Tuesday, November 26, 2019

வரலாறு கடன் வாங்கிய வரலாற்றுப் புனைவு 'மோகனாங்கி'

தங்களின் எழுதப்பட்ட வரலாற்றுத் தகவல்களையும் நூல்களையும் ஆதராமாக் கொண்டு  வரலாற்று புனைவுகள் எழுதப்படுவதே வழமை ஆனால் ஒரு புனைவு வரலாற்றியலாளர்களுக்கும் வரலாற்று எழுத்துக்களுக்கும் மூலதாரமாக அமையுமாயின் அது அசாராரணமதானதும் வாசிப்பு வேட்கையைத்  தூண்டும் சுவாரசியம் மிக்கதாகம் அமைந்திருக்கும். 1895ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழின் முதல் வரலாற்று நாவலான மோகனாங்கி”  அவ்வாறான ஒரு புத்தகம்.  இதனாலே ஆய்வாளர் சுகந்தி கிருஸ்னமாச்சாரி “வரலாறு கடன் வாங்கிய புனைவு” என ‘மோகனாங்கி” பற்றி எழுதிய கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பார்.

மோகனாங்கி கதை நடைபெறும் மதுரை நாயக்க மன்னான சொக்கநாத நாயக்கர் மற்றும் தஞ்சை விஜயராகவ நாயக்கர்களின் சமகால மிஷனரிமார்களின் குறிப்புகளிலிருந்து மோகனாங்கி நாவலின் பாத்திரங்களும் வரலாற்றுக்களமும் சமகால மிஷனரிமார்களின் குறிப்புகளுடன் மிகத்துல்லியமாக ஒத்துப்போவதை சுட்டிக்காட்டிய அவர் தி.த.சரவணமுத்துப்பிள்ளையை துல்லியமான வரலாற்று நாவலாசிரியர் எனப் பாராட்டுவார்.

மோகனாங்கி 1895 பதிப்பு
சென்னை கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் நூலராக கடமையாற்றிய தி வாய்ப்பினைப் பயன்படுத்தி அங்கிருந்த கையெழுத்துப்பிரதிகளையும் ஏனையவற்றையும் படித்து கடுமையான தேடலையும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு இந்நாவலை எழுதிய தி..ரவணமுத்துப்பிள்ளை இந்தப் புகழுக்கு முற்றிலும் தகுதியானவரே. ஏனெனில் பின் வந்த சரித்திர நாவலாசிரியர்களுக்கு துணையிருந்த மாதிரி வரலாற்று நூல்களும் எதுவும் அவர்காலத்தில் அவர் தேர்ந்தெடுத்த வரலாற்று காலத்தைக் குறித்த இருக்கவில்லை. அவரே தனது நாவலில் அக்கால வரலாற்றை மீள எழுதினார்.  இதுவே தமிழின் ஏனைய வரலாற்று நாவலாசிரியர்களுக்கு இல்லாத பெருமையையும் சிறப்பையும் தி.த சரவணமுத்துப்பிள்ளையும் அவரெழுதிய ‘மோகனாங்கியும்” பெறுவதன் காரணமாக அமைகிறது.

தட்ஷிண இந்திய சரித்திரம்எழுதியபகடாலு நரசிம்மலு நாயுடு’ ‘தஞ்சை நாயக்கர் வரலாறு எழுதும்போது சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி நாவலைத் தமது வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக முருகேசு ரவீந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அளவில் முதல் 30 சரித்திர நாவல்களுக்குள்ளும் தென்னிந்திய அளவில் முதல் மூன்று சரித்திர நாவல்களுக்கும் உள்ளடங்கும் மோகனாங்கி’  இன்று தமிழின் முதல் வரலாற்று நாவல் என்று உறுதிப்பட்டுவிட்டது. ஆயினும் 'மோகனாங்கி' தமிழின் முதல் வரலாற்று நாவல் என்ற இடத்தை அவ்வளவு சுலபமாக அடையவில்லை. தமிழ் இலக்கியத்தில் நவீன சிந்தனைகளின் தொடக்கமாக அமைந்த தொடக்ககால நாவல்கள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலானோர்மோகனாங்கிதொடர்பில் 'முதல் வரலாற்று நாவல் என்று கருதவில்லை.

