Thursday, October 25, 2018

இலங்கையின் தமிழ்ச் சூழலில் வரலாறு பற்றிய புரிதலும் வரலாற்று எழுத்துக்களும் - 01


மிகவும் பரிச்சயமானதும் எல்லோரும் பயன்படுத்துவதும் சரியாக விளங்கச் சிக்கலானதும் வரலாறுதான். வரலாறு தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் அறிந்த வரலாறும் வெவ்வேறானது. பொதுசனம் முதற் புலமையாளர்கள் வரை வரலாற்றை தம் வசதிக்கேற்பக் கட்டமைக்கிறார்கள். அது வரலாற்றை விளங்குவதைச் சிக்கலாக்குகிறது.

இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வை விளங்கிக் கொள்ளல் குறித்துக் கவனஞ் செலுத்தி; தமிழில் வெளிவந்த வரலாற்று எழுத்துக்கள் பற்றியும் அவ்வெழுத்துக்களினூடாகத் தமிழ்ச் சூழலில் வரலாறு குறித்து ஏற்பட்ட புரிதல்கள் குறித்த குறிப்பான ஆய்வுகள் மிகக்குறைவானவையே

தமிழில் வரலாற்று உணர்வு 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சி கொள்கிறது. இலங்கையில் வரலாற்றுக் கல்வியும் வரலாறு பற்றிய அறிமுகமும் காலனியக் கல்வியினூடாகவே தொடங்குகின்றன. இக்கல்வியிற், காலனியப்பட்ட சமூகங்கள் வரலாறற்ற சமூகங்களாக்கப்பட்டுக், காலனியாதிக்க நலன் சார்ந்து, காலனியாதிக்க நாடுகளின் வரலாறுகளே வரலாறாகக் கற்பிக்கப்பட்டன.

காலனியவாதிகள் முன்வைத்தவரலாரற்ற சமூகம்என்பதை ஏற்க மறுத்த ஆங்கிலவழி நவீன கல்வி பெற்றவர்களாலேயே தமிழ் வரலாற்றுணர்வும் வரலாறு சார் எழுத்துக்களின் அடிப்படைகளும் தொடக்கப்படுகின்றன. அவ் வகையில் மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளையைத் தமிழ் வரலாற்றுணர்வுத் தோற்றத்துடன் தெளிவாக அடையாளங் காணலாம். (இவரது "The Tamils Eighteen Hundred Years Ago" நூலை இங்கும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்" நூலை இங்கும்தரவிறக்கி வாசிக்கலாம்) இலங்கையின் தமிழ் வரலாற்றுணர்வின் தோற்றப் புள்ளியும் அங்கேயே அமைகிறது எனலாம்.

இவ்வரலாற்று எழுத்துக்கள் தமிழ்ச் சமூகத்தின் நினைவில் இழந்துபோன பெருமைமிகு பொற்காலங்கள் குறித்தும் அப் பொற்காலங்களை மீளவும் நிறுவுதற்கான தமிழரசுகள் குறித்தும் அருட்டுணர்வுகளை ஏற்படுத்துமாறு அமைந்தன. அவ்வாறு, தமிழில் வரலாறு பற்றிய தொடக்கநிலைப் புரிதல்கள் பெருமைமிகு பொற்காலங்களையும் அவற்றை மீட்கும் தமிழரசு பற்றியனவாயும் அமைந்தன. தமிழ்ச் சூழலில் வரலாறு பற்றிய இப்புரிதல் ஏறக்குறைய இன்றளவும் நிலைத்தே காணப்படுகிறது.

தொடர் வளர்ச்சிப்போக்கில் இவ்வரலாற்றுப் புரிதல் தமிழகத்திலும் இலங்கையிலும் சற்று விலகிய பாதைகளிற் செல்லத் தொடங்கியது. எழுச்சி பெற்ற பார்ப்பன சமூகத்தின் முழு ஆதரவையும் ஆரிய மேன்மையை விரும்பிய காலனிய இந்தியவியலாளர்களின் ஆதரவையும் பெற்று மிகச் சிறப்பான இடத்தைக் கொண்டிருந்த சமஸ்கிருதத்தை எதிர்கொள்ளும் தேவை தமிழகத்தில் எழுந்ததனால், அதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழக வரலாற்றுணர்வு அமைந்தது.

