Sunday, October 14, 2018

சுவடுகளைத் தொலைத்து நிற்கும் நிலங்களின் மரபுகளாலும் பண்பாட்டாலும் தேசத்தின் வரலாற்றை எழுதும் நூல்


வரலாற்று விழிப்புணர்வற்ற எந்தவொரு சமூகத்திலும் எதிர்காலம் குறித்த அக்கறை தோன்றுவதில்லை. என்று எம்மத்தியில் உள்ள வரலாறு என்பது மீண்டும் மீண்டும் அரண்மனைப் புதைகுழிகளில் ஆதாரங்களைத்தேடி மன்னர்களின் பரம்பரைகளை நிரல்ப்படுத்துவதாகவே அமைகிறது.  இப்பொதுவான வரலாறுகளால் மேலெழுந்த வரலாற்று அறிமுகத்தையே வாசகர்களுக்கு அளிக்க முடியும்

ஆனால் இன்றைய மேற்குலகின் வரலாற்று எழுத்தியல் நுண்வரலாறாக ஆராயப்படுகிறது. அது சிறு மனிதக் கூட்டத்தையும் கூர்மையாக அவதானிக்கின்றது. நுண் வரலாற்றாலேயே தேசங்களையும் பிராந்தியங்களையும் சிறு அலகுகளாக சல்லடையிட முடியும். அரண்மணையில் இருந்து வெகு தொலைவில் ஒதுக்கி வைக்கப்பட்ட குலங்கள், இனப் பிரிவுகள், சேரிகள், கிராமங்கள் நுண்வரலாற்றியல் வழியாகவே வெளிப்பட முடியும். இன்னும் நமது பல கிராமங்கள் மரபுகளாலும் பண்பாட்டாலும் தனித்துவத்துடனேயே வாழ்கின்றன. கிராமிய வழிபாடுகளும் மரபுகளும் அவற்றிற்கான வரலாற்றுப் பின்னணிகளும் கிராமங்களுக்கிடையே வேறுபடுகின்றன. அந்தக் கிராமங்களினதும், குளங்களினதும், அங்கு வாழும் குலங்களினதும் வரலாறுகள் பேசப்படுவதன் மூலமே தேச வரலாற்றை நிறைவு நோக்கி நகர்த்த முடியும்.

புனைவு எழுத்துகளுக்கு வெளியிலான வாசிப்பும் அறிதல் ஆர்வமும் மங்கிப் போகின்ற காலத்தில் அவற்றை எழுதுபவர்களுக்கு ஈழத்தில் பஞ்சம் நிலவுகிறது. பொதுவரலாற்றையே நாம் எழுதுவதற்கு மிகவும் சங்கடப்படுகின்றோம். இதில் எங்கேயிருந்து நுண்வரலாற்றை பண்பாட்டு வெளியிலிருந்து உருவாக்க முடியும் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகத் தோன்றலாம். ஏனெனில் மரபுகள் பண்பாடுகள் என்பற்றில் உள்ள சழக்குகளை தவிர்த்து தேசத்திற்கான வரலாற்றை அவற்றிலிருந்து கவனமாகப் பிரித்தெடுத்து வார்க்க வேண்டிய சிக்கல் நிறைந்த கவனமான பணி அது. யுத்தமும் உலகமய பெருவணிக நலனும் ;எம் கிராமங்களை அதன் உயிர்ப்பான இயங்குதலை வேரறுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது சாத்தியங்களின் பக்கமிருந்து அசாத்தியங்களின் பக்கத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர் வரலாற்றிலும் புவியியலிலும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையின் பூர்வ நிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. ஆனாலும் பொதுவரலாற்றில் மிக போகிறபோக்கில் அடையாளப்படுத்தப்பட்டுக் கடந்து செல்லப்படுகின்ற நிலமாக இந்த இதயபூமி இருக்கின்றது. திருகோணமலை நிலத்தின் பண்பாட்டு பெருவெளியாக இருந்த நிலங்கள் இன்று தமது பெயரையும் அடையாளங்களையும் பேரினவாதத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலால் தொலைத்து மானுட சோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றது. திருகோணமலை நிலத்தின் பண்பாட்டு பெருவெளியாக இருந்து இன்று மானுட சோகங்களில் மூழ்கிக் கிடக்கின்ற கிராமங்களின் தொலைந்து போனதும் போய்க்கொண்டிருக்கின்றதுமான சுவடுகளில் இருந்து தமிழ் தேசத்தின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதனூடாகவே பேரினவாத நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதற்கான வரலாற்றுணர்வை தக்க வைக்க முடியும். 

