Wednesday, July 12, 2017

The Uses Of Reading - எதற்காக நாம் புத்தகங்கள் நிரம்பிய நூலகத்தைக் கட்டிக்காக்க வேண்டும்?"

வாசிப்பு குறித்தும் வாசிப்பின் வரலாறு குறித்தும் மிகச்சிறந்த நூல்களை ஆக்கிய அல்பெர்ட்டோ மங்குவெல் The Uses Of Reading என்ற தலைப்பில் வாசிப்பு, நூலகம் என்பன குறித்த சிந்தனைகளை எழுதியிருந்தார். அதனை தேவா அவர்கள் மிகச் சிறப்பாகத் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 'புதிய சொல் 5' இல் வெளிவந்திருந்த அம்மொழிபெயர்ப்பு இருபகுதிகளாக இங்கு பதிவேற்றப்படுகிறது. மூலகக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

The Uses Of Reading

"There's no use trying," she said: "one can't believe impossible things."
"I daresay you haven't had much practice," said the Queen. "When I
was your age, I always did it for half-an-hour a day. Why, sometimes
I've believed as many as six impossible things before breakfast."
Through the Looking-Glass, Chapter V"

எதற்காக நாம் புத்தகங்கள் நிரம்பிய  நூலகத்தைக் கட்டிக்காக்க வேண்டும்?" ஓர் எதிர்காலத்துவவாதி (எதிர்காலத்துவவாதி, விஞ்ஞான புனைகளை வாசித்திராத வாசகர்களுக்காக, இலத்திரனியல் துறையின் ஒரு கிளை, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி எதிர்வு கூறுபவர்கள்) சிரித்தமுகத்துடன் அண்மையில் நடைபெற்ற நூலகப்பேரவைக் கூட்டத்தின் போது கேட்டார். "விரிவாற்றலுடைய மிக நுண்ணிய சிப்சிபில் (Chip) பதிவேற்றக்கூடிய புத்தகங்களை, பெறுமதிமிக்க இடப்பரப்பில் முடிவற்ற அச்சுப்பிரதிகளாக ஏன் கட்டிக்காக்க வேண்டும்? (புத்தகங்களைத் தேடி) ஏன் வாசகர் நூல்நிலையங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும், அங்கு தான் தேடிச் சென்ற புத்தகங்கள் கிடைக்குமா என அறிந்துகொள்வதற்காக காத்திருக்கவும், (அந்தப்புத்தகங்கள்) இருந்தால் அதனைச் சுமந்து வந்து பின் எல்லைக்குட்பட்ட கால நிர்ப்பந்தத்திற்கு அவரை ஏன் ஆளாக்க வேண்டும்?

வாசகரின் அருகாமையிலுள்ள நூலகத்தில் இல்லாத ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஏன் அவருக்கு மறுக்கப்படவேண்டும். நொய்மையான புத்தகக்கட்டு, நிறம் மங்கும் மை, பூச்சி, எலி, புழு, திருட்டு, நெருப்பு, நீர் போன்ற அபாயங்களுக்கு ஏன் முகங்கொடுக்க வேண்டும்? அலக்ஸ்சாண்டிரியா நூலகம் முழுவதுமே உங்கள் விரல் நுனியின் சொடுக்கில் வரவழைக்கவும், நீங்கள் விரும்பும் உங்களுக்கு வசதியான இடத்தை தேர்வுசெய்துகொள்ளவும் முடியுமல்லவா? உண்மை என்னவெனில் நமக்குத் தெரிந்ததுபோல் மனிதகுலம் முழுவதற்குமே  முன்போல் வாசிப்புத்தேவை இருப்பதாகத் தெரியவில்லை. நூலகங்கள் உயர் நோக்கமுடையவையாக இருந்தாலும் காலாவதியாகிப்போன பிரதிக் கொள்கலன்களான, புத்தகங்களைக் கைவிட்டு மின் பிரதிகளுக்கு மாறவேண்டும். முன்பும் இது நடந்தேறியதுதான் சுடுமண்ஏட்டுவில்லை, தோல் சுருள் பிரதிகளைக் கைவிட்டுத் கட்டுப்புத்தகளுக்கு (Codex) மாறியது போல் தவிர்க்க முடியாததை ஏற்று குட்டன் பேர்க்கின் யுகம் முடிந்ததென்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்"

