Thursday, September 1, 2011

உன்னதங்களைக் கடந்து சென்று நவீன சிந்தனைகளை உள்வாங்காமல் தமிழ் ஆய்வுப் புலம் வளராது, செழுமையடையாது -முனைவர் .தே.லூர்து


தமிழின் நுண்மான் நுழைபுலமிக்க பேராசிரியர் அரங்க. நலங்கிள்ளி அவர்களின் "இந்திய இடிபஸ் ஃபிரய்டிய நோக்கில் ஒரு வாசிப்பு" (A Freudian redings on the therory of Indian Oedipus) மிகச் சிறந்ததும், மிக நுட்பமானதுமான ஆய்வுநூல் தோழமை வெளியீடாக வெளிவந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்திய பேராசியர் .கே. இராமாநுஜன் அவர்கள் ' உளப் பகுப்பாய்வியலில்' உருவாக்கிய 'இந்திய இடிபஸ்' (Indiyan oedipus) என்ற உளப்பகுப்பாய்வுக் கொள்கையை மறுத்து மிக நுட்பமான ஆழங்கால்ப்பட்ட ஆய்வறிவு மூலம் அதனை "இந்தியாவில் ஈடிபஸ்" (Oedipus in Indiya) என்ற கருத்துருவாக்கமாக இந்நூலில் பேரா. அரங்க. நலங்கிள்ளி உருவாக்குகிறார்.

இந்நூலுக்கு மிகச்சிறந்த நாட்டார் வழக்காற்றியல் பேரறிஞரும், தமிழின் சிறந்த ஆய்வுப் புலமைப் பேராசிரியருமான மறைந்த பேரா.தே.லூர்து அவர்கள் மிகமுக்கியமான அணிந்துரையை வழங்கியுள்ளார். அதில் அவர் நூல் பற்றி மட்டுமல்லாமல் தமிழ் ஆய்வுலகம் பற்றிய முக்கியமானதும் தேவையானதுமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ் ஆய்வுப் புலம் பற்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்கிறார். அவருடைய அந்தக் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அந்த அணிந்துரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன. தலைப்பு போடவேன்றும் என்பதற்காக சிறியேன் மேலுள்ள தலைப்பை இட்டுள்ளேன்.

பேரா.தே.லூர்து பற்றி அறிந்துகொள்ள

இருபதாம் நூற்றறாண்டின் பிற்பகுதியில் 1950 -களில் தமிழிப் பேராசியர்களைப் 'பண்டிதர்கள்' என் கேலியும் கிண்டலும் செய்தனர் நவீனத் தமிழ் எழுத்தாளர்கள்.அவர்கள் புதுமை விரும்பாத பத்தாம் பசலிகள், பழம் பஞ்சாங்கங்கள் என்ற பொருளில் கையாண்டனர். இத்தகையவர்கள் மூடத்தனமான பக்தி பெருக்கினர் என்று கருதப்பட்டனர். இவர்களுக்குச சான்றாகத்தான் ஆடுசாபட்டி அம்மையப்பப் பிள்ளை என்ற கதை மாந்தரைப் படைத்தாரோ ராஜம் ஐயர் என்ற ஐயப்பாடு எனக்கு உண்டு.மேலும் அவர்கள் யாரையும் முன்னேறவிடாத வயிற்றெரிச்சல் பேர் வழிகள் என்றும் கருதப் பட்டனர். வைக்கோல் போர் நாய்கள் (Dog is the manget) தானும் உண்ணாது, பிறரையும் உண்ணவிடாது தடுக்கும் பிறவி போன்றவர்கள் என்று கருதப்பட்டனர். இதற்குச் சான்றாக புதுமைப்பித்தனின் 'காலனும் கிழவியும்' சிறுகதையில் வருமொரு வரியைக் குறிப்பிடலாம். "சுடுகாட்டுச் சிதையில் வெந்து நீராகும் வாத்தியார் உடல் ஒன்று கிழவிக்குக் கிடைக்கப் போகும் பெருமையைக் கண்டு பொறாமைப் புகையைகக்கித் தன்னை அழித்துக் கொண்டது". இப்படிப்பட்ட குறிப்புக்களைப் படித்துப் பலர் வருத்தப்பட்டிருக்கின்றனர். நானும் மனம் வருந்தியிருக்கின்றேன். ஆனால் தமிழ்ப் பேராசிரியர்கள் இக்கருத்துக்கு இன்றும் கூட அப்பாற்பட்டவர்களா?

