Saturday, May 31, 2014

மாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு (மீள்பதிவு)

இக் கட்டுரையின் நோக்கம்  மரபு என்பதைப் பற்றி ஏலவே சொல்லப்பட்டு வந்த மரபார்ந்த கருத்து விளக்கங்களுடன்  மரபு பற்றி இதுவரை ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்களையும்  மரபின் தொடர்ந்தேர்ச்சியான பரிணாமம் கடந்த காலங்களில் எவ்வாறு இருந்ததென்பதையும் கவனத்திற்கொண்டு மரபு என்பதன் பருமட்டான அடையாளப்படுத்தலை எனது வாசிப்பினூடாக தருவதாக  அமைகிறது.



மரபு  
மரபு என்றதும்ஒரு குழுமத்தினால் , தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ,மீறக்கூடாத,பெருமைக்கும் வழிபாட்டுக்குரியதுமானதாகவும்அக்குழுமத்தினை அடையாளப்படுத்த அதிகளவில் பயன்படுவதுடன்  நவீன மாற்றங்களால் முந்தையை அடையாளங்கள் சிதைவதுமான  ஞாபகப்பதிவுகளே உள்ளன.

பழமை மற்றும் மாறாத்தன்மையுடைய தொடர்ச்சி  என்பவையே மரபு என்பதின் உடனடி  நினைவுகளாக அமைகின்றனமரபினது அழுத்தம் அதனது குழுமத்தை நீடித்து நிலை பெறுவதில் உள்ள அடையாளமாகும்இதனால் சமுதாய விருத்தியில் இதன் பங்கு அளப்பரியதாகிறது.  இன்னும் சில சாரர் மனித விழுமியங்கள் என்பர்விழுமியங்கள் மரபிநின்றும் சற்றே வேறு பட்டு , மரபுகளில் இருந்து வரும் தேவை சார்ந்த கூறுகளை சமுக நோக்காகக் கடைப்பிடித்தலாகிறதுஇதை நான் கூர்புக்குள்ளான மரபு என்பேன்.

 தமிழின் முதனூலான தொல்காப்பியத்தின் பொருளாதிகாரத்தின் இறுதியாக மரபியல் வைக்கப்பட்டிருக்கிறதிலிருந்து தமிழ் சமூகத்தில் மரபின் மரபை அறிந்து கொள்ளலாம்.  மரபுவழியான தமிழிலக்கிய அறிஞர்கள்  மரபை இலக்கண இலக்கியங்களுடன்  தொடர்பு படுத்திப் பார்த்தார்கள் . “மரபு இலக்கணம்முறைமை தன்மை என்பன ஒரு பொருட்கிளவி”  என்பார் நச்சிநிக்கினியார்அவர்க் கூற்றுப்படி  ‘மரபு’ என்ற சொல்லின் பொருள் இலக்கணம் என்பதாகும். “தொன்று தொட்டு வந்த வழக்கு என்பார் அரசஞ்சண்முகனார்[1]

பின்வந்த  ஆய்வாளர்கள்  மரபை சமூக வழக்கங்களோடும் நம்பிக்கைகளோடும் சேர்த்தே அடையாளப்படுத்தினர்அதுவே மரபின் அடையாளமாக இருப்பதற்கும் பொருந்துவது.  “பரம்பரை பரம்பரையாக வரும் பழக்கங்களும் வழக்கங்களும் மரபெனப்படும்’ வழிவழி வரும் சம்பிரதாயங்களும், தொன்று தொட்டு வரும்  சமூதாய கலாச்சார முறமைகளும் இதன்பாற்படும்”.[2 ]

மனிதனது பிறப்பு முதல் இறப்புவரை தொடரும் நிகழ்வூகளும் சடங்குகளும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைகின்றனவிவசாயம்உணவு,  மருத்துவம்கல்வி,இசை கூத்துசோதிடம்வழிபாடுகள் , சடங்குகள்விழாக்கள் உற்சவங்கள்போர்இடப்பெயர்வுமொழிகதை கூறல்மனித விழுமியங்கள்    ஆகியவை தொன்ற தொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவரும் பழமையானவையெல்லாம் மரபு மரபு  சார்ந்தவை ஆகவே கருதப்படுகின்றன .[3]

ஒரு காலத்தில் மக்களால் தேவை கருதி மேற்கொள்ளப்படும் ஒரு செயல் நிகழ்வு   நன்மையுடனும்உண்மை சாந்ததாகவும்   இருக்குமாயின் பின்வரும் தலைமுறையினாரால் தொடர்ந்து  பின்பற்றப்பட்டுச் சமூகச் செயல்பாடாக நிலைபேறடைகிறதுஇதுவே மரபாகவும் மரபு சார்ந்த அறிவாகவும் பேணப்பட்டு வருகிறது.  [4]

மரபு என்பதற்கு அகராதிகள் தரும் பொருள்களும் மேற்கூறியவற்றை ஆதரிப்பதாகவே அமைகின்றன
திருமகள் தமிழகராதி “முறமை இயல்பு நல்லொழுக்கம் பெருமை பாடு வழிபாடு”[5] என்றும்யாழ்ப்பாண அகராதிபழமை, முறமை, வமிசம்”[6] என்றும் மரபைக் குறிக்கின்றன.கிரியாவின் தற்கால தமிழ் அகராதி இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தி மரபு என்பதை  “(பண்பாட்டின் எல்லா அம்சங்களிலும்பலகாலமாகப் பின்பற்றி வருவது அல்லது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி  பாரம்பரியம்’’[7] என்று கூறுகிறது.
 அது பண்பாடு என்பதை “குறிப்பிட்ட இடத்து மக்களின் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் கலைகளும் வெளிப்படுத்தும் முறைகளும்மக்களின் சிந்தனை வெளிப்பாடு”[8]என்றும் பொருள் தருகிறது.

