Thursday, February 27, 2014

அலைதலில் உயிர்க்கும் ஆன்மா.

சில நாட்களுக்கு முன் தங்கை ஒருத்தி பேஸ்புக்கில் ஏன் இப்போது என்னை பேஸ்புக் பக்கம் அதிகமாகக் காணமுடிவதில்லை என அக்கறையோடு விசாரித்தாள். நானும் அவதானித்தேன் முன்பெல்லாம் பேஸ்புக்கில் தவறாமல் மணிக்கணக்காக ஒவ்வொரு விடயத்தையும் அவதானித்தபடி அக்கறையான விடயங்களிலெல்லாம் எதாவது விருப்பை அல்லது கருத்தை சொல்லியபடியே இருப்பேன். நிறைய விடயங்களை  பகிர்ந்து கொள்வேன். பின்பு சிறிது நாளில் விடயங்களைப் பகிர்தல் குறைந்தது. பின்பு அதுவும்கூட இல்லாமல் போய்விட்டது.

வேலைகள் அதிகமாகி பேஸ்புக் சலித்துவிட்டது என்று அதற்கு காரணம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டேன். வினாவிய தங்கைக்கு 'வயசாகிவிட்டதுதானே' என்று ஒப்புக்கு சாக்கு சொல்லி வைத்தேன். அனால் பேஸ்புக் என்ற விடயத்தில் மட்டுமல்லாமல் நான் மிகவும் நேசிக்கின்ற உரையாடல் மற்றும் பகிர்தலிலும் ஆர்வம் குறைந்து போயிருந்தமையை சமீபத்தில்தான் அவதானித்தேன்.

என்னை 'ஆன்மாவும் நிறையக் கதைகளும் கொண்டவன்' என்று நண்பர் ஒருவர் வேறொரு நண்பரிடம் ஒருமுறை குறிப்பிட்டார். அதில் எனக்கு  பூரண உடன்பாடு உண்டு. நான் கதைகாரன்தான். நிறையக் கதைபவன்தான். அதிலும் மற்றவர்களை கதைக்கவிடாமல் கதைத்துக்கொண்டிருப்பவன் என்று நெருங்கிய நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்ளும் கதைகாரன்.

ஆனால் இப்பொழுது கதைப்பது மிகவும் விருப்பமற்றதாக சலிப்புக்குரியதாக மாறிவிட்டது போலொரு உணர்வு. அது உண்மையும் கூட. ஏன் இவ்வாறு நிகழ்ந்தது? என்னிடம் கதைப்பதற்கு விடயங்கள் இல்லாமல்போய்விட்டதா? அல்லது நான் கதை சொல்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டதா?  இரண்டுமே இல்லை.

முன்பை விட கடந்த சிலமாதங்களாக நான் மிகவும் அதிகமாக முக்கியமான ஆர்வமூட்டக்கூடிய விடயங்கள் பலவற்றை வாசித்தேன். இன்னும் சொல்லப்போனால் நாள் தவறாமல் வாசித்தபடியே இருந்தேன். புதிய விடயங்கள் தொட்டு ஆழமான ஆய்வு விடயங்கள்வரை தேடி வாசித்தபடியே இருக்கிறேன். அவைகள் பற்றி உரையாடவும் பகிரவும் தொடங்கினாலே சில மாதங்கள் தொடரும். அது போல் வாரம் தவறாமல் நண்பர்களை என்னை சந்தித்தபடியும் வழமைபோல் பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடல்களை ஆரம்பித்தபடியும்தான் இருக்கிறார்கள். ஆனால் நான் அவற்றில் ஆர்வமற்று கடமைக்காக கதைத்தபடி இருந்துள்ளேன். நான்கைந்து நண்பர்கள் இதழ்களுக்கு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக எழுதித்தருமாறு கூட கேட்டார்கள். ஒன்றிரண்டை ஒத்துக் கொண்டேன் ஆனால் எதையும் செய்து முடிக்கவில்லை. இதை விட எழுத ஆரம்பித்து ஒரு பந்திகளோடு நிறுத்திக்கொண்ட விடயங்கள் ஒரு இருபதைத்தாண்டும்.