துரதிஸ்ரவசமாகவோ அதிஸ்ரவசமாகவோ நான் கொடுத்த பொழிப்புரை தவறான கருத்தடிப்படை கொண்டது. குலைந்தபோன நூலகம் அதன் எல்லாப் பெருமிதத்துடனும் தன்னைப் புத்தாக்கம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம், அங்கு பரிசுத்த ஆவியில் மூழ்கிய ஒருவகைப் பரவச நிலையில், ஒவ்வொரு வாகசரும் அப்போஸ்தலர்கள் மீது தூயஆவியின் கரிசனையினூடு மோட்சத்திலிருந்து பொழிந்த நெருப்பு மழைபோல் எண்ணற்ற மொழிகள் பேசும்  திறமையைப் பெறுவதில்லை. அதே போல் குறிப்பிட்ட பிரதிகள் வெவ்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாய் சொல்லப்படுவதுமில்லை. புத்தகங்களும் மின்சேமிப்பகங்களும் (Electronic Memory)  மனதில் நாம் வைத்திருக்கும் ஞாபகங்களும் இருவேறு படைப்புக்கள். அவை ஒரே பிரதிகளைத் தம்மகத்தே கொண்டிருந்தாலும் வெவ்வேறு குணநலங்களைக் கொண்டவை. புனித 'அகஸ்ரினின் கணனி"யில் விவாதித்தது போல் அவை கருவிகளைக்கொண்டு ஒருவகை உலகை நாம் தெரிந்து கொள்ள எடுக்கும் முயல்வில் அவற்றின் தன்மை பல்வேறு வகைகளில் நமக்குத் துணைசெய்கின்றது. எனவே இவற்றில் ஒன்றை முழுமையாக இல்லாதொழிக்க நம்மைக் கட்டாயப்படுத்துவது வஞ்சகத்திலும் கீழானது; பயனற்றது. Statius இன் பாதிமறந்துபோன மேற்கோளைக் கண்டடைய, அதேகால இடைவெளியில் பிளற்றோவின் பொருள் பொதிந்த மடலை வாசிக்க இன்று எவராலும் இயலும், இதற்கு புனித ஜெரோமின் (St Jerome) அறிவாழம் தேவையில்லை. இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் கட்டற்ற வாய்ப்பிற்கு நன்றி. இருந்தும் பக்கங்களின் மூலைகள் பாவனையில் நாய்க் காதுகளாய்  மடிந்துபோன புத்தகத்துடன் ஓய்வாய் நாம் நடமாடிய வாசிப்புப் பரப்பை மீள்தரிசிப்பதும் ஓரங்களில் முந்தைய விளக்கங்களையும் குறிப்புகளையும் பார்ப்பதிலும் காகிதத்தினதும் மையினதும் ஆற்றுகை உணர்வைச் சுகிப்பதும் ஏறத்தாழ எவராலும் அனுபவிக்க முடியும். கட்டுப்புத்தகங்களின் விடாப்பிடியான இருப்புக்கு நன்றி. ஒவ்வொரு தொழில்நுட்பமும் தனக்கெனச் சிறப்புக்களைக் கொண்டது ஆதலால் இலத்திரனியல் சொல் அச்சுச் சொல்லின் மீது அழித்தொழிப்புப் போரை நடாத்தவேண்டும் என்ற எணண்த்தைக் கைவிட்டு ஒவ்வொரு தொழில் நுட்பத்தையும் அதன் சிறப்புக்களுடன் ஆராய்தல் நலம்பயக்கும்.