மோகனாங்கி பற்றிய தகவல்களை சரியாக முதலில் கவனப்படுத்தியவர் சில்லையூர் செல்வராசன். தமிழ் வரலாற்று நாவல் உலகில் ‘மோகனாங்கி’யின் முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்தியதில் சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் சேர்ந்து எழுதியதமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி’ என்ற நூல் தவிர்க்க முடியாதபடிக்கு மிக மிக முக்கியமானது
ஏனெனில் தொடக்ககால தமிழ் நாவல்கள் தொடர்பில் ஆராய்ந்த தமிழின்  மிக முக்கியமான நாவல் விமர்சகர்களில் ஒருவராக அறியப்படும் கநாசுவின் தொடக்ககாலத் தமிழ் நாவல்கள் பட்டியலில்மோகனாங்கிஇடம் பெறவேயில்லை. கநாசுவின் வழி தொடக்ககால தமிழ் நாவல்கள் குறித்து ஆராய்ந்த R. E.Asher உடைய ' The Tamil Renaissance And The Beginnings Of The Tamil Novel' என்ற கட்டுரையில் மோகனாங்கி பற்றிய குறிப்பே இல்லை. தனிச்சிறப்பு மிக்க மிகச்சிறந் தமிழியல் ஆய்வாளர்களில் ஒருவரான Kamil V. Zvelebil  1974 இல் Jan Gonda வுடன் இணைந்து தொகுத்த A History of Indian Literature, Volume X: Dravidian Literature, Fasc. 1: Tamil Literature நூலில் 'நாவல்கள்' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்த 'வரலாற்று நாவல்கள்' பகுதியில் மோகனாங்கி குறித்து எதுவுமே கூறவில்லை. 1990 இல் A Comparison Of Two Literary Renaissances In Madras என்ற கட்டுரையை எழுதிய Richard Kennedy உம் வரலாற்று நாவல்கள் பற்றி குறிப்பிடும்போது மோகனாங்கி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வரலாற்று நாவல்களின் தோற்றக்கூறுகளை 1900 இற்கு முற்பட்டதாகக் கொண்டுசெல்லக்கூட இல்லை.

திராவிடவியலில் சீரிய பணிகளை செய்த பேரா..வே.சுப்பிரமணியன் 1984இல் எழுதிய Novels in Dravidian Language (History & Trends) கட்டுரையில் தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றி குறிப்பிடும்போது மோகனாங்கி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 1983 இல் பேரா..வே.சுப்பிரமணியனால் எழுதப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 'திராவிட மொழி இலக்கியங்கள்' நூலிலும் தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றிக் குறிப்பிடும்போது 'மோகனாங்கி' பற்றி எதுவும் குறிப்பிடாமல் மேற்குறித்த ஆங்கிலக் கட்டுரையில் உள்ள விடயங்களையே குறித்துள்ளார். 2004 இல் இந்நூல் மறுபதிப்புச் செய்யப்பட்டபோதும் மாற்றம் எதுவுமில்லாமல் அப்படியே உள்ளது. இன்றுவரையான தமிழிலக்கிய வரலாறுகளிலுள்ள விடுபடல்கள் குறித்த சுட்டுதல் நீளும் என்பதால் அது இக்கட்டுரையில் தவிர்க்கப்படுகின்றது. 

தமிழக தென்னிந்தி நிலைமை இப்படி இருக்க ஈழத்தில் இன்றுவரை க.பொ.த. (உ/த) பாடத்திட்டத்திற்குள் இருக்கின்ற பேரா.வி.செல்வநாயத்தின் "தமிழ் இலக்கி வரலாறு" திருத்திய பதிப்பு நூலில் 'சரவணப்பிள்ளை என்ற ஆசிரியர்  ஆங்கில நாவலாசிரியர்  சாள்ஸ் கிங்சிலி என்பவர் எழுதிய ஹைபாதியா எனும் நாவலைத் தழுவி மோகனாங்கி நாவலை எழுதியுள்ளார்” என்று இருவரியில் மிக அபத்தமதான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. மிகச் சிறந்த புலமையாளரான பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் இந்தப் பொறுப்பற்ற செயலை தொடர்ந்து உருப்போடுகிறது ஈழத் தமிழ் ஆய்வுலகம். இன்றுவரை உயர்தர பாடத்திட்டத்தினூடாக தமிழிலக்கிய வரலாற்றைப் படிக்கும் மாணவர்கள் மோகனாங்கி ஆங்கில நாவலைத் தழுவி எழுதிய நாவல் என்றே அறிந்துகொள்கின்றனர்.