இவ்வளவு இருந்தும் உரையாடவும் பகிர்ந்து கொள்ளவும் என்மனம் இஸ்டப்படவில்லை. சொந்த வாழ்வியல் நெருக்கடி இதற்கான காரணமாக இருக்கவில்லை என்றே நம்புகிறேன். ஏனெனில் கடந்த காலங்களில் இருந்த அதே நெருக்கடிதான் இன்றும் அதில் பெரிய மாறுதல் இல்லை. ஆகவே அது காரணமில்லை. அப்படியாயின ஏன் எனக்கு மிகவும் விருப்பமான உரையாடலிலும் பகிர்தலிலிருந்தும் விலகிப்போகிறேன்.

மிகவும் ஆழமாக யோசிக்கவேண்டிய விடயமாக மாறிப்போய்விட்டது. அந்தத் தங்கையின் கேள்வி. கடந்த காலத்தில் என்னை இயக்கிய என்னுள் நிறைந்து இருந்த ஏதோ ஒன்று என்னிடமிருந்து தூரப்பட்டு போய்விட்டதுதான் காரணமாக இருக்கும் என்று நம்பி அது எதுவாகக் இருக்கும் என்று யோசித்தபடியே இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு விடையைக் கண்டுபிடித்தேன். என்னிடம் எப்போதும் இருந்த ஊர்சுற்றி அலைதலும் புதியவர்களோடும் நட்பாக பழகும் தன்மையும் என்னிடம் வெகுவாகக் குறைந்து விட்டிருந்ததுதான் அதன் காரணம்.

அது எந்தளவுக்கு குறைந்து விட்டிருந்தது என்றால் ஏறக்குறைய ஒருவருடமாக வசித்து வரும் வீட்டின் பின்புற மதிலுக்கு அப்பால் அந்த   வீதியில் நான் சென்றேதே இல்லை என்ற அளவுக்கு குறைந்து விட்டிருந்து. என் வீட்டிற்கு முன்புறமும் பின்புறமும் வசிக்கும்  குடும்பங்களில் உள்ளவர்களில் ஒன்று அல்லது  இரண்டு பேரைத் தவிர வேறு யாருடைய முகமும் எனக்கு தெரியாதளவுக்கு  குறைந்துவிட்டிருந்தது. அப்படி முகம் தெரிந்தவர்களின் பெயரோ ஏனைய விபரங்களோ கூட தெரியாது. இத்தனைக்கு ஒவ்வொரு நாளும் பலதடவை வீட்டைவிட்டு வெளியில் சென்று வருபவனாகவே ஒவ்வொரு நாளும் இருந்தேன். ஆயினும் எனது குடியிருப்பு காணியின் இருபுறம் இருப்பவர்களின் பெயர்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். என்னுடைய ஆன்மாவுக்கு தூரமாக இருந்திருக்கிறேன். தெரிந்த இடங்களையும் தெரிந்த நபர்களையும் தவிர வேறு எதையும் சந்திக்காமல் இருந்திருக்கிறேன். நான் நானல்லாமலே ஒருவருடத்துக்கும் மேலாக வாழந்தபடி இருக்கிறேன். என்ன ஆச்சிரியமென்னறால் நான் நானல்லாமல் இருக்கிறேன் என்று தெரியாமலே நான் வாழ்க்கையை வாழ்ந்து கழித்திருக்கிறேன்.

இவற்றை எப்போது கண்டு கொண்டேன் என்றால் நண்பர் ஒருவரோடு மாலை வேளை சிறிது தூரம் நடந்து விட்டு வருவோம் என்று நடக்க சென்றபோதுதான். எனது வீட்டின் பின்புறத்தையும் அதற்கு அடுத்த வீடுகளையும் அங்குவசிக்கும் மனிதர்களில் சிலரையும் புதிய மண்ணையும் மரங்களையும் புதிய புற்களையும் வாசனையும் நாற்றத்தையும் சந்தித்தபோதுதான். தேங்கிக் கிடந்த ஆன்மா மெல்ல கசிந்து உருகத்தொடங்கி வழிந்தோடத் தொடங்கியபோதுதான். அலைதலும் அறிதலும் பழகுதலுமே வாழ்வின் உயிர்ப்பு. அதனை விலத்திபோகும் போது உயிர்ப்பும் உரையாடலும் பகிர்தலும் ஆன்மாவும் போய்விடுகிறது.