மரபார்ந்த நூலகங்கள் மனிதமூளை போலல்லாது கொள்கலனின் ஆர்வம் கொள்ளும் அளவைவிடக் குறைவானதாக இருப்பது நூலகங்களின் இயல்புபோலும். செலிபரல் நியுரோன்கள் நாம் எந்த அளவு தகவல்களை அங்கு சேகரித்தாலும் அதைவிட அதிகளவு அறிவைத் தேக்கிவைக்கும் ஆற்றலுடையவை என எமக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது. மூளைமடல்களின் மென் வலைப்பின்னலில் இதனைச் சேமிக்கின்றோம். கணக்கிடமுடியாத  நிலைத்தட்டுக்கள் எம் இரகசிய நடைக்கூடத்தின் இருபக்கங்களிலும் நம் வாழ்நாள் முழுமையும் வெறுமையாகவே இருக்கின்றன - நூலகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள் என்ற முதுமொழியைப் பொய்யாக்கி இச்செய்தியால் அவர்கள் உண்மையிலேயே பொறமைப்படுவார்கள். பிறப்பிலிருந்து இறப்புவரை நாம் சொற்கள், உருவச்சாயல்கள், மனக்கிளர்ச்சிகள், தொட்டறிவு, அகத்திற உணர்வு, கருத்துருவங்கள் என உலகின் ஞாபகங்களைத் தொகுத்துள்ளோம். அனுபவங்களால் நாம் நமது மூளையை நிரப்புகின்றோம் என நம்பினாலும் நாம் எவ்வளவு தான் நிரப்பினும் பண்டைய எழுத்தேடு பலம்செஸ் (Palim Psests) போல் அங்கு எப்போதும் போதிய இடம் இருந்து கொண்டே இருக்கும். பலம்செஸ் ஏட்டில் பழைய பதிவின் மீது புதுப்பதிவுகள் மீண்டும் மீண்டும் எழுதப்படும். 'மனித மூளை என்றால் என்ன?" 1869 இல் கேள்வி எழுப்பினார் Charles Baudelaire "அது மிகப்பெரிய இயற்கையான பலம்செஸ்ஸே ஒழிய வேறென்ன?" பவுடிலியரின் முடிவிலா பலம்செஸ் போல் எம்மன நூலகத்திற்கும் நிறைவு அளவென்பதில்லை. கற்களாலும் கண்ணாடிகளிலுமான நூலகங்களில், சமூகத்தின் ஞாபகப் பண்டகசாலைகளில் எப்படியாயினும் இடப்பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும். ஆட்சி அதிகாரத்தின் மட்டுப்படுத்தல், தேர்வுக்கான காரணங்கள், போதிய நிதி ஒதுக்கீடின்மை திட்டமிட்ட, தற்செயலான அழிவு என்பன சில காரணங்கள். நாங்கள் சேர்த்து வைக்க விரும்பும் புத்தகங்களுக்கு என்றுமே இடவசதியில்லை. இந்த சிறைவைப்பு நிலையை உடைத்தெறிய எங்கள் தொழில்நுட்பம் மெய்நிகர் நூலகங்களை உருவாக்கிவிட்டது. இதன் நிறைவளவு முடிவிலியை நெருங்குகிறது. இருந்தும் இந்த மின்பேழைகள் எதிர்காலச் சந்ததியினருக்கு பிரதியின் ழுமுப்பரிமாணத்தை அல்லாது சில வடிவங்களையே காப்பாற்றி கையளிக்கும். இந்த ஆளில்லா வெற்று நூலகங்களில் பிரதியின் அடிப்படை அவதாரம் கைநழுவிவிடுகின்றது, சொல்லின் பருவுடல் தொலைந்துவிடுகிறது.

