Thursday, June 17, 2010

ஆசையின் ஆர்ப்பரிப்புகள்

பிய்த்துத் தின்று செரித்து ஊளையிடும் நரிகளென
ஊற்றெடுக்கும் உணர்வுகள்
ஓவ்வொரு கணத்தையும்
குதறுகின்றன

சுற்றி நெருக்கும் அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

சுடு குழல்களின் கண்களினூடாக
என்வீட்டு குளியலறையிலும்
எட்டிப்பார்த்து என் நிர்வாணத்தில்
தனது வெற்றியை எக்காளமிடுகிறது
பேரினவாதம்

உழை.. உழை… ஓய்வொழிச்சலன்றி உழை
உன் உயிர் பொருள் ஆவி எல்லாம் என்
சுயநல அரசியலின் செருப்புகளாக
உன்குடும்ப சிறகுகள் பறக்க அல்ல அவை
பத்திரமாக இருப்பதற்கேனும் உழை என
என் ஏழ்மையின் வலியில் காலூன்றி எம்
மூலாதரத்தை உறிஞ்சி தன் வல்லமை பறைசாற்றுகிறது
ஏகாதிபத்தியம்

கறைகளின் மத்தியில் பரிசுத்தம் அவமானம்
என்றபடிக்கு உருமாறி உயிர்களின்
இருப்பை மறுப்பதை நியாயமாக்கி வாலாட்டுகிறது
மனிதாபிமானம்

அதிகாரத்தின் அகோரத்தையும்
நய வஞ்சகத்தின் துரோகத்தையும்
துணைக்கழைத்து ஊடகங்களில்
உற்பத்தி செய்யும் பொய்களில் பளிச்சிடுகிறது
ஜனநாயகம்

எதிர்ப்புகளுக்கான பரிசுகளால்
உள்ளொடங்கி உள்ளொடுங்கி இருப்பொழிந்து - அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன

தன் நம்பகத்தன்மையை துறந்த இரவுகளில்
வறுமைக்கும் வெறுமைக்கும் கொடுமைக்கும் நீதிக்குமாக
அதன் ஒவ்வொரு குரலும் வழிந்தோடி
வெளிகளின் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
தேடுகிறது தன் விடுதலையை….

'கள்' இணையச் சஞ்சிகையில் பிரசுரமான கவிதையின் மீள்பிரசுரம் நன்றி கள் குழுமம்

Tuesday, June 15, 2010

சும்மா இருத்தல், கடவுள் இருக்குமிடம்


சமீபத்தில் வாசித்தபோது இரண்டு கவிதைகள் நினைவைவிட்டு அகலவேயில்லை அவைளை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கடவுள் இருக்குமிடம் - அரவிந் அப்பாத்துரை , ‘பிரவாகினி -23” பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்திமடல்.

சும்மாயிருத்தல் - உஷா ரவிக்குமார், குமுதம் (மீள்பிரசுரம் பிரவாகினி -23)
(தலைப்புக்கள் என்னால் இபட்டது)


கடவுள் இருக்குமிடம்

மனிதன் இல்லாத இடம்,
அங்கு கடவுள் இருக்கச் சாத்தியமில்லை.
ஏனெனில்,
கடவுளைப் பற்றிச் சிந்திப்பதும் தான்
கடவுளைப் பற்றி பேசுவதம் மனிதன்

கடவுளைப் புகழ்வதும் மனிதன் தான்.
கடவுளை ஏசுவதும் மனிதன் தான்.
கடவுளுக்குக் கோயில் கட்டுவதும் மனிதன் தான்.
மொத்தத்தில் கடவுள் எனப்படும் எண்ணக்கருவை வாழவைப்பதே மனிதன் தான்.
ஆக,
மனிதன் இல்லாத இடத்தில் கடவுள் இருக்கச் சாத்தியமில்லை

############





சும்மாயிருத்தல்

காலை எழுந்தவுடன் வாசல் துடைத்துக் கோலம் போட்டு
காப்பி, டீ, பூஸ்ட் எனத் தனித்தனியே கலந்து கொடுத்து
குளித்து வந்து, பூசையறை சுத்தம் செய்து, பூ வைத்து
கும்பிட்டு, விளக்கேற்றிக் கையோடு அடுப்பேற்றி
பொங்கலென்றால் கொத்சென்பார், இட்லிக்கு சாம்பார்தான்
புலவுக்கு பச்சடி என்றால் தோசைக்கு சட்டினி
மதியம் ‘லன்ச்’ கட்டிச் கொடுத்து அனுப்பிய உடன்தான் தளிகை
மாமிக்கு சாம்பாரும், சாற்றமுதும், கரமேதும்!
வீட பெருக்கித் துடைத்து விட்டு துணிகளையும் உலரவிட்டு
(வாஷிங் மெசின், வாக்குவம் க்ளீனர் இருக்கையில் ஆளெதற்கு?)

மடி மாமியார் இருப்பதினால் பாத்திரமும் தேய்த்தெடுத்து
மல்டி பர்ப்பஸ் வேறேதுமில்லை அடியேன்தான் பார்த்திடுவீர்!
நடுநடுவில் வெளியெ சென்று வரவும் எனக்கு வாய்ப்புண்டு
நாடகம் சினிமா இல்லை, மளிகைக் கடை, மார்க்கெட்டு
பில்லுகளைக் கட்டிவிட்டு, ப்ளம்பரையும் கூட்டி வந்து
ப்யூஸ் பல்பை நான் மாற்றி, இஸ்திரிக்கு துணி கொடுத்து
ரப்பர் பேண்டொ, ரீபில்லோ, ரெக்கார்ட் நோட்டோ வாங்கி வந்து
ரவை உப்புமா கிண்டி வைத்து, உலர்ந்த துணி மடித்து
சப்பாத்தி குருமா என இரவு சமையல் செய்து
செடிகளுக்கு நீர் ஊற்றி, மலர் கொய்து கட்டி வைத்து
சலிப்பில்லை, சந்தோஷம் தான் என் வாழ்க்கை.
அடிமனதில் ஒரு நெருடல் மட்டுமுண்டு
வீட்டினரை கேளுங்கள் என்னைப் பற்றி – சொல்வார்கள்
‘வேலைக்குப் போகவில்லை’ சும்மாதான் இருக்கிறாள்...!