Monday, October 31, 2011

பண்டைத்தமிழ் வரலாறு மற்றும் சமூகம் பற்றிய ஆய்வில் பேரா.க.கைலாசபதியின் முக்கியத்துவம்



பேரா.க.கைலாசதியின் 25வது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட Early Historic Tamil Nadu c300BCE -300CE என்ற நூல் பற்றி front line 5th november 2010 சஞ்சிகையில் தில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் கேசவன் வேலுதாட் அவர்கள் எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் பிரவாதம் இதழ் 5ல் (ஏப்பிரல் 2011) பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த விமர்சனத்தின் முதற்பகுதி பண்டைத் தமிழர் பற்றிய ஆய்வில் பேராசிரியர் கைலாசபதியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பேரா.க.கைலாபதி பற்றி தமிழ்தேசிய, திராவிட இயங்கு தளத்திற்கு வெளியில் இருந்து செய்யப்பட்ட புலமைத்வ மதிப்பீடாக அமைகிறது இந்தப்பகுதி. பேரா.க.கைலாசபதியின் புலமைத்துவ ஆய்வுகள் பற்றி ஆழமான புரிதலுக்கு இது உதவும், அதன் முக்கியத்துவம் கருதியும் உரையாடலுக்காகவும் இங்கே பதிவிடுகிறேன்.

Early Historic Tamil Nadu c300BCE -300CE (Essays Commemorating Prof.K.Kailasapathy on the Twenty-Fith Anniversary of His DEth),
Edited by K.Indrapala, Kumaran Book House, Colombo-Chennai,2010,ppxvi + 201, 950.

சென்ற நூற்றாண்டின் தொடக்கமளவிலேதான் சங்க இலக்கியம் எனப் பொதுவாக வழங்கும் தமிழ் இலக்கிய நூல் தொகை மறைந்து போகும் நிலையிலிருந்து வெளிக்கொணரப்பட்டது. இதன்விளைவாக அதுவரை, ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த தமிழ் இலக்கியம் பற்றிய கோட்பாடுகள் தலைகீழாக்கப்பட்டன என

லாம். இலங்கைத் தமிழறிஞர்கள் சைவ இலக்கியப் பாரம்பரியத்தைப் போற்றியவர்கள். சங்க இலக்கியக் கண்டுபிடிப்பு அவர்களைஅதிகம் பாதிக்கவில்லை. தமிழகத்திலோ நிலமைவேறு. சங்க இலக்கியம் வெளியுலகுக்குக் கொண்டுவரப்பட்டதும் தென்னிந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் விளங்கிக் கொள்வதில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. இது உண்மையான ஒரு புரட்சியே. செம்மொழிகள் எனக் கருதப்பட்ட சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

சங்க இலக்கியக் கண்டுபிடிப்பின் விளைவுகளுள் ஒன்று தென்னிந்தியாவின் தொல்கால வரலாற்றைக் கூச்சமின்றிப் புகழ்பாட வைத்தமை ஆகும். தேசியவாத எழுத்தாளர்களால் 'செம்மொழிசார்' காலத்தினை அடையாளங்கானும் ஒவ்வொரு கூறும் இதில் சேர்க்கப்பட்டது. இப்போக்கினால் வரலாறு என்பது இறந்தகாலத்தைப் பற்றியதாகக் கருதப்படுவதற்குப் பதிலாக நிகழ்காலத்தைப் பற்றியதாக கருதப்பட்டது. வரலாற்றுச் சான்று என்பது தொல்லை கொடுக்கும் ஒன்றாக, ஒரு தடங்கலாக மாறியது. நூல்களை அவற்றுக்குரிய பின்னணியில் வைத்து விளக்குவது தேவையற்ற ஒன்றாகியது. கறாரான ஆய்வு நெறிமுறையியலை பின்பற்றி சங்க இலக்கியத்தை சிலர் ஆராய்ந்தனர் இன்னும் சிலர் உலக இலக்கியங்களோடு ஒப்பிடும் ஒப்பியல் ஆய்வு நோக்கில் அவ்விலக்கியத் தொகுதியினை பார்த்தனர். இவர்களை தமிழ் ஆய்வுலகம் துரோகிகளாகக் கொள்ளும் நிலையே இருந்தது. அத்தோடு இத்தகைய ஆய்வாளர்கள் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் புலமை நெறி நின்று கூறப்பட்டவை எனக் கொள்ள முடியாதவை ஆகும்.