மோகனாங்கி ஆங்கில வரலாற்று நாவலான 'Hypatia' வின் தழுவல் என்ற ஒருவாதத்தை வித்துவான்..செபரத்தினம் அவர்கள் எழுதி மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வந்த 'தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்' என்ற நூலிலே இவ்வாதத்தை முன்வைத்துள்ளார். "சார்ள்ஸ் கிங்ஸ்லி (CHARLES KINGSLEY) என்னும் ஆங்கில மொழிப்புலவர், தஞ்சை நாயக்க மன்னர் காலத்து வரலாற்றுச் சம்பவமொன்றைக் கருவாகக் கொண்டு ஆங்கில மொழியிலெழுதிய 'ஹேபாதியா' (HYPATIA) என்னும் நாவலைத்தழுவி, சரவணமுத்துப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட நாவலே 'மோகனாங்கி' ஆகும்' என்று அந்நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த மூலத்திலிருந்து இதை இவர்கள் எடுத்தார்கள் என்பத தெரியவில்லை. நிச்சயமாக இன்றுள்ள மிகப்பரந்ததும் துல்லியமானதும் இலகுவானதுமான தகவல் தொடர்பு யுகத்தின் வாய்ப்புக்கள் ஏதுமற்ற நிலையில் (இவ்வாய்ப்புக்கள் இனறு எமக்கு தகவல்களை மிகத்துல்லியமாகத் தேடவும் சரிபார்க்கவும் மிக இலகுவாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்) இவ்விரு அறிஞர்களின் முயற்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் மோகனாங்கியையோ Hypatia வையோ வாசிக்காமலே இவர்கள் இருவரும் இக்கருத்தை தமது நூல்களில் ஆய்வுப்புனைவுகளாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பது மட்டும் உறுதி

'HYPATIA' நாவலானது  Charles Kingsley 1853 இல் எழுதிய நாவலாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Regius Professor of Modern History எனும் மதிப்புமிக்க பதவியை வகித்த  சார்ள்ஸ் கிங்ஸ்லி கி.பி 03 அல்லது 04 ஆம் நூற்றாண்டில் நிலவிய கத்தோலிக்க மத முரண்பாடுகளை களமாகக் கொண்டு வரலாற்றின் முதல் பெண் கணிதவியல் மேதையும் மிக மதிப்பும் செல்வாக்கும் மிக்க அறிஞருமான Hypatiaயை பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவலே 'Hypatia'. இந்நாவல் திட்டமிட்ட கத்தோலிக்க எதிர்ப்புத் தொனி கொண்டிருக்கிறது. அத்துடன் இது கிங்ஸ்லியின் இன மற்றும் கத்தோலிக்க மனவெறுப்புகளையும் பிரதிபலிக்கிறது என விமர்சிக்கப்படும் இந்நாவல் 19 ஆம் நூற்றாண்டில் பல ஆண்டுகளாக இந்தப் புத்தகம் கிங்ஸ்லியின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்டதுடன் விக்டோரியா மகராணியின் விருப்பத்துக்குரிய நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.
மோகனாங்கி 2018 மீள்பதிப்பு