மேற்கூறிய கருத்தக்கள் எல்லாவற்றிலும் மரபு எனப்படுவதை தொன்றுதொட்டு மாறா நிலையில் தொடர்ச்சியாக  பேணப்படுவது என்ற கருத்து இழையோடி நிற்பதை காணலாம்மரபு என்பதில் உள்ள கால நீட்சியும்  தோன்றின காலங்களில் இருந்த விடயங்கள் அக்காலத்திற் இருந்தவாறே பிரதிபண்ணப்பட்டு கடத்தப்படுவது என்பதான நம்பிக்கையே மரபு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கையாகும்.

  
மரபு என்பது மாறா இயல்புடையதா? “பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல” என்ற தமிழ் சமூகத்தில் மாறா இயல்புடையதாக இருந்தவை மரபாகின என்பது ஏற்படையதாக இருக்கின்றதா


இது பற்றி பேராசியர் சிவசேகரம்  அவர்களின்  கருத்து இங்கே பொருத்தப்பாடுடையது.

 ‘மரபின் மாறா இயல்பு பற்றிய  கருத்து மரபு என்பது அடையாளப்படுத்தும் வழிவழி என்ற வரலாற்றுக்கு முரணானதாகவே அமைகிறதுமதக்கோட்பாடுகளுக்கு ஒருவர்  வழங்கும் நிரந்தரத் தன்மைகள்  அறிவு சார்ந்த  விசயங்களுக்கு அப்பால் ஆனவைஆனால் மரபு பற்றி நிலைப்பாடுகள் அவ்வாறனதல்லமரபென்பது மனிதருலுகில் உருவாகி விருத்தி பெற்றதொன்றுஅது எவராலும் சிருட்டிக்கப்ப்பட்டதல்லஎனவே மரபின் மாறாத்தன்மை பற்றி பேசுவோர் ; மரபையும்  அது செயற்படும் காலத்தின் அளவையும்  எல்லைப்படுத்தல் அவசியமாகின்றது.

வாழ்க்கை முறையின் வழமை தொடர்பானதாகவும்  சமுதாய நடைமுறையின் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பானதாயும்  உள்ள  மரபின் வலிமைக்கு முக்கிய காரணம் அது தன் பல்வேறு குறைபாடுகள் மத்தியிலும் நீண்டகால மனித அனுபவத்தை அது தன்னுள் கொண்டுள்ளமையே.[10] மரபு பொதுவாக கால மாற்றத்துக்குள்ளான நீண்டதொரு ஆராய்ச்சியைத் தர வல்லது.

இதிலுள்ள நீண்ட கால மனித அனுபவம் என்பதனால் குறிக்கப்படுவது மரபு தோன்றிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த   அனுபவம்  நீண்டகாலம்    தொடர்கின்ற  கால நீட்சியை மட்டுந்தானா ?   நாகரிக வளர்ச்சியில்  மனிதர் பெற்றக்கொண்ட வளமான அம்சங்களும் அனுபவ அறிவும்   மரபினுள் பொதிந்து மரபு வளமானதாக மாறிக்கொண்டு வருவதையே மரபினுள் உள்ள நீண்ட காலமனித அனுபவம் என்பதால் குறிக்கப்படுகிறது.

இது குறித்தே மரபு பற்றிப் பேசும்போது  பேராசிரியர் கைலாசபதி “உண்மையான உயிர்த்துடிப்பான  மரபு என்பது கடுமையான வரையறை அற்றதுஅது காலத்துக்கு காலம் தன்னைத்தானே புதுப்பித்தும் தனக்கு வேண்டிய ஜீவ சத்துப் பெற்றும் இயங்கிச் செல்வதே ஆகும்.[11]  என்று மிகவும் தெளிவாக மரபைச் சுட்டுவார்.

மரபு என்பதில் கால நீட்சி பற்றியம் சிறிது நோக்க வேண்டும்தற்போதும் வழக்கமாக பின்பற்றப்படுகின்றவைதான் மரபுகளா?  ஏனெனில் குறிப்பிட்ட காலங்கள் மரபாக பெருவழக்கில் இருந்து மறைந்து போனவை மரபுகள் இல்லையாபல்லவர்  காலத்தில் நிலைபெறத்தொடங்கி  சோழர் காலம் தொட்டு நீண்டகாலம் உறுதியாகப் பேணப்பட்டு 1930களில் பிரித்தானியர்  ஆட்சியில் சட்டம் மூலம் இல்லாமல் செய்யப்பட்ட தேவதாசி முறையை  தமிழ்மரபாக இருந்தது என்பதை மறைக்கப் போகின்றோமா ?