சமயங்களின் அடிப்படைக் கருத்தாங்கங்களுள் புனிதம் (sacred) தீட்டு என்பவை நடூநாயகமானவை அடிப்படையானவை. இவற்றையெல்லாம் இலக்கியத்தின் வழி அடித்து உடைத்துத் தகர்த்தார் புதுமைப்பித்தன் (கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், அகலிகை, காலனும் கிழவியும், துன்பக் கேணி, பொன்னகரம்). மற்றொரு பக்கம் தந்தை பெரியார் புரட்சிக் கோடரியைக் கொண்டு சமூக, அரசியல் மரங்களின் ஆணிவேரைக் கில்லி எடுக்க முனைந்தார். புனிதம், தீட்டு என்ற கருத்தாங்கங்கள் பற்றி எமில் தர்க்கைம், மேரி டக்ளஸ் போன்றோர் எழுதியுள்ளனர். ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் நம் பேராசிரியர்கள் படிப்பதில்லை. படித்திருந்தால் இன்னும் இவர்கள் மூடப்பழக்கத்தில் முடிவற்ற கண்ணுறக்கத்தில் ஊறித்திளைக்க மாட்டார்கள்.

ஒரு முறை என்னுடைய நண்பர் ஒருவர் தமிழ்ப் பேராசிரியர்களை "திவசக் குருக்கள்", "சத்சூத்திரச் சவண்டிகள்" என்று கேலி செய்தார். அப்போதுநானும் அவர்களில் ஒருவன் தானே என்பதால் சுருக்கென்று மனதில் பட்டது. கோபம்கூட வந்தது. தற்போது அவர் எத்தகைய தீர்க்கதரிசி என்ற உணர்கிறேன். மேலும் எந்தப்புனிதமும் உடைக்கப்படும் என்பது குறித்துபெண்ணிய எழுத்தாளர் டாக்டர். செல்வி திருச்சந்திரன் எழுதுவதைக்க காண்போம்.

"இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் வாத,விவாதக் கருத்துக்களும் பலபேரை மிகவும் தாக்கியதாகவும் அறிந்தோம். சிலர் தடம்புரண்டு மனச் சிக்கலுக்குள்ளாகிவிட்டார்கள். சமயம்,மதம்,கிரியைகள்,பண்பாடு என்பன எல்லாம் ஒரு உன்னதமான உயரிய நிலையில் வைக்கப்பட்டு உணர்ச்சியனுபவங்களில் திளைத்தஒரு நிலைப்பாடாகக் காலங்காலமாகத் தூய்மையான கேள்வி கேட்கக்கூடாத, விவாதத்திற்கு உட்படுத்தப்படாத பொருளாக, வாழ்க்கை அனுபவமாக இருந்து வந்திருக்கிறது.கைலாசபதியின் கூற்றுப்படி அடிமுடி தேட எத்தனிக்கப்படாத ஒரு விடயமாக அப்படி அப்படியே ஏற்றுக் கொண்ட முடிந்த முடிபாகஇருந்தபடியால் ஆலயங்களின் போதனைகளும் அனுஷ்டானங்களுள் சமய போதகர்களின் வாக்குமூலங்களும் கேள்விக்குள்ளாக்கப் பட்டதும் அவற்றின் அசமத்துவ நிலைகளும் கொடூரங்களும் வெளிக்கொணரப்பட்டன. இது பலரைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிட்டது. உன்னதங்கள் உடைக்கப்பட்டு விட்டனவே என்ற ஆதங்கம் பலரைத் தாக்கிவிட்டது, எமது கருத்தரங்கின் வெற்றியை உணர்த்துவதாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். மனுதர்மமும் ஐந்தாம் வேதமாகக் கொள்ளப்படும் மகாபாரதமும் எப்படிச் சாதிக் கட்டுப்பாட்டையும் பிராமண ஆதிக்கத்தையும் சத்திரிய மேலாண்மையை நியாயப்படுத்திப் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறையையும், கொடூரங்களையும் சமயம், நீதி என்ற பெயரில் பேணி வந்தன என்பதற்குத் தற்போது நாம் ஆதாரங்களும், சான்றுகளும் முன்வைக்கத் தேவையில்லை. பொதுவாக முற்போக்குவாதிகளும் பெண்ணிலைவாதிகளும் ஏற்கனவே அதைச் செய்த விட்டார்கள்"(திருச்சந்திரன் V)