இந்நாவலின் களமும் தளமும் தமிழகத்தைவிட வேறானது, இதில் தஞ்சை நாயக்கர் பற்றிய சம்பவங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் எப்படி இருக்க முடியும்.  தி..சரவணமுத்துப்பிள்ளை பற்றிய ஆர்வமும் தேடலும் கொண்ட வித்துவான்.. செபரத்தினம் அவர்கள் செவிவழி தமக்குக் கிடைத்த செய்தியை முழுமையாக நம்பி தமது நூலில் பதிவு செய்ததாலே இது நேர்ந்துள்ளது. வரலாற்று ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக, வரலாற்றின் மீது ஆர்வமும் தேடலும் கொண்டதுடன் பகுத்தறிவு சிந்தனைகளின் பால் ஈடுபாடுகொண்ட தி.. சரவணமுத்துப்பிள்ளை Hypatia' வை வாசித்து அதன் அருட்டுணர்வில் 'மோகனாங்கி'யை எழுதியதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கலாம். ஆயினும் அது ஓர் ஊகவாதமாகவே  இது இன்றுவரை உள்ளது மோகனாங்கி பற்றி எழுதப்பட்டுள்ள பிற பதிவுகளிலும் அது ஓர் ஆங்கில நாவலின் தழுவல் என்ற விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பேரா.வி. செல்வநாயகத்தின் கருத்துக்கு அடிப்படை ஆதாரமெதுவற்ற அபத்தம் என்பதைத் தவிர மதிப்புக்குரிய அவரது கருத்துக்கு வேறு பெயர் சுட்ட முடியவில்லை.
மோனாங்கி தமிழின் முதல் வரலாற்று நாவலல்ல என்று கண்மூடித்தனமாக மோசமான குற்றச்சாட்டை  முன்வைத்தவர் பேரா..அருணாசலம். அவரது கலாநிதிப் பட்டத்திற்காக 1978 எழுதப்பட்ட ஆய்வானது  அதற்குப் பின்வந்த ஆய்வுமுடிவுகள் மாற்றங்களைச் சேர்த்து செழுமைப்படுத்தப்படாமல் 2005 இல் தமிழில் வரலாற்று நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றது. இந்நூலில் .அருணாசலம்கல்கியைமிழின் முதல் வராலற்று நாவலாசிரியராகக் வலிந்து கட்டமைக்கும் நோக்கு தெரிகிறது.  1942 தொடக்கம் 1965 வரையான தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றிய இந்நூலின் முதலாம் இயலானவரலாற்று நாவலும் தமிழில் அதன் தோற்றமும்இரண்டாம் இயலானதொடக்ககால வரலாற்று நாவல்கள்ஆகியவற்றில்மோகனாங்கிதொடர்பான கருத்துக்களை ஆய்வு நேர்மையற்ற முறையிலும் முற்சாய்விலும் அவர் முன்வைக்கிறார்.

தமிழ் வரலாற்று நாவலின் தோற்றம் பற்றி ஆசிரியர்களிடையே கருத்தொருமைப்பாடு நிலவவில்லை’ என்ற கருத்தை முன்வைக்கும் அவர் ‘மோகனாங்கி நாவலை எழுதிய தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவல் இலக்கியத்துறைக்கு முன்னோடியாக விளங்கினார் எனச் சோ.சிவபாதசுந்தரம் அழுத்திக் கூறுவது பெருமளவு பொருத்தமற்றதே’ என முடிவுசெய்து ‘கல்கிக்கு முற்பட்ட காலப் பகுதியிலே தோன்றிய தமிழ் வரலாற்று நாவல்களுட் சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி நாவல் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாக விளங்கினாலும் சரவணமுத்துப்பிள்ளையைத் தமிழ் வரலாற்று நாவலின் தந்தை எனவோ முன்னோடி எனவோ கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை’ என்று கூறுகிறார்.

