தொடக்கமாக அமையும் “தமிழபாஷை” கட்டுரையைத் தமிழுலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வேண்டிய அவசியம் கருதி அக்கட்டுரை அடங்கிய நூலான இதனை மீள் பதிப்பு செய்கின்றோம். இந்நூலில் ‘தமிழ்பாஷை’ தவிர்த்து சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய செய்யுள்களும் ஆங்கிலக் கவிதை ஒன்றும் அடங்கியுள்ளது.

காலமும் சூழலும் தமிழியல் ஆய்வுகளில் முக்கியமானதாகையால் தி. க. இராஜசேகரன் பதிப்பித்த நூலில் உள்ளவாறே எவ்வித மாற்றங்களுமின்றிப் பதிப்பிக்கின்றோம். வாசகர்கள் இந்நூலைக் கருத்திற் கொண்டு தி. த. சரவணமுத்துப்பிள்ளைக்குத் தமிழியல் ஆய்வுப்பணிகளில் உரிய இடத்தை வழங்குவார்கள் என்றும் நம்புகிறோம்.

2003 ம் ஆண்டு தி.த.கனகசுந்தரம்பிள்ளையவர்களின் நூற்தொகுப்பு வெளிவந்த போது அவர்தம் தம்பியான தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புக்களும் நூலாகத் தொகுப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் திருகோணமலை மக்களால் விடுக்கப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து அந்த வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதில் மனநிறைவை அடைகின்றோம்.

தி.த.சரவணமுத்துப்பிள்ளை

1865ம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் பிறந்த சரவணமுத்துப்பிள்ளைஇ புகழ்பெற்ற தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் இளைய சகோதரர் ஆவார். திருகோணமலை நகரசபைத் தலைவராக இருந்த முகாந்திரம் பாலசுப்பிரமணியப்பிள்ளை இவ்விருவருக்கும் இளையவர். இவ்வறிஞர்களின் பெற்றோர்கள் திரு. தம்பிமுத்துபிள்ளையும் அம்மணியும் ஆவார்கள்.

ஆரம்பக்கல்வியைத் தந்தையார் தம்பிமுத்துப்பிள்ளையிடமும் தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கணேச பண்டிதரிடமும் ஆங்கில மொழியைக் கதிரவேற்பிள்ளை ஆசியரிடமும் கற்றுத்தேர்ந்த அவர் 1880ம் ஆண்டு தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்று சென்னைப் பல்கலைகழக பட்டாதாரித்தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டத்தையும் பெற்றார்.

சிறிது காலம் சித்தூர்  உயர்தரப் பாடசாலையில் ஆசியரியராகப் பணியாற்றிய பின்னர் சென்னை மாநிலக்கல்லூரியின் நூலகத்தில் கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றினார்.“மோகனாங்கி”  என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர். இந்நூல் இவர் மூலம் மொழியியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனை கொண்ட தொடக்க காலத் தமிழியற் சிந்தனையாளர் என்பதையும் நிருபிக்கின்றார்.

தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் 1902ம் ஆண்டு தமது 37ம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.