மெய்நிகர்வெளி நூலகம் அதற்கே உரிய மேம்பாடுகள் உடையது. ஆதலால் தொட்டுணரக்கூடிய நூலகத்திற்கு இனித்தேவை இல்லை எனக் கூறிவிடமுடியாது. என்னதான் இலத்திரனியல்த்துறை நம்மை எதிர்மறை முடிவைநோக்கி நகர்த்த  முயன்றாலும் கூகிளும் அதனொத்த சகோதர நிறுவனங்களும் எவ்வளவுதான் தங்களை மூதாதையர்வழி அறிவுச் செல்வத்தை சுரண்டுபவர்களாக நாம் பார்த்துவிடாது தாம் தர்மசிந்தை உள்ளவர்களாக, அதுவே தம் அடிப்படை எனக்காட்டவே முயல்கின்றன. உலக எண்ணிம நூலகம் ஒரு சர்வதேச நிறுவனமாக யுனஸ்க்கோ, ஐக்கிய அமெரிக்க நூலகப் பேராண்மைக் கழகம், பிரான்சிய நூலகக் குழுமம் இன்னும் பிற சர்வதேச நாடுகளின் நூலகங்களின் அனுசரணையுடன் இயங்கும் முக்கியமான பிரமாண்ட அமைப்பு. அதன் இயக்கத்திற்கான பணத்தின் ஒரு பகுதி கூகிளிடமிருந்து கிடைத்தாலும் இன்றுவரை (இன்னும் சிலகாலத்திற்கு) இது வியாபாரமல்லாது இலவசமாகவே இருக்கின்றது. இவ்வாறான மெய்நிகர்வெளி நூலகங்கள் உருவாகிக் கொண்டிருப்பினும் மரபுவழி நூலகங்களின் தேவையும் இல்லாது போய்விடவில்லை. ஒரு பிரதியின் மின்பதிவும் அதே பிரதியின் அச்சுப்பதிவும் வெவ்வேறானவை. ஒருவரின் தனிப்பட்ட நினைவில் பதிந்திருக்கும் ஒரு வரியும், பதிவாக்கம் செய்யப்பட்ட அதே வரியும் முன்னையதுக்கு பின்னையது பிரதியீடு ஆகாது. ஒரு பிரதியின் பொருந்து சூழல், கலை மூலமுதல் தாங்குகை, இயற்பொருள் வரலாறு, அனுபவம் என்பன எவ்வாறு சொற்தொகுதி ஓசை இனிமை அப்பிரதியின் பகுதியாய் இருக்கின்றதோ அந்த அளவு இவையும் சமபங்கு வகிக்கின்றது. சொல்லின் நேர்பொருள் போல் எழுத்து மூலம் புறக்கணிக்கத்தக்கதல்ல (Matter is not inmaterial). மரபார்ந்த நூலகங்களின் சிக்கல்கள் - ஒரு சார்புத்தேர்வு, தற்சார்பு, வகைதொகைப்படுத்தல், படிநிலை அதிகார அடிப்படை பெயர்ப்பட்டியல் தொகுப்பு அது நடைமுறைப்படுத்தும் தணிக்கை, ஆவணப்படுத்தல் இயங்குவிதிகள்- தொடர்ந்து கற்றறிந்த சமூகமென நம்பும் எல்லாச் சமூகத்திடமும் இருந்துகொண்டேயிருக்கிறது. நம் மனநூலகம் நம்மால் என்றுமே வாசிக்கமுடியாத நூல்கள் பற்றி ஓயாது சிந்தித்து மாயும். ஏனெனில் அந்நூல்களை வாசித்து நமதாக்கினோம் என்ற உரிமை நம்மிடமில்லை. சமூக ஞாபகத் தொகுப்பு நூலகங்கள் நூலகரின் தேர்வுப்பட்டியலில் சேர்க்காத: நிராகரிக்கப்பட்டவை, கைவிடப்பட்டவை, வரையறைக்குட்பட்டவை, இழிவாகக் கருதப்படுபவை, தடைசெய்யப்பட்டவை, பெரிதும் விரும்பப்படாதவை அலட்சியம் செய்யப்படும் புத்தகங்கள் என எல்லா நூல்களையும் பற்றிக் கவலைப்படும்.