அலைதல் என்பதுதான் புதிய பொருள்களை பரிச்சயமாக்கிறது. அலைதல் இருந்தாலே கட்டாயம் புதிய மனிதர்களைச் சந்திக்கவேண்டி ஏற்படுகின்றன. இதனால் புதிய உறவும் நேசங்களும் அனுபவங்களும் ஏற்படுகின்றன. உறவு நேசம் அனுபவம் இவைகளைத் தாண்டி வாழ்தல் கழிவதாக நான் உணர்ந்ததோ  அறிந்ததோ இல்லை. ஆக வாழ்வு  என்பதன் உயிர்ப்பு அலைதலாகவே இருக்கின்றது.

அலைதல் பற்றிய அளப்பரிய அனுபவமும் வரலாறும் எம்மிடம் இருக்கின்றது. புத்தர் போதி மரத்திற்குக் கீழே இருந்து ஞானம்பெற்றார் என்று என்னால் நம்பமுடியவில்லை. நளொன்றுக்கு நாற்பது மைல்களுக்கு  மேலாக வட இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதிகளில் அலைந்தவர் அவர். அலைதலின் வழியே ஞானத்தை  தேடி அதை   போதிமரத்தடியில் ஒருங்கு படுத்தியிருக்கலாம். புத்தர் என்றல்ல  பண்டைய இந்தியாவின் அத்தனை ஞானிகளும் அலைந்த படியேதான் இருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்களின் தேட்டம் ஞானமாக  சேகரிக்கபட்டு வைக்கப்பட்டன. இப்போதும் பெரும் வாசகப்பரப்பை கொண்ட எழுத்தாளர்கள் எல்லாம்  தேசாந்திரிகளே. அதனாலேயே அவர்களின் எழுத்துக்கள் வசிகரமாகமாகவும் புது அனுபவமாகவும்  அமைகின்றன.

அடையாள அட்டையோடும் கூட அலைய வாய்ப்பற்ற  தலைமுறையாக நாம் ஆக்கப்பட்டதனூடு பெரும் அறிவுப்பெருக்கத்தை தவறவிட்டவர்களாக மாறிவிட்டோமா என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.


அதே நேரம் எம்மக்கள் உயிரைக்   கையில் பிடித்தபடி பெரும் அவலங்களினூடு அகதியாக அலைந்ததும் எம்காலத்தில்தான். இன்றுரை தாங்கொனா துயரச்சுமைகளோடு  ஓயாத அகதி அலைச்சல் தீராதா? என்று ஏங்கியபடியே வாழ்க்கயை கழுவுகின்றவர்களும் எம்மக்கள்தான். அலைதலின் அத்தனை பக்கங்ளையும் சந்தித்த அந்த மக்கள் ஞானிகளாக அல்ல சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்காகத்தான் இப்போதும் ஏங்கியபடி இருக்கிறார்கள் என்பது வேதனையான முரண். 

அவர்களின் ஆன்மா அலைதலால்த்தான் சிதறிக்கடிக்கப்பட்டு சிதைந்து போயிருக்கிறது. அவர்கள் ஆன்மாவான இடங்களில் அவர்களின் ஆன்மாவுக்கு பிடித்தபடி ஓய்வுகொள்ளுதலில்த்தான் அந்த மக்களின் ஆன்மா உயிர்ப்புடன் எழும். அலைதலும் ஓய்வும் ஆன்மாவின் உயிர்ப்பாக இருப்பது முரண்தான். என்னசெய்ய வாழ்க்கை எப்போதும் முரணோடுதான் இயங்குகிறது.