இத்தகைய கண்மூடித்தனமான தன்னாட்டுப் புகழ்பாடும் பின்புலத்திலே தான் கனகசபாபதி கைலாசபதி ஆற்றிய பணியை மதிப்பிட வேண்டும். சங்க இலக்கியம் வெளியுலகுக்குக் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட புரட்சியை ஒத்ததாகத் தொல்கால இலக்கியத்தையும் அதன் அடிப்படையில் ஆராயப்பட்ட சமூகத்தையும் பற்றிய ஆய்வில் வழமைக்கு மாறான, விமர்சனரீதியான நோக்கைக் கைலாசபதி தொடக்கி வைத்தார். கைலாசபதியும் அவரைப் போன்று ஆதித் தென்னிந்திய வரலாற்றை ஆய்வு செய்யப் பெரிதும் தொண்டாற்றிய அறறிஞர்களாகிய கார்த்திகேசு சிவத்தம்பி, சுதர்ஷன் செனவிரத்ன, இந்நூலின் பதிப்பாசிரியர் (கா.இந்திரபாலா ) போன்றோரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய விடயம். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் சங்க இலக்கியத்தை வழிபாட்டுக்கு உரிய ஒன்றாகக் கருதாத மரபு ஒன்றின் வழிவந்தவர்கள்.

கைலாசபதியின் ஆய்வு ஒருவகையில் வழமைக்கு மாறானதாகும்.அவருடைய நூலாகிய Tamil Heroic Poetry

வெளியிடப்பட்டபோது அதில் கூறப்பட்ட விடயங்கள் பண்டைத் தமிழகத்தின் பெரும்புகழை எடுத்துரைப்பதில் வல்லோராய் இருந்தவர்களுக்குத் திகைப்பை ஊட்டியது.

'சங்கச் செய்யுள் என்ற தலைப்பு ஒரு தவறான சொல்வழக்கு' என்று நூலின் ஆரம்பத்தில் கைலாசபதி குறிப்பிட்டார். இது ஒரு திகைப்பூட்டும் கூற்றாகத் தோன்றியது. வாய்மொழி இலக்கியத்தை ஆய்வு செய்ய உதவும் நுட்பங்களைப் பயன்படுத்தி வீரயுகக் கவிதை (Heroic Poetry) என வர்ணிக்கப்படும் செய்யுளுக்குரிய வரம்புகளுக்குள் வைத்து ஆதித் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்வது பொருத்தமானதாக அமையும் என்றும் அவர் கூறினார். ஏச்.எம்.சட்விக் மற்றும் என்.கே.சட்விக் ஆகியோர் எழுதிய Th Growth of Literature (இலக்கிய வளர்ச்சி) என்ற பாரிய படைப்புக் காட்டிய நெறியைப் பின்பற்றியதோடு, தியூட்டோனிய, கிரேக்க, ஐஸ்லாந்திய, ஸ்லாவோனிய, சமஸ்கிருத, சுமேரிய மற்றும் ஆபிரிக்க வாய்மொழி இலக்கியம் பற்றிய ஆய்வுமுடிவுகளையும் கைலாசபதி தொட்டுக்காட்டியதோடு, தொல்காலத் தமிழ்க் கவிதையானது அடிப்படையளவில் வாய்மொழிக் கவிதையின் பண்புகளைக் கொண்டது என்றும் விளக்கிக் காட்டினார். மில்பன் பரி என்பார் ஹோமருடைய காவியங்களை ஆராய்ந்து அவை வாய்மொழி இலக்கியத்தின் பண்புகளை உடையது எனக் கூறியிருந்தார். மில்பன் பரியின் கருத்துக்கள் அக்காலத்தில் வீரயுகக் கவிதை பற்றிய 'உலகப் பொதுவான கோட்பாடு' என்ற மதிப்பைப் பெற்றிருந்தது. கைலாசபதி மில்பன் பரியின் கோட்பாட்டை தமிழ் வீரயுகக் கவிதை பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.

தொல்காலப் பாணர்களையும் பாணருக்குரிய மரபுகளையும், சமூகத்தில் அவர்களின் தொழிற்பாடுகளையும் அவர்கள் படைத்த செய்யுள்களின் காலத்து உணர்வையும் விளங்கிக் கொள்வதற்கு சட்விக் தம்பதிகள் செய்த ஆய்வும் மில்மன் பரியின் ஆய்வும் கைலாசபதிக்கு உதவின. தென்னிந்தியாவில் தமிழர் பெருமையை உயர்த்திப் பிடித்தவர்களுக்கு கைலாசபதியின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கைலாசபதியின் நூல் பல்லாண்டுகளாகத் தென்னிந்தியாவில் பெரும்பாலும் இருட்டடிப்புக்கு இலக்காகியதில் வியப்பில்லை. கைலாசபதி தமது 49வது வயதில் காலமானார். அவரது இழப்பு அறிவுலகத்தின் பேரிழப்பாகும்.

(இந்த முன்னுரையின் அடுத்த பகுதி மேற்குறித்த நூலிலுள்ள ஆய்வுகளைப்பற்றியதாகவும் தொல் தமிழ் வரலாறு பற்றியதாகவும் அமைகிறது. அதை அடுத்தாகப் பதிவிடுகிறேன் )

நன்றி -பிரவாதம் இதழ் 5, சமூக விஞ்ஞானிகள் சங்கம்

No comments:

Post a Comment