நம் அறிவுஜீவி வாழ்க்கையில்; ஒரேயொரு கேள்வி திரும்பத் திரும்ப ஊசலாடிக் கொண்டிருக்கும். நேரம் போதவில்லை என்று அங்கலாய்க்கும் வாசகர்களையும் இடம்போதவில்லை என வருந்தும் வாசகர் குழுமத்தையும் ஒருசேர இக்கேள்வி அலைக்கழிக்கின்றது. என்ன நோக்கத்திற்காக நாம் வாசிக்கின்றோம்? மேலும் மேலும் நாம் தெரிந்துகொள்ள நாம் விழைவதன் காரணமென்ன? விலகி விலகிப் போகும் அறிவெல்லைக்கோட்டை தொட்டுவிடும் முயல்வா? இந்த தீரச்செயல்களில் கண்டெடுத்த புதையல் செல்வங்களை ஏன் நாம் சேமிப்புக்கிடங்கான கல்லினால் கட்டப்பட்ட நூலகங்களிலும் மின் நினைவகங்களிலும் பதிந்து வைத்துள்ளோம்? இதையெல்லாம் ஏன் செய்கின்றோம்? அக்கறையுள்ள எதிர்காலத்துவவாதி கேட்ட கேள்வியை ஆழமாகப் பார்த்தால், வாசிப்பு ஏன் முடிவிற்கு வருகின்றது என வியந்து கொண்டிருப்பதை விட்டு "வாசிப்பின் எல்லை என்ன?" என நாம் கேட்கவேண்டும்.

சிலவேளை தனிப்பட்ட அனுபவம் இந்தக்கேள்வியை ஆராய உதவலாம்.

2008 இல் கிறிஸ்மஸ்ஸிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு உடனடியாக அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்யவேண்டியது கட்டாயம் என்று சொல்லப்பட்டது. எவ்வளவு அவசரமென்றால் நான் வைத்தியசாலை செல்வதற்கு முன்பு தேவையானவற்றை எடுக்கக்கூட நேரமில்லை. அவசரசிகிச்சை அறையொன்றில் படுத்திருந்தேன். கையில் அன்று காலை வாசித்த புத்தகத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதே என்னை இயல்பாக உணரவிடவில்லை. பரபரப்பு உணர்வுமேலிடக் கட்டிலில் கிடந்தேன். Cees Nooteboom இன் Delightful in the Dutch Mountains ஐ வைத்தியசாலை வந்த சில மணித்தியாலங்களிலே வாசித்து முடித்துவிட்டேன் இனிவரும் பதின்நான்கு நாட்கள் உடல்நலம் தேற வைத்தியசாலையில் வாசிக்கப் புத்தகங்களின்றி இருக்க வேண்டுமே என்பது பொறுப்பதற்கு முடியாத பெரிய சித்திரவதை. என் சகா எனது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துவந்து தரவா? எனக் கேட்க நன்றியோடு அந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டேன். ஆனால் எந்தப் புத்தகங்கள் எனக்கு வேண்டும்.