அதேவேளை, இலங்கையிற் காலனிய அரச ஊழியத்தினூடு தம்மை இலங்கையின் எழுச்சி பெற்ற சமூகமாக்கிக் கொண்ட இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வு பண்டைப் பெருமை மிக்க இலங்கையின் தமிழரசை முன்னிலைப்படுத்தித் தொடங்குகிறது. குறிப்பாக, ஆரியச் சக்கரவர்த்திகளின் யாழ்ப்பாண இராச்சியம் முன்னிலைப்படுத்தப் பெறுகிறது. இலங்கையில் தமிழ் வரலாற்று எழுத்துகளின் தொடக்கமும் வரலாறு பற்றிய புரிதல்களும் அதைச் சார்ந்தே அமைந்தன.

இந்தியவியலில் பொதுப்போக்காக இருந்த சமஸ்கிருத ஆரிய மேன்மையை மையப்படுத்திய காலனிய அறிஞர்ளே இலங்கையின் பௌத்த பாரம்பரியத்தை மீளக்கண்டறிந்தனர். அதனூடு சிங்கள பௌத்த அரசை முதன்மைப்படுத்த இலங்கையின் வரலாறு பயன்பட்டது. அதுவே இலங்கை வரலாறு என்று ஏற்கப்பட்டது. சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதிகள் காலனியவாதிகளின் சமயப் பண்பாடுகளை மறுத்து எதிர்ப்பதனூடு எழுச்சி கொண்டபோதும், தமக்குச் சாதகமாகக் காலனியவாதிகள் கட்டமைத்த இவ்வரலாற்றுப் போக்கைக் கையகப்படுத்தித் தமது அரசியல் மத அபிலாட்சைகளுக்கான பாதுகாப்பை இவ் வரலாற்றுணர்வின் பின்னணியிற் பெற்றுக்கொண்டனர்.

சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதிகளின் எதிர்நிலையில் நின்ற தமிழ்ச் சமூகம் காலனியக் கல்வி முன்வைத்த வரலாறு தனது அபிலாசைகளுக்கு மாறாக இருந்த போதிலும்; அதையே இலங்கை வரலாறாகக் கற்கும் நிலை ஏற்பட்டது.

தமிழிற் முதன்முதலிற் பொது வாசிப்புக்கு வந்த வரலாற்று எழுத்துக்கள் காலனியக் கல்வித் தேவைகட்காக எழுதப்பட்டவையும்  மொழிபெயர்க்கப் பட்டவையுமே. குறைபாடுகள் இருந்தாலும் அவை அக்கால வரலாற்று எழுத்தியற் போக்கைத் தம்முட் கொண்ட சிறந்த நூல்களாக இருக்கின்றனசிங்கள / தமிழ் அறிஞர்கள் என்ற பிரிநிலையில் அல்லாமல் வரலாற்றறிஞர்கள் என்ற நிலையில் இரு பகுதியினரும் சேர்ந்தே வரலாறு எழுதலை மேற்கொண்டனர். ஜீ.ஸி. மென்டிஸம் எஸ்.ஜே. பேக்மனும் இணைந்து எழுதிய 'நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம்” அதில் (நூலகம் திட்டத்தில் இதன் 03 பாகங்களையும் தரவிறக்கி வாசிக்கமுக்கியமானதுமு; சிறந்ததுமான வரலாற்று அறிமுக நூலாகும். அதே காலகட்டத்தில் பண்டைய ஈழம் எனக் குறிப்பிட்டு எழுதப்பட்ட தமிழ் வரலாற்று நூல்களும் அவ் வகையினவாகவே அமைந்தன. அதாவது காலனி-தேசியவாத கலப்புச் சிந்தனை சார்ந்த வரலாற்று எழுத்துகள் தமிழர், சிங்களவராகிய இரு பகுதியினர்க்;கும் பொதுவான வரலாற்று எழுத்துக்களாயிருந்தன.