அத்துடன் ‘உண்மையில் (மோகனாங்கி) நாவலாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட காலப்பகுதியின் வரலாற்றுச் சூழலை நாவலில் முழுமையாகக் காட்டவில்லையெனினும் நாவலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள், நாயக்க மன்னர்கள் பற்றி விபரங்கள் முதலியவை வரலாற்றுக்குப் பொருந்தக் கூடியவகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கனவாகும். வரலாற்றுச் சூழல் இந்நாவலில் ஓரளவு இடம்பெற்றுள்ள போதும் நாவலுக்குரிய பண்புகள் பலவகையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்ற தனது முடிவுக்கான காரணத்தை முன்வைக்கிறார்.எனினும் அவரே ‘பியரிசந்தமித்ர (கி.பி1814-1883) என்பவர் எழுதிய ஆலாலேர் துலால் (உயர் குடியிற் பிறந்த செல்வ மகன்) என்னும் நாவலே வங்காள மொழியின் முதல் நாவலாகும். எனினும் ‘நாவல்’ என்னும் இலக்கியத்திற்குரிய முக்கிய பண்புகளைக் கொண்டு முதன் முதலில் வெளியானது பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய துர்கேச – நந்தினி என்னும் நாவலேயாகும்.’ என்று நாவல் பண்புகள் குறைந்தாலும் ஆலாலேர் துலால் நாவலை வங்காளத்தினதும் இந்தியாவினதும் முதல் நாவலாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் மோகனாங்கி விடயத்தில் இக்காரணத்தைக்கூறியே தமிழின் முதல் வரலாற்று நாவல் ‘மோகனாங்கி என ஏற்க மறுப்பது அவரது ஆய்வின் நடுநிலை குறித்த சந்தேகத்தை எழுப்புவதுடன் அவரது ஆய்வுமுடிவை ஏற்பதிலிருந்து எம்மை விலத்தி வைக்கவும் தூண்டுகிறது.

மோகனாங்கி பற்றிஅறிஞர்களின்
கருத்துக்களுடன் மீள்பதிப்பின் பின் அட்டை
பேரா.அருணாசலம் தமது ஆய்வுக்கும் மேற்கோள்களுக்கும் எடுத்துக் கொண்டது ‘மோகனாங்கியின்’ சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பான ‘சொக்கநாயக்கர்” நூலையே. இது தி.த.சரவணமுத்துப் பிள்ளையின்  மறைவின் பின்னர் அவரது மூத்த சகோதரர் தி.த.கனகசுந்தரம் பிள்ளையால் சுருக்கிப் பதிப்பிக்கப்பட்டது. இது அக்காலத்தில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இருந்ததால் மாணவத் தேவைக்கான இச்சுருக்கப் பதிப்பு மேற்கொள்ளப்பட்டது. சுருக்கப் பதிப்புக்களைக் கொண்டு ஒரு மூல நூல் பற்றிய கருத்தை கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வில் முன்வைத்திருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது. 40 ஆண்டுகளுக்குப் பின்னும் ஆய்வுகளின் வளர்ச்சி மற்றும் மாறும் தன்மைகள் பற்றிய பிரக்ஞை இல்லாமல் அதை அப்படியே நூலாக்குவதையும் எவ்வாறு சொல்வது.  முல்லைமணி ‘மாருதம் 02 வது இதழில் எழுதிய கட்டுரையொன்றில் பேரா.க..அருணாசலத்தின் போதாமையைச் பொதுவாகச் சுட்டி மோகனாங்கி முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருப்பார்.

ஆரம்பத்தில்  தாம் எழுதிய ஆய்வுகளின் போதாமையை நிவர்த்தி செய்யுமுகமாக ‘The First Six Novels in Tamil’ என்று கட்டுரையை 1986 இல் எழுதிய  Kamil Zvelebil அதில் தொடக்க கால தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ந்த தமிழறிஞர்கள் விட்டுள்ள இடைவெளிகளும் விடுபடல்களும் தம் போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்களையும் தவறாகச் செல்வதற்கு வழிவகுத்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக 'தமிழிலக்கிய வரலாற்றிலும் எழுத்துலகிலும் தி..சரவணமுத்துப்பிள்ளை அசாதாரணமான ஓர் அடியெடுத்து வைத்ததுடன் ஒரு புதிய போக்கையும் உருவாக்கியுள்ளார்என்று மோகனாங்கியின் இடத்தையும் தனித்துவத்தையும் சரியாக இனங்கண்டு நிலைநிறுத்தியதில் Kamil Zvelebil இன் The First Six Novels in Tamil’ கட்டுரை முக்கியமானது.

தமிழிலக்கிய வரலாறுகளில் மோகனாங்கி பற்றி ஓரிரு வரிச் செய்திகள் தகவலப்பிழைகளோடு இருக்கும். இந்திய சாகித்திய அகாதெமி 2013 இல் வெளியிட்டபுதிய தமிழிலக்கிய வரலாறு' தொகுப்பில் 2வது பாகமான ' நவீன இலக்கியத் தொகுப்பில்’ வரலாற்று நாவல்கள் கட்டுரையில் மோகனாங்கி தமிழின் முதலாவது வரலாற்று நாவல் என்ற தனக்குரிய சரியான இடத்தில் அமர்த்தப்பட்டது.