Alberto Manguel
Ecclesiastes இன் ஆசிரியனும் Pete Seeger உம் எங்களுக்கு எல்லாவற்றிக்கும் ஒவ்வொரு பருவம் உண்டென்று கற்பித்துள்ளார்கள். நான் அத்துடன் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு புத்தகம் உண்டென்று சேர்த்துக்கொள்ள நினைக்கின்றேன். ஏதோ ஒரு புத்தகம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமல்லாதது என்பதை வாசகர் அறிந்து வைத்துள்ளார். பிழையான தருணத்தில் பிழையான  புத்தகம் கைக்கெட்டிய வாசகர் Roald Amundsen ஐப் போல் பரிதாபத்திற்குரியவன். Rold வடதுருவத்தைக் கண்டுபிடித்தவர். அவரின் புத்தகப்பை புதைபனியில் மூழ்கிப் போய்விட்டது எனவே கையில் மீதமிருந்த Dr John Gauden இன் சகிக்க முடியாத வர்ணனையுடனான புத்தகத்தை ஒவ்வொரு கொடும்பனிக் குளிரவில் தனிமையின் தவிப்பில் தன் பாடுகளுடன் வலுக்கட்டாயமாக வாசிப்பதன்றி வேறுவழி அவருக்கிருக்கவில்லை. வாசகனுக்கு தெரியும் கலவிக்குப்பின் வாசிக்கப் புத்தகங்களுண்டு. விமான நிலையத்தில் காத்திருக்கும்போது வாசிக்கப் புத்தகங்களுண்டு.  காலை உணவு மேசையில் வாசிக்கப் புத்தகங்களுண்டு. குளியறையில் வாசிக்கப் புத்தகங்களுண்டு. தூங்க முடியாத வைத்தியசாலையில்  இருக்கும்போது வாசிக்கப் புத்தகங்களுண்டு. யாராலுமே ஏன் முதல்தர வாசகனுக்குக்கூட சில தருணங்களில் சில புத்தகங்கள்தான் பொருந்தும் மற்றைவை ஏன் பொருந்தாதென்பதை முழுமையாக விளக்கிச் சொல்ல முடியாது. விளக்கமுடியாத வகையில் மனிதர்களும், தருணங்களும் புத்தகங்களும் புரிந்துகொள்ள முடியாதவாறு பொருந்திப் போகின்றன அல்லது முரன்படுகின்றன.

வாழ்வின் குறிப்பிட்ட சில தருணங்களில் நாம் ஏன் ஒரு புத்தகத்தின் தோழமையைத் தேர்ந்தெடுக்கின்றோம். ஒஸ்கார் வைல்ட் சிறையிலிருந்தபோது வாசிக்கக் கேட்ட புத்தகப் பட்டியலில் Stevenson இன் Treasure Island,  பிரெஞ் - இத்தாலியன் உரைநடை விளக்கப்புத்தகமும் இருந்தன. மாவீரன் அலெக்ஸ்சாண்டர் தன் போர்முனைக் காலங்களில் ஹோமரின் இலியட்டை எடுத்துச் சென்றார். Jhon Lennon  இன் கொலையாளி J.D.Salinger இன் The Cacher in the Rye ஐ தன்னுடன் வைத்துக் கொள்வது பொருத்தமானதெனத் தன் குற்றத்தைத் திட்டமிடும்போது முடிவெடுத்தான். புறவெளி வானோடிகள் தங்கள் பயணத்தின் போது Ray Bradbury இன் Martian Chronicles ஐ தம்முடன் எடுத்துச் செல்வார்களோ அல்லது மாற்றாக André Gide இன் Les nourritures terrestres? அவர்கள் தேர்வாக இருக்குமோ?. Mr. Bernard Madoff இன் சிறைக்காலத்தில் பணத்தைக் கையாடல் செய்த Mr. Merdle தன் குற்றச் செயல் கண்டுபிடிக்கப்பட்டால் அவமானம் தாங்க முடியாதென்பதற்காக இரவல் வாங்கிய சவரக் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்ட பாத்திரச் சித்தரிப்புடனான சார்ல்ஸ் டிக்கன்சின் Little Dorrit நாவலையா கேட்டிருப்பார்? பாப்பாண்டவர் பதிமூன்றாம் பெனடிக்ற் (Benedict XIII)   கஸ்ரிலோ செயின் அஞ்சலோவில் உள்ள தனது ஸ்ரூடியோ லோ விற்கு Charles-Louis Philippe எழுதிய Bubu de Montparnasse  புத்தகத்தின் பிரதி ஒன்றை எடுத்துச் சென்று பரீசில் ஆணுறைப் பற்றாக்குறை காரணமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பால்வினை நோய் சிபிலிஸ் தொற்று கட்டுக்கடங்காது பரவியதைப் பற்றி ஆராயவா போகின்றார்? நடைமுறையை ஒட்டிச் சிந்திக்கும் G. K. Chesterton தான் ஆளில்லாத் தீவில் கரையொதிங்கினால் எளிதுபடுத்திய கப்பல் கட்டும் விளக்கப் புத்தகமிருந்தால் நலமெனக் கற்பனை செய்தார். Mohamed Darwish அவரளவிற்கு நடைமுறையை ஒட்டிச்சிந்திப்பவரல்ல அப்படியான தருணத்தில் அவரின் தேர்வு போர்ஹேயின் Ficciones.