 அல்லது குருகுலக்கல்வி மூலம் 18ம் நூற்றாண்டு வரை கல்வி மரபு பேணப்பட்டதை மரபல்ல என்று நாம் கொள்ள முடியுமாஐரோப்பியர்  வருகையுடன் மறைந்த ஓலைச்சுவடி எழுத்தாணிகளை எமது மரபல்ல என்று சொல்லமுடியூமாவசனநடைகளின் உருவாக்கத்தோடு அரிதாகிப்போய்விட்ட செய்யுள் பிரபந்தங்கள் மரபானவை என்று தானே கொள்கிறோம் . இன்னும் விஜயநகர காலத்தில் பெருவழக்காகி 1930பதுகள் வரை தமிழ் நடையாகக் கோலச்சிய மணிப்பிரவாள நடை அக்காலத்தில் உயர்ந்த தாக்கம் செலுத்தும் மரபாத்தானே இருந்தது ?

இங்கு நாம் கவனிக்க வேண்டி விடயம் மரபென்பது குறிப்பிட்ட காலத்தின் தேவைகள் சமூக சூழல்கள் மற்றும் ஆதிக்க பண்பாடுகள் காரணமாகத் தோன்றுகிறதுஅந்தத் தேவைகள் சமூக சூழல்கள் பண்பாடுகளின் மாற்றங்களை மரபும் உள்வாங்கி மாறிகிறதுஅந்தத் தேவையோ சமூக சூழல்களோ ஆதிக்கப்பண்பாடோ  மறையும்  போது அந்த மரபுகளும் வழக்கொழிந்து போகின்றனஅதாவது தமது குழுமத்தின் நிலைப்பிற்குத் தேவை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வரைதான் அதன் பயன்பாடு காலம் செயற்படும்  காலமாக இருக்கிறது.

மேற்கூறியவற்றில் இருந்து மரபு என்பதை அடையாளப்படுத்தும் பின்வருமாறு பருமட்டாக அடையாளப்படுத்தலாம்.

குறித்த காலச் சூழலின் தேவைகருதி மக்களால் செய்யப்பட்ட செயல் அல்லது நிகழ்வு  பலரால் ஏற்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதும் ஒவ்வொரு தலைமுறையின் அனுபவங்களையூம் வளமான அம்சங்களையூம் பெற்று செழிப்படைந்து வளர்கிறதும் குறித்த காலச் சூழலின் தேவைகள் உள்ளவரை பேணப்படுவதுமான வாழ்க்கை முறையின் வழமை தொடர்பானதாகவும்  சமுதாய நடைமுறையின் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பானதாயும் ,சமுதாய விழுமியங்களாயும்   உள்ள பண்பாட்டு கூறு ஆகும்.

இது வாய்வார்த்தையாகவோ, போலச்செய்தல் மூலமாகவோ பரவும் தன்மையுடையது. சமூக நிர்ப்பந்தம், பொதுப்பயன்பாட்டு நிலை, முன்னோர் பண்பு, அதிகாரம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு காரணங்களால் ஆழமாக வேரூன்றச் செய்யப்படுகிறது.[12]

அடிக்குறிப்புக்கள்
  1. கனகரத்தினம்.இரா.வை, நாவலர் மரபு,சு.விசுவலிங்கம் நினைவு  நூல்வெளியீடு, 2008 பக்.01.
  2. முத்தையாஒ, மரபும் மரபு சார்ந்ததும்,  பதிப்புரை, காவ்யா, சென்னை.2012. 
  3.  முத்தையா.ஒ, மரபும் மரபு சார்ந்ததும், வாழ்த்துரை, காவ்யா, சென்னை, 2012.
  4. முத்தையா.ஒ, மரபும் மரபு சார்ந்ததும், காவ்யா, சென்னை, 2012,பக்.01.
  5.  திருமகள் தமிழகராதி, திருமகள் நிலையம், சென்னை, 2002.
  6.  யாழ்ப்பாண அகராதி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2005.
  7.  க்ரியாவின் தற்காலத் தமிழகராதி,  க்ரியா, சென்னை, 2005.
  8. மே.கு.நூல்
  9. சிவசேகரம்.சி, மரபும் மார்க்ஸியவாதியும், சவுத்  விஷன், சென்னை,1999 பக்.27.
  10. மே.கு.நூ.பக்.33.
  11. முன்னுரை, மேற்கோள்,கனகரத்தினம்.இரா.வைநாவலார் மரபு, சு.விசுவலிங்கம் நினைவு  நூல்வெளியீடு, 2008, பக்.01.
  12.  தனஞ்சயன்.ஆ, நாட்டார் வழக்காறுகளில் நெய்தல்(கட்டுரை),   கானலம்பெருந்துறை, அ.கா.பெருமாள் (தொகு.ஆ), தமிழினி,சென்னை,2005,பக்.63.

No comments:

Post a Comment