ஆய்வாளர்களாலும், இலக்கியவாதிகளாலும்   தேடப்பட்டும்  இதுவரை   பார்வைக்கு எட்டாமல் இருந்த  மோகனாங்கி 2018 தை மாதம் 31 ஆம் திகதி திருகோணமலை இந்துக்கல்லூரி சம்பந்தன் மண்டபத்தில் நூற்றாண்டு இடைவெளியைக் கடந்து (சரியாகச் சொன்னால் 123 ஆண்டுகளின் பின்னால்) மீளவும் வாசிப்புக்கு வந்தது. பெரு முயற்சிகளினூடு கலாநிதி.க.சரவணபவன், ச.சத்யதேவன், மு.மயூரன் ஆகியோரை இணைப்பதிப் பாசிரியாராக் கொண்டு திருகோணமலை வெளியீட்டாளர்களால் மீளவும் பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

2018 மீள் பதிப்பின் பதிப்பாசிரியர்கள்
‘இலக்கிய ரசனை வழியாக  ஒரு குறுநிலத்தின் வரலாற்றை சாதாரண வாசகனின் வாசலுக்கு எடுத்து செல்வது  பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் சவால் நிறைந்த ஒரு முயற்சியே. எனினும், வரலாற்று நாவல்களின் தேவையும், பயன்பாடும் படிப்படியாக வளர்ச்சி பெற்று கொண்டிருந்த தமிழக வாசிப்புச் சூழலில் மோகனாங்கி போன்ற சில நூல்கள் வாசிப்புச் சுற்றோட்டத்தில் இருந்து காணமல் போய்விட்டன. குறிப்பாக மோகனாங்கி தமிழகத்திலும், இலங்கையிலும் பலரால் கண்டுகொள்ளாமல் தவிர்க்கப்பட காரணமாக இருந்தது இலக்கிய அரசியலா அல்லது பிரதிகள் கிடைக்காமற் போனதா? 

மோகனாங்கி நாவலில்  முதன்மை எதிராளியாக அழகிரி நாயக்கர் இருக்க,   பார்ப்பனரான கோவிந்தாச்சாரியார்  கதாபாத்திரம் வழியாக தி உருவாக்கும் பார்ப்பணிய  விமர்சனங்களா? இந்த வினாக்கள் ஒரு புறமிருக்க,  இலங்கை இலக்கியவாதிகளின் அலட்சியத்திற்கு   காரணங்கள் என்ன? இலங்கையில் பேரா. செ. யோகராசா தவிர்ந்த பேரா.க.கைலாசபதி, பேரா.கா.சிவத்தம்பி, செல்வநாயகம் ஆகியோரும் மோகனாங்கி குறித்த ஆழமான குறிப்புக்கள் எதனையும் ஏன் விட்டுச் செல்லவில்லை’ என மீள் பதிப்பின் பதிப்புரையில் எழுப்பப்ட்டுள்ள கேள்விகளுக்கான உரையாடல்கள் தொடரவேண்டும்.

இறுதியாக ‘இலங்கையில் எழுதப்பட்ட இலக்கிய வரலாறுகள் தவறுகள் மலிந்தவையே. நூல்களை கால நிரலில் பட்டியலிடுவது இலக்கிய வரலாறாகிவிடாது. அதுவும் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளாக போற்றப்படும் நூல்களை   தவறவிடுவது நுணிப்புல் மேய்தலை நினைவுபடுத்துகின்றது. இத்தகைய தவறுகளும் பரப்புரைகளும் எதிர்காலத்தலைமுறைக்கு செல்வதை தடுத்துநிற்கும் வலிமையைத் தருவேண்டும்.’ என்று மோகனாங்கியின் மீள்பதிப்பின் பதிப்புரையில் சொன்னதையே இக்கட்டுரையின் நோக்காக சொல்ல விரும்புகின்றேன்

உதவியநூல்கள்

1.        கலாநிதி.க.சரவணபவன், ச.சத்யதேவன், மு.மயூரன் (ப.ஆ), மோகனாங்கி (மீள்பதிப்பு), திருகோணமலை வெளியீட்டாளர்கள், திருகோணமலை, 2018.