சுவடுகளைத் தொலைத்து நிற்கும் நிலங்களின் மரபுகளாலும்  பண்பாட்டாலும் தேசத்தின் வரலாற்றை எழுதும் அவசியத்தை வலியுறுத்துவதோடு கோயில், நிலம், மரபுகள்சிறுதெய்வங்கள், தேவரடியார்கள்  என திருகோணமலைச் சமூகத்தின் பல தொன்மைகளை  ஆராய்கின்ற நூல் 'இது குளக்கோட்டன் சமூகம்'. பிரதேச  வட்டார வரலாற்று நூல்களில் காணப்படும் பெருமிதமும் பழமரபுக்கதைகளின் தொடர்ச்சியாக அல்லாமல் வரலாற்று பற்றிய பிரக்ஞையும் முறையையும் கொண்ட இந்நூலின் அட்டைப்படத்திலிருந்தே இவை தொடங்குகிறது என்பதை நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்து கொள்ளமுடியம்.

நான்கு கட்டுரைகளாக விடயங்களை முன்வைக்கும் இந்நூலில் தொடக்க கட்டுரையாக அமைவது 'நீலாசோதயனும் காவல் தெய்வங்களும்'. 120 பக்கங்கள் கொண்ட நெடிய கட்டுரையான இது இந்து மதம் என்பது தொடங்கி அதனுள் செயற்படும் பெருந்தெய்வ நாட்டார் தெய்வங்கள் தொடர்பான கருத்தியல் தத்துவ சமூகவியல் நோக்கில் ஆராய்வதோடு சனங்களின் தெய்வங்கள் தொடர்பான சமூக வரலாற்றாய்வாக விரிவடைந்து திருகோணமலையின் யுத்தத்தின் நெருக்கடி தீவிரமடைந்தது வரை சனங்களின் வழமைகளோடும் மரபுகளோடும் நெருங்கி உயிர்ப்பைத் தந்துகொண்டிருந்தவற்றின் வரலாற்றைச் சொல்லுகின்றது. சாமியாட்டம், பேய்ச்சியம்மன் மடை, தீ மிதிப்பு, காளி, அகஸ்தியர், சப்த கன்னியர், ஐயனார் என திருகோணமலையின் தொன்மைச் சாமிகளையும் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை நடைபெற்று தற்போது குறியீட்டுப்பலியாக நடைபெறும் 'தம்பலகாமம் நரபலி', 'கந்தளாய்க் குளக்கட்டு பெருமடை' நீலாசோதயன் எனப் பக்கங்கள் தோறும் புதிய செய்திகளும் அவற்றின் வரலாறும் நிறைந்து காணப்படுகின்ற கட்டுரையாகும்.

இரண்டாவது கட்டுரை 'கோபுர வறுமை: தேவதாசிகள்'.  காலனித்துவத்திற்கு சற்று முன்னரான கால நிலைமைகளின் தொடர்ச்சியாக 'பாலியல் தொழில் புரிந்தவர்கள்' என்று பொதுப்புத்தியில் பதிந்து போயுள்ள 'தேவதாசிகள் பற்றிய கட்டுரையாகும். எங்கல்ஸின் மேற்கோளோடு தொடங்கும் இக்கட்டுரை கோணேசர் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள தேவரடியார்களுக்கான தண்டனையை வழி தேவரடியார்களின் தோற்றம் இருப்பு சமூக நிலைகள் என்பவற்றை இந்திய வரலாற்றுணர்வோடு இவ்விடயத்தை அணுகுகிறது. இத தொடர்பில் பல்வேறு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை வெட்டியும் ஒட்டியும் ஒரு தர்க்கத்தை உருவாக்குகிறது.

