
எச்சில் பாலும் ஒப்பனை நிழலும் வீ.கௌரிபாலனின் கதைகள் - எஸ்.சத்யதேவன்
ஒவ்வொருவரிடமும்
ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. ஒவ்வொவரும்
சில நூறு முறையாவது கதைசொல்லிகளாக
இருந்திருக்கிறோம். மனித சமூகத்திடம் உள்ள
கதைகள் பல ஆயிரம் கோடிகளை தாண்டிச்
செல்லும். ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்குள்
கதைகளின் அதிகரித்தபடியே இருக்கின்றன. வாழ்வு என்பதை இன்னதுதான்
என்று வரையறை செய்ய முடியாதது
போலவே கதை என்பதையும் இன்னதுதான்
என்று வரையறை செய்யமுடியாததாகவே இருக்கின்றது.
கதைகளின் ஆயுளையும் கதைகள் மீதான ஆர்வத்தையும்
சரியாக குறிப்பிட முடியாது. ஆயினும் நமது சமுதாயம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைகளாலும்; கதைகளோடும் தான் வாழ்கிறது.
கதைகள்
இயங்குகின்ற பிரதானவெளி புனைவாக இருந்தாலும் கதைகள்
வாசகரிடத்து ஆற்றுகின்ற வினைகள் புனைவின்பம் என்பதைத்
தாண்டி வியாபிக்கின்றது. கதைகள் எழுதப்படுவதிலும் இவை
முக்கியபங்காற்றுகின்றன. எல்லாமே புனைவு என்று
சொல்லப்பட்டாலும் முற்றிலும் புனைவான
ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியங்களை மனிதமனம் சென்றடையவில்லை. புனைவு எனக் கூறப்படுபவற்றினுள்ளே
உள்ள உண்மைகளையும்
உண்மை என்று என்று கூறப்படுவற்றினுள்ளே
உள்ள புனைவுகளையும் தேடியபடியே வாசகமனம் பயணிக்கின்றது. கதைகள் பற்றி எழுதப்பட்டவை
அக்கதைகள் வெளிப்படுத்துவனவற்றையும் தாண்டி எதை
எழுதியுள்ளன என்ற சந்தேகத்தைத் தாண்டியும்
கதைகள் பற்றியும் எழுதவேண்டியதை இதுவே அவசியமாகிறது.
கதைகள்
என்பது வெறும் சம்பவங்களின் பதிவுகளோ
குவியல்களோ அல்ல. அவ்வாறானவை செய்திகள்
என்றே அழைக்கப்படுகின்றன. போர்க்கால வாழ்வியலில் இருந்து வெளிவரும் கதைகளில்
செய்திகளில் இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் அவை கதைகளாக வெளிப்படுத்துகின்ற
அர்த்தங்களின் விகசிப்பும் கிளர்த்தும் அனுபவங்களும் அதிர்வுகளும் வேறுவகையானது. கதைகள் கதாசிரியர்களின் கட்டுப்பாட்டைத்
மீறி நழுவிச் சென்று பயணிக்கின்றன.

90களின்
ஆரம்ப காலத்தில்; சிறுகதையுலகில் நுழைந்துகொண்ட கௌரிபாலன் 2003 இலேதான் 'ஒப்பனை நிழல்' என்ற
தனது 10 கதைகள் கொண்ட முதலாவது
தொகுதியை 'கீழைத் தென்றல் கலாமன்ற'
வெளியீடாகக் கொண்டுவருகிறார் (2010 இல் பரிசல் வெளியீடாக மீள்பதிப்பு செய்யப்பட்டது). நீண்ட இடைவெளிகளில்த்தான் கௌரிபாலனின்
கதைகள் தம்மை வெளிப்படுத்துகின்றன. அதே போல
அக்கதைகளின் நழுவியோடும் பாதைகளில் பயணித்துச் செரித்துக்கொள்ளவும்
நீண்ட இடைவெளிகள் தேவைப்பட்டவனாகவே நான் இருந்தேன். அதன்
பின்னர் விடுதலை
அவாவிய மனவிருப்புகள் பேரவலமாக மாறிய இரண்டாயிரத்தின் இரண்டாம்
தசாப்தத்தின் ஆரம்பங்களிலேதான் மீண்டும் கொளிபாலனின் கதைகள் 'காற்றில் மிதக்கும்
தழும்பின் நிழல்’ என்னும் தொகுதியாக
தம்மை வெளிக்காட்டுகின்றன.
ஒப்பனை
நிழலின் ஆசிரியராக அல்லாமல் கௌரி அண்ணாவாகவே அறிமுகமானவர்,
அவரது கதைகள் வெளிச்சம்படாமல் தூங்கிக்கிடந்த
காலங்களில்க்கூட அது பற்றி அக்கறையில்லாது
வழக்கம் போலவே கலை இலக்கிய
வெளியில் இயங்கியவர் கௌரிபாலன். அவருக்குத் தெரிந்திருக்கின்றது தன்னுடைய கதைகள் தம்மைத் தாமே
வெளிப்படுத்தும் சாத்தியங்கள் உள்ளவை என்று. போர்க்கால வாழ்வின் வரலாறு நுழையாத சூட்சும
இடங்களில் நிலைகொண்டவை அவரது கதைகளின் நிலைகளன்கள்.
'அப்பே றட்டவும்' 'தாயம்மாவும்' 'எச்சில் பாலும்' அதன்
நித்தியமான சாட்சிகள்.
காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல்! - உமா ஜீ
எனது
வாசிப்பனுபவத்தில் (அது ஒன்றும் அவ்வளவு
விரிவானதல்ல எனினும்.. என்வரையில்) ஈழத்திலிருந்து இப்படியொரு சிறுகதைத் தொகுப்பைப் படித்ததில்லை. எதிர்பார்க்கவுமில்லை.
எழுத்தாளர்
வி. கௌரிபாலன் பெயரையும் இந்தப்புத்தகம் கிடைக்கும் வரையில் அறிந்திருக்கவில்லை. சரியாகச்
சொன்னால் ஞாபகமில்லை. ஏனெனில் தொகுப்பிலிருக்கும்
‘தப்பு’ கதையை எங்கோ வாசித்திருக்கிறேன்.
யுத்தத்தையும்,
வன்முறையையும் நேரடியாக எதிர்கொள்ளும் மனிதர்களை, அவர்களின் மனநிலையை மட்டுமே பிரதிபலிக்காமல் அறியப்படாத
அல்லது நாம்
அறியவோ அக்கறை கொள்ளவோ விரும்பாத
ஒரு தரப்பின் கதைகளையும் அதிகமாகப்
பேசுகிறது.
நாம்
என்றுமே இருந்து பார்க்க விரும்பாத,
தயக்கம் கொள்ளும், சொல்லப்போனால் இனம்புரியாத அச்ச உணர்வு சூழ்ந்து
கொள்ளும் வாழ்க்கையை எதிர்கொண்