வைத்தியசாலைச் சிற்றறையில் என் துணைக்காக எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுக்கப் போகின்றேன்?

Assyrian Clay Tablet
மெய்நிகர்வெளி நூலகத்தின் பயன்பாடு பற்றிய கருத்து வேறுபாடுகள் எனக்கு இல்லை எனினும் நான் மின் புத்தகத்தை 'அசிரியன் எழுத்துப்பலகையின்' நவீன அவதாரமான Tablets  அல்லது Lilliputian i-pods அல்லது கடந்தகால இனிய நினைவுடனினைந்த கேம்போய் பாவனையாளன் அல்ல. Ray Bradbury கூறியதையே நானும் நம்புகின்றேன் 'இணையம் ஒரு பேரழிவு". எனக்கு பரீட்சையமானது விரல்களால்
உணரக்கூடிய பக்கங்களுடன் நீள அகல பரிமாணமும் காகிதத்தின், மையின் பருவுடலும். எனவே என் கட்டிலருகே அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களை என்னால் மனதில் வரிசைப்படுத்த முடிகிறது. அண்மைக்கால நவீன புனைவுகளைத் தவிர்க்கின்றேன் (அவை இன்னும் காலத்தால் புடம்போடப்படாதவை எனவே கவனம் தேவை) சுயசரிதங்கள் (கைகளில் சொட்டுசொட்டாக மருந்திறங்கும் என்னறையில் அவர்களின் பிரசன்னம் என் தனிமைக்கு கேடு. மற்றவர்கள் என் அறையில் இருப்பது எனக்கு எரிச்சலை உண்டுபண்ணும்) விஞ்ஞானக் கட்டுரைகள், துப்பறியும் நாவல்கள் ( மூளையைக் கசக்க வேண்டிஇருக்கும். அண்மையில் டாவினின் புத்துயிர்ப்பு காலம் பற்றி வாசித்து மகிழ்ந்தேன். பண்டைய க்ரைம் கதைகளையும் வாசித்தேன். குற்றச் சிந்தனையையும் சாமர்த்தியமான குற்றவாளிகள் பற்றிய விரிவான விளக்கம் எனக்கு சரியான மருந்தாக இருக்காது.) Kirkegaard   இன் Pain and Suffering ஐக் காட்டி செவிலியர்களை பயமுறுத்துவோமா என முன்னும் பின்னும் யோசித்துப்பார்த்தேன். மரணம்வரை தொடரப்போகும் நோய்,  ஆகவே வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கு என்ன வேண்டும்? ஆறுதலளிக்கும் உணவுக்குச் சமனானதொன்று தேவை. முன்பு மகிழ்வாக அனுபவித்து மீண்டும் மீண்டும் மகிழ்வைத் தரவல்லதும் பெரிய முயல்வுகள் எதுவும் தேவையின்றி உள்நுழையக்கூடியதும் மகிழ்வாக வாசிக்கக்கூடிய அதேவேளையில் என் மூளையை விழிப்பாகவம் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கக் கூடியதே. எனது சகாவை Don Quixote de la Mancha இரண்டு பாகங்களையும் கொண்டுவரும்படி கேட்டேன்.


(பகுதி 2 தொடரும்)

No comments:

Post a Comment