நேரடி பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது முதல், சிங்களப் பெருந் தேசியவாதத்தை வலுப்படுத்தும் வரலாற்றாய்வுகளையும் வரலாற்று எழுத்துக்களையுமே இலங்கை அரசும் வரலாற்றுத் துறையும் ஊக்குவித்தன. இலங்கையிலிருந்த ஏனைய சமூகங்களின் வரலாற்றை அது மறுத்தது.
தென்னாசிய வரலாற்றுத் துறையிற்; புகழ்பெற்ற .எல். பஷாம் போன்றோர் இலங்கை வரலாற்றுத் துறையில் ஆசிரியர்களாகவும் இலங்கை அரசாங்கத்தினூடுவியத்தகு இந்தியா (நூலகம் திட்டத்தில் இந்நூலை தரவிறக்கி வாசிக்க) “ஆசியாவும் மேனாட்டு ஆதிக்கமும்” (நூலகம் திட்டத்தில் இந்நூலை தரவிறக்கி வாசிக்க)
போன்ற சிறந்த நூல்களை சுதேச மொழகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டிருந்த போதும், புலமையும் நேர்மைத்திறமும் மிக்க வரலாற்றாசிரியர்களின் உருவாக்கமும் வரலாற்று எழுத்தயிலும் பரம்பலும் போதியளவில் தோன்றவேயில்லை. பிரச்சனை என்னவென்றால் தேசியவாதம் வரலாற்று உண்மைகளின் தேடலுடன் குறுக்கிடுகிறதுஅதைத் தாண்டுவது எத்தேசியவாதிக்கும் அடையாள அரசியலுக்கு உட்பட்டவருக்கும் எளிதல்ல. (நன்றி பேராசிரியர் சி.சிவசேகரம்)

தமது நம்பிக்கைகளும் அபிலாசைகளும் கட்டமைத்த வரலாற்றுக்கும், வரலாற்றுக் கல்வி முன்வைத்த வரலாற்றுக்கும் இடையிலான முரண்பாட்டாலும் அதிலும் முக்கியமாகத் சிங்களப் பெருந்தேசியவாதத்துக்கு மாற்றாகத் தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சியாலும்,  கல்விகற்ற தமிழ் சமூகம் இலங்கைக்கான பொதுவரலாற்றை ஏற்க மறுத்ததுஅதனால் இலங்கைத் தமிழ் சமூகத்தின் வரலாற்றுணர்வு இலங்கையில் அதன் பாரம்பரியத் தமிழ் அரசுகளைத் தேடுவதாகியது.

அதற்கேற்பவே இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் புரிதல்; அமைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகள் வரலாறு பற்றிய இப் போக்கையும் நம்பிக்கையும் வலுப்படுத்துமாறு அமைந்தன. சிங்கள பௌத்த பேரினவாத முனைப்பில் இலங்கையின் வரலாறு மேலும் மேலும் மாறுகையில் அதனை எதிர்த்துத் தமிழ் இன உணர்வு நிலையில் வரலாற்றை எழுதுவதாக தமிழ் வரலாற்று எழுத்துக்கள் மாறின. தமிழில் எழுதப்பட்ட வரலாறுகளிற் பெரும்பாலும் அனைத்துமே மேற்குறிப்பிட்ட போக்கிலிருந்து விலகவில்லை.

தமிழில் பேராசிரியர்.கா.இந்திரபாலா, பேராசிரியர்.சி.பத்மநாதனையும், பேராசிரியர்.ஆ.வேலுப்பிள்ளை, பேராசிரியர்.சி.அரசரெத்தினம்  சிங்களத்தில் பேராசிரியர்.லெஸ்லி குணவர்தன, பேராசிரியர்.சிரிவீர, பேராசிரியர்.சுதர்ஷன் செனவிரத்ன போன்ற வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்கள் இலங்கையின் வரலாற்று எழுத்துக்களை நேர்செய்ய முயன்றபோதிலும் தமிழ்ச் சமூகத்தின் அக்கறை அவற்றின்பாற் செல்லவில்லை. தமிழர் மத்தியில் இருந்த தமிழ் இன அபிமான வரலாற்றுணர்வுகளில் தளர்வு ஏற்படவில்லை. ஆயினும் இன்றும் தரம் ஆறு தொடக்கம் வரலாற்றைக் கட்டாய பாடங்களில் ஒன்றாக, அது பொய்யான வரலாறு என்று ஆணித்தரமாக நம்பியவாறு, நாம் கற்கிறோம்.
(தொடரும்)

1 comment:

  1. How to play Baccarat - Worrione
    The name of the 바카라 추천 사이트 card game Baccarat can be found on the left side of your screen and on the right side of the screen, the main game. If there are four or more players in

    ReplyDelete