"பெண்ணும் மதமும் என்ற ரீதியில் நாம் சில விடயங்களை விளங்கிக் கொள்ள முயலும் பொழுதுஉலகளாவிய ரீதியில் நாம் சில பொதுமைகளை இனங்காணாலாம். புரட்சிக் குரலும் ஆங்காங்கே ஒலித்தன. குடும்பம், உறவுநிலைகள், கணவன் என்பது போன்ற புனித சமூக இருப்புக்கள் சிலவற்றை விட்டுவிலகி உடைத்தெறிந்த பெண்கள் மதவாதிகளாகியதும் கூட ஒரு விடுதலைவேண்டியே. மேற்கூறிய புனிதங்களை விட்டுவிலகும் ஒரு பெண்ணுக்கு மதம் ஒரு கவசமாகியது. மதம் என்ற பெயரில் அவர்கள் சமூக அங்கிகாரத்தைப் பெற்றனர். அப்படி ஒரு மதப் போர்வையைப் போடாவிட்டால் அவளைச் சமூகம் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கும். ஆண்டாள் உடல் இன்பம் வேண்டிக் கதறியது. ஆன்மீகத்திலும் ஆன்மாவும் பரம்பொருள் என்ற உவமைக்குள் அடக்கப்பட்டு ஆன்மாவும் பரம்பொருளும் இரண்டறக் கலக்கும் நிலைக்கு ஒப்பிடப்பட்டு பக்தி இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. காரைக்காலம்மையார் தனது ஆளுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாத கணவனைவிட்டுப் பிரிந்த பொழுது சிவனையே சார்ந்து தன் உளக்கிடைக்கு மாற்றுவழி தேடினாள்" (திருச்சந்திரன் VII)

மேலே எடுத்தாளப்பட்ட பெண்ணிய நோக்கு, இத்தகைய நோக்குகள் வரும்போது மாயைகள் புனிதங்கள் உடைக்கப்படும். தகர்ந்துபோகும். ஆதலின் இத்தகைய பார்வைகள் தமிழுக்கு மேலும் வளம் சேர்க்கும். அறிதொறும் அறியாமை புலப்படும்.

புத்தம்புதிய முறையில் திறனாய்வுகள் வரும்போது நம் பண்டிதர்கள், தங்களால் அத்தகைய முறையில் எழுதமுடியவில்லையே என்ற தாழ்வுச்சிக்கலுக்கு ஆட்பட்டுக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது இயல்பே.

என்னிடம் ஆய்வாளர் ஒருவர் வந்தார். அந்தப் பேராசிரியரிடம் நீங்கள் மாணவர்களுக்கு என்ன பாடம் எடுக்கீறீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார் "திறானய்வு". நோக்கீட்டு நூல்கள் இலக்கியக்கலை, இலக்கியத்திறன், திறனாய்வியல் என்றார். 50 -களிலிருந்து இம்மூன்று நூல்கள்தானா? எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. சாஞ்சாச் சாயிற பக்கமே சாயும் செம்மறி ஆடுகளுக்கு வேறு வழியில்லையா?

ஒருகாலத்தில் மார்க்சிய அடிப்படையிலான சமூகவியல் திறனாய்வு என்றாலே நம் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேப்பங்காய். அதனை ஒரு பயங்கரவாதமாகவே பார்த்தனர். இதனைக் கைலாசபதியும், சிவதம்பியும், நா.வானமாமலையும், கேசவனும், தமிழவனும் தகர்த்தனர். தற்போது பல பேராசிரியர்கள் தங்கள் எழுத்துக்களில் அடிக்கட்டுமானம் , மேற்கட்டுமானம் என்ற பதங்களை உதிர்கிறார்கள். பாசாங்குதான் இவர்களின் சிறந்த கொள்கை (hypocracy is best policy)