மூன்றாவது கட்டுரை 'இது குளக்கோட்டன் சமூகம்'  சோழர்காலத்தில் கோணேசர் ஆலய நிலவுடைமைச் சமூகமாக நிலைப்படுத்தப்பட்ட திருகோணமலை சமூக இயங்குநிலைகளை 'கோயில்ப் பொருளியல்' நோக்கினூடாக அணுகும் கட்டுரை. ஆயிரம் ஆண்டுகளாகியும் இன்றும் திருகோணமலையின் தொன்மைக் கிராமங்களின் சமூக நிரலாக்கமும் பண்பாட்டுவெளியின் இயங்குதலும் குளக்கோட்டன் கால அமைப்பினடியிலிருந்து கிளைத்தாக இருப்பதனை நிலாவெளிக் கல்வெட்டு முதலான சான்றுகளைக் கொண்டு முன்வைக்கும் இக்கட்டுரை சோழர் படையெடுப்பின் போது திருகோணமலை சமூகத்தில் இருந்த குறுநில அரசுகள் நிலவுடைமை அமைப்புகள் என்பன சோழர்களால் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு நிலைப்படுத்தப்பட்டுத் தொடரவிடப்பட்டன என்பன குறித்தும் பேசுகிறது. முறையான வரலாற்றாதரங்களோடு அப்பிரதேச செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டார் இலக்கியங்களின் வழி முறையான வரலாற்று ஆதாரங்களோடு ஒரு தர்க்கத்தை முன்வைத்து வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்வதற்கான தூண்டுதலாக அமைகிறது.

நூலாசிரியர் கலாநிதி.க.சரவணபவனின் மூன்றாவது வரலாற்று நூல் இது. திருகோணமலை வரலாற்றை எழுதுவதில் பெருவிருப்புக்  கொண்ட அவர் 'வரலாற்றுத் திருகோணமலை' திருகோணமலை பற்றி ஒல்லாந்த, பிரெஞ்சு, ஆங்கில ஆளுநர்கள், படையதிகாரிகள், படைவீரர்களின் குறிப்புகளான 'காலனித்துவ திருகோணமலை' ஆகிய சிறந்த நூல்களை எழுதியவர். ஒரு இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட ஜேர்மன் தமிழகராதியை தனியனாக ஒருவாக்கிய கலாநிதி சரவணபவன் அகராதித் துறையில் கேம்பிரிஜ்ட் பல்கலைக்கழக கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பட்டதாரியான இவர் பங்குச் சந்தை தொடர்பிலும் நூல்களை ஆக்கியவராவார்.

வரலாற்றை விஞ்ஞான முறைமை முறையில் எழுதும் அதேவேளை பொதுசன வாசிப்புக்கு உகந்ததாக எளியநடையிலும் இலகுவாசிப்பு ஏற்ற நடையிலும் எழுதவேண்டும் என்பதை தனது வரலாற்று நூல்களில் கடைப்பிடித்து வருபவர். இது குளக்கோட்டன் சமூகம் நூலும் அவ்வாறே தெள்ளிய நடையில் வெகுசன வாசிப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. அவரது ஏனைய நூல்கள் போலவே இந்நூலையும் 'திருகோணமலை வெளியீட்டாளர்கள்' வெளியிட்டுள்ளனர்.

"இந்நூல் தர்க்கத்தையும், உரையாடலையும் உருவாக்கினால் மகிழ்ச்சியடைவேன். தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என எதுவுமில்லை என ரிக் வேதம் மிகத் தொன்மைக் காலத்திலேயே ஓங்கி ஒலித்திருக்கிறது" என்று நூலாசிரியர் முடித்திருக்கும் இந்நூல் திருகோணமலை வரலாற்றை ஆராய்பவர்களும் அறிந்துகொள்பவர்களும் மட்டுமல்ல ஈழத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள ஆர்வங்கொண்டுள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் 'இது குளக்கோட்டன் சமூகம்'.


No comments:

Post a Comment