2.        செ.யோகராசா, திருகோணமலைதி..சரவணமுத்துப்பிள்ளை’, தமிழ் உலகு தொகுதி 1 இதழ் 1கொழும்புத் தமிழச்சங்கம், ஐப்பசி 2003. பக்.10
3.        சரவணமுத்துப்பிள்ளை,தி..,(சத்யதேவன்.. (.)), தமிழ்ப்பாஷை, எழுநா, 2013.
4.        பாலசுப்பிரமணியம்.சிற்பி, நீல.பத்மநாபன், (.), புதிய தமிழிலக்கிய வரலாறு: நவீன இலக்கியத் தொகுப்பு, சாகித்திய அகாதெமி, 2013
5.        காவ்யா சண்முகசுந்தரம் (தொ.), இலக்கிய விசாரங்கள் .நா.சு கட்டுரைகள் -1, காவ்யா, சென்னை,2005,.
6.        சிவத்தம்பி.கா, நவீனத்துவம்தமிழ்-பின்நவீனத்துவம், நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2010.

7.        சுப்பிரமணியன்,.வே., திராவிட மொழி இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு, 2004. (3ஆம் பதிப்பு).
8.     செல்வநாயகம்,வி., தமிழ் இலக்கிய வரலாறு, ஶ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம், 1960
9.        அருணாசலம்,, தமிழில் வரலாற்று நவாலின் தோற்றமும் வளர்ச்சியும், குமரன் புத்தக இல்லம்,கொழும்பு, 2005.
10.     சத்தியநாத அய்யர், ஆர்., மதுரை நாயக்கர்கள் வரலாறு, (மொ.பெ.அர்ஷியா). கருத்துப்பட்டறை, மதுரை, 2016
11.     பாலசுப்பிரமணியம்.சிற்பி, நீல.பத்மநாபன், (.), புதிய தமிழிலக்கிய வரலாறு: நவீன இலக்கியத் தொகுப்பு, சாகித்திய அகாதெமி, 2013
12.    Asher, R. E.,The Tamil Renaissance And The Beginnings Of The Tamil Novel, The Journal Of The Royal Asiatic Society Of Great Britain And Ireland, No. 1 (1969).
13.     Kennedy.Richard, A Comparison Of Two Literary Renaissances In Madras, , Journal Of South Asian Literature, Vol. 25, No. 1, The City In South And southeast Asian Literature (Winter, Spring) 1990.
14.    Kamil V. Zvelebil, Jan Gonda (Ed), A History of Indian Literature, Volume X: Dravidian Literature, Fasc. 1: Tamil Literature , Otto Harrasowitz, 1974.
17.    Suganthy Krishnamachari, ‘Where History owes it to Fiction’, Friday Review- The Hindu -, April 17, 2009.  http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/where-history-owes-it-to-fiction/article658168.ece
18.     முருகேசு ரவீந்திரன்,எம்மவர் எழுதிய மோகனாங்கி முதல் நாவல் - தமிழில் வரலாற்று நாவல்கள்’, தினகரன்கூராயுதம், JULY 18, 2010, http://archives.thinakaran.lk/Vaaramanjari/2010/07/18/?fn=k1007185


(கனடா தாய்வீடு மாசிகை December 2018 இல் வெளிவந்த கட்டுரை) 

2 comments:

  1. மோகனாங்கி குறித்து விரிவாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மோகனாங்கி 'தொலைந்ததிலிருந்து மீள் கண்டுபிடிப்பு செய்தல்' வரைக்குமான ஒரு காலகட்டத்தை மனதில் பதிய வைக்கிறது.

    ReplyDelete
  2. மோகனாங்கி குறித்து விரிவாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மோகனாங்கி 'தொலைந்ததிலிருந்து மீள் கண்டுபிடிப்பு செய்தல்' வரைக்குமான ஒரு காலகட்டத்தை மனதில் பதிய வைக்கிறது. அந்த வகையில் இது முக்கியமான கட்டுரை.

    ReplyDelete