இன்று அனைத்துலக அளவில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக்கொண்டால் பல்துறை இணைவு ஆய்வுகள் நடைபெறுகின்றன. நம்முடைய தமிழ் ஆய்வுகள் குறுகிப் போய்விட்டன. இதனையும் விட உண்மையான நல்ல ஆய்வுகள் நடைபெறவில்லை. சுருங்கச் சொன்னால் அவையெல்லாம் வெறும் "வாய்வுகளே" பக்தவச்சலபாரதியின் வாக்குகளில் சொன்னால் "செக்கு மாட்டு" ஆய்வுகளே. இந்த நிலைக்குக் காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல. மேலும் இங்குக் கோட்பாடுகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கோட்பாட்டாக்கம் செய்ய முயல்வதுமில்லை. செய்ய முயன்றவர்களுள் ஒருவர் தமிழவன். வேறுயாரும் என் கண்ணுக்கும் மனத்திற்கும் புலப்படவில்லை. ஆனால் மேலைக் கருத்தாங்களையும் பின்னை நவீனவியக் கொட்பாடுகளையும் அறிமுகப்படுத்தும் பேராசிரியர்கள் .மருதநாயகம், இரவீந்திரநாதன் போன்றவர்கள். இவர்கள் ஆங்கிலத் துறையிலிருந்து வந்த தமிழர்கள். மற்றவர்கள் ஆங்கிலேயர்கள்.

அண்மையில் கனடாவிலிருந்து பேராசிரியர் நா.சுப்ரமணியன் எனக்கு 'The Singer of Tales in Performance' நூலை அனுப்பியிருந்தார். அந்த நூல் வாய் மொழிப்பாடகன் எவ்வாறு பாட்டுக்கட்டுகிறான் என்பது பற்றிய வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டையும் அது தொடர்பான இயல்பான கலை (Immanent Art) என்ற கருத்தாக்கத்தையும், டெல்ஹைம்ஸ் என்பவரின் பேச்சு இனவரைவியல் என்ற கோட்பாட்டையும் (சமூக மொழியியல், மொழியியல் மானிடவியல்) இனக்கவிதையியலையும் இணைத்துப் புதியதோர் கோட்பாட்டை உருவாக்க முயல்கிறார் ஜான்மைல்ஸ் ஃபாலி (Jhon Miles Foly). மில்மன் பாரியைப் பற்றித தமிழ்ப் பேராசிரியர்கள் கேள்விப்பட்டிருப்பர். அதன் பின்னர், ஆல்பர்ட் பேட்ஸ் லார்டு, டேவிட் பினம், ஃபாலி, லாரி ஹாங்கோ போன்றோர் அக்கோட்பாட்டைத் தொடர்கின்றனர். அடுத்துத் தமிழியல ஆய்வுகளின் வளர்ச்சிக்கு எவ்வெப்புலங்கள் பயன்படும் என்பதை காண்போம்.

நாட்டார் வழக்காற்றியல், தமிழியல் போன்ற கல்விப் புலங்கள் வளராததற்குரிய காரணங்கள் யாவை?

பிறதுறைகள் வளரவில்லை. சமூகவியல், மானிடவியல், உளவியல், மொழியியல், சமூக மொழியியல், குறியியல், குறியீட்டியம் (Subra- segmental linguistics), இனப் பயிரியல் ( Ethno-botany), இன மருந்தியல் (ethno medicine) போன்ற புலங்கள் வளரவில்லை. அப்படி ஏதேனும் ஓரிரு ஆய்வுகள் எழுதப்பட்டிருந்தாலும் அவை தமிழில் எழுதப்படவில்லை.

ஆனால் ஆங்கில மொழி தன்னை வளப்படுத்திக் கொண்ட மொழி. உலக மொழிகள் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களைத் தனக்குள் அடக்கிக் கொண்ட மொழி மேற்குறிப்பிட்ட புலங்களில் வெளிவந்துள்ள நூற்பட்டியல்களைப் பார்க்கும்போது மலைப்பாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட புலங்கள் எல்லாம் தமிழியல் ஆய்வுக்கும் இன்றியமையாதவை. ஆனால் தமிழக்கத்தில் மேற்குறிப்பிட்ட சில துறைகள் இருந்தாலும் அவை செயல்படுவதில்லை. பணியாற்றும் பேராசிரியர்களெல்லாம் "வெந்ததில் பாதி முந்தியில் போடு" என்பது போன்றும், "எவம் பொண்டாட்டி எவங்கூடப் போனா என்ன? லெப்பைக்கி ரெண்டு துட்டு" என்று அக்கறை காட்டுவதில்லை. மேற்குலகம் விண்வெளி ஓடத்தின் வேகத்தில் போகும்போது நாம் நத்தையாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். இதைவிடப் போட்ட இடத்திலேயே கிடக்கும் எருமைச் சாணிகளாக இருக்கிறோம். இதனையும் மீறி ஏதேனும் ஆய்வுகள் நடந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி ஆய்வாளர்களை முடக்கிக் காயடித்து ஒழித்துவிட முயல்கிறோம். வெற்றிபெற்றுவிட்டதாக ஒரு வக்கிர இன்பம் பெறுகிறோம் (sadistic pleasure)

சில மாதங்களுக்கு முன் பேராசிரியர் முருகத்திரத்தினத்தின் 'வாய்மொழியும் வள்ளுவமும்' என்ற நூலைப் படித்தபோது அவருடைய நூலறிமுகப் பகுதியில் காணப்படும் பின்வரும் கூறற் மனதில் பட்டது.
"ஆராய்ச்சியாளருக்கு நோக்குகள் பல வேண்டும். அவற்றுள் சமூகவியல் நோக்கும் ஒன்று. சமூகவியல் நோக்கில் நாம் பலவற்றைப் பார்க்கிறோம் என்பது உண்மையே. ஆயினும் நாம் சமயத்தை சமூகவியல் நோக்கில் பார்க்கவில்லை, பார்ப்பதில்லை; துணிவும் இல்லை போலும். விநாயகர் சமயத்தை உளப்பகுப்பாய்வு நோக்கில் ஆய்ந்து நூல் வெளியிட்ட அமெரிக்க பேராசிரியர் ஒருவரை அமெரிக்க வாழ் இந்தியர் - பெரும்பாலும் வட இந்தியர் - வன்பு செய்து கொண்டிருக்கின்றனர் என்னும் செய்தி இங்குக் குறிக்கத்தக்கது. தமிழகத்தில் பெரியபுராணம் என்னும் சைவநூலை உளப்பகுப்பாய்வு நோக்கில் ஆய்ந்த முனைவர் பட்ட ஆய்வேடு கிளர்ச்சியால் திரும்பப் பெறப்பட்டதாம். இந்நிகழ்வுகள் தரும் செய்தி அதுதானே' (முருகரத்தினம் 2004: நூல் அறிமுகம்).

இந்த நல்ல செயலைச் செய்து காரைக்காலம்மையாரின் கற்பை/ புனிதத்தைக் காப்பாற்றிய பேராசிரியர்கள் யாராக இருந்தாலும் ஓர் ஆராய்ச்சியாளனைக் (இடிப்பசை) கொலை செய்தது எந்த விதத்தில் சரியாகும். ஃபிராய்டிய நோக்கில் சொன்னால் இந்த காயடிப்புச் செய்தவர்கள எல்லோரும் காயடிப்புச் சிக்கலால் துன்புறுபவர்கள் என்றே சொல்லலாம்.

மேலும் தமிழகத்தில் பல பேராசிரியர்கள் உளப்பகுப்பாய்வுத் திறனாய்வை அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஃபிராய்டியம் இவர்களுக்கு ஓர் ஒவ்வாமை நோய். இந்த நோயின் காரணமாகப் ஃபிராய்டியம் பற்றி ஒரு வகையான கிலிபிடித்து அலைகின்றார்கள். இவர்களும் மனநோயளிகளே. இவர்கள் தங்கள் மாணவர்களையும் அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள். அஃது ஆபாசம் பற்றியது என்ற கருத்தை விதைத்து வைத்திருக்கின்றார்கள். இல்லையென்றால் எதனையும் படிக்காமலேயே ஃபிராய்டியம் அப்போதே மறுக்கப்பட்டுவிட்டது என்பார்கள். எப்படி என்றால், யூங் மறுத்துவிட்டார் என்பார்கள். எப்படி? அது ஃபிரய்டியத்திலிருந்து வந்த வளர்ச்சிதானே. பிராய்டுக்கும் யூங்கிற்கும் நடந்த விவாதம் பற்றிய கடிதங்களில் ஒன்றையாவது இவர்கள் படித்திருப்பார்களா? "பிதாவே இவர்கள் தாங்கள் செய்வது இன்னது என்பதை அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்பதே எம் வேண்டுதல். அல்லது சற்றே விலகியிரும் பிள்ளாய்".

நம் பேராசிரியர்களின் அச்சத்தை விலக்கி நல்ல மாணவர்களை வளர்க்க, உருவாக்கவே நண்பர் தி.கு.இரவிச்சந்திரன் என்ற தகுதியுள்ள இளைஞரை அழைத்து ஃபிராய்டியத்தை அறிமுகப்படுத்த நூலொன்றை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் முயன்றது. இன்ற அது தமிழறிஞர்களாலும் மாணவர்களாலும் பாராட்டப்படுகிறது. அதை எழுதியவர் நண்பர் நலங்கிள்ளியின் மாணவர் என்பதில் அவருக்கு பெருமை சேரும்.

நலங்கிள்ளியைப் புதுச்சேரியில் முதுபெரும் எழுத்தாளர் பல்துறை ஆளுமை பெற்ற கி.ரா. நடத்திய கருத்தரங்கில் தான் சந்தித்தேன். கதைகள் குறித்து அவர் இடையிடையே வெளியிட்ட கருத்துக்கள் தெளிவாகவும், சுவையாகவும், சூடாகவும் இருந்தன. என்னுடைய மனதில் இந்த இளைஞர் கவனத்திற்குரியவர், மதிப்புக்குரியவர் என்று பட்டது. அன்று முதல் இன்றுவரை அந்த நட்பு தொடர்கிறது. என்னுடைய நண்பர்கள் எல்லோரும் நல்ல அறிஞர்களே. போலிகள் அல்ல. அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக என்னை நெருங்க மாட்டார்கள். உங்களுடைய ஆய்வு மாணவர்களின் ஏடுகளை எனக்கு அனுப்பி வையுங்கள், உங்கள் ஆய்வு நிறுவனத்துக்கு என்னைப் பேச அழையுங்கள் என்ற கேட்பவர்களை அறவே வெறுத்து தொடர்பு கொள்ளாது ஒதுக்கியிருக்கிறேன். ஆனால் நலங்கிள்ளியின் ஆழ்ந்த உளப்பகுப்பாய்வால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். உளப்பகுப்புத் திறனாய்வில் ஈடுபட்டிருப்போ மிகச் சிலரே. அவர்களுள் நலங்கிள்ளியும் ஒருவர். அவருடைய நுட்பமான ஆய்வுக்கு, hairsplitting logic சொல்லுவார்களே, அதாவது மயிரையும் பிளந்து ஆய்தல் என்ற தருக்கத்திற்கு இந்த நூலே சான்று.

.கே.இராமானுஜன் உலக அளவில் புகழ்பெற்றவர். அறிஞர்களாலும், மாணவர்களாலும் மதிக்கப்பெற்றவர். சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர். அவர் இல்லாத அந்தப்பல்கலைக் கழகத்தைச் சுடுகாடு, சுடுகாடு என்று என்னிடம் வநந்த பெர்னார்டு என் மாணவர் குறிப்பிட்டார். இராமனுஜன் எழுதிய அக்கட்டுரைதான் 'இந்தியன் இடிபஸ்' என்பது.

தமிழ்நாட்டில் எதனையும் திறனாய்வுக்கு உட்படுத்தாது ஏற்றுக் கொள்வது நம் பழக்கம். ஆனால் நலங்கிள்ளி அவரோடு முரண்படுகிறார். விவாதத்தில் ஈடுபடுகிறார். தம் கருத்தை மிக நுட்பமாக வெளியிடுகிறார். இதுவரை விவாதத்தில் ஈடுபடும் நூலை நான் படித்ததில்லை. விவாதங்கள்தான் கருத்துக்களை, ஆய்வை வளர்க்கும். இந்தக் கருத்துகளை வேறொருவர் மறுக்கலாம். ஆதரிக்கலாம். ஆங்கிலத்தில் "seminal writer" என்று சொல்லுவார்கள். அதாவது வித்தைப் போன்று விளவைப் பெருக்குபவர் என்பார்கள். அத்தகைய ஒருவர் நலங்கிள்ளி. இன்று இராமனுஜன் நம்மிடையே இல்லை. அவருடன் ஒரு பயிலரங்கில் கொடைக்கானலில் ஏறக்குறைய ஒரு மாதம் பழகியது இன்றும் நினைவில் உள்ளது. அவரும் டண்டிசும் "myth" குறித்த விவாத்தில் கடுமையாக ஈடுபட்டது, இன்றும் நினைவில் நிற்கிறது. இராமனுஜன் எழுதிய கட்டுரை ஏறக்குறைய 25 பக்கங்களுக்குள் இருக்கும். அதனை மறுப்பதற்காக 200 பக்கங்கள் கொண்ட நூலைஎழுத முடியும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இந்த நூலைப்படிப்போர் நலங்கிள்ளியினுடைய அறிவு நுட்பத்தையும் அவர் ஃபிராய்டியத்தில்எந்த அளவு ஊறித் தோய்ந்தவர் என்பதையும் உணர்வர். உண்மையில் சொல்லப்போனால் அவருக்கு எதிராக ஃபிராய்டிய ஆய்வுக்கு தடையாக இருந்தவர்களே இதனை எழுதச் செய்தார்கள் என்பது என் கருத்து. முடிந்தால் அவருடைய கருத்தை மறுத்து அல்லது ஆதரித்து எழுதுங்கள்.

இங்குத் தமிழத்தின் பம்மாத்தியல் பேராசியர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். புனிதங்கள் என்று எதுவுமில்லை. பெரியபுராணம் என்றாலும், பைபிள் என்றாலும் அவை பனுவல்களே. புனிதங்கள்உடைபடும். காலம் என்பது எல்லாவற்றையும் மாற்றிப் போடும். இந்த விடத்தில் புதுமைப்பித்தனின் ஒரு கூற்று எனக்கு நினைவுக்கு வருகிறது

"என்னமோ அதை எழுதக் கூடாது, இதை எழுதக் கூடாது அப்படின்னு பாத்திகட்டிப் பூச்சி புடிக்கிறாகளே அவுஹளுக்கு நம்ம கதை பிடிக்காது. நான்தான் கேக்கிறன். ஏன்யா? எதை எழுதினா என்ன? அதுக்குக்கூட
எனக்குச் சுதந்திரம் கிடையாதா? பெரியவுஹ சொல்ராங்கிறதுக்காக உண்மையை மறைக்க முடியுமா? கருவைத் தடைசெய்யலாம். கருத்தை தடை செய்ய முடியுமா?" (தொ.மு.சி. ரகுநாதன் 2006.132).

இந்த ஆய்வை எழுதியதற்காக நண்பர் நலங்கிள்ளியை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், நன்றி செலுத்துகிறேன். அவர் கொடுங்கூற்றுக்கிரையாகும் வேடிக்கை மனிதரல்லர். சாதனையாளர்.

"காலத்திற்கேற்ற வகைகள் -அவ்வக்
காலதிற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றுமில்லை"
- பாரதி

பயன்பட்ட நூல்கள்:

1. திருச்சந்திரன். செல்வி : "பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியல்களையும்
கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு" -கொழும்பு: பெண்கள் கல்வி ஆய்வு வட்டம்.

மேற்குறித்த நூல் இந்த இணைப்பில் இணைய வாசிப்புக்கு கிடைக்கும்

2.ரகுநாதன். தொ.மு.சி. (2006) : புதுமைப்பித்தன் வரலாறு, சென்னை: என்.சி.பி.எச்

3.foley, Jhon Miles : The singer of Tales in performance: Bloomington: Indiana university press.

4.முருகரத்தினம். தி : வாய்மொழியும் வள்ளுவமும், மதுரைச் தமிழ்ச்சேரி

No comments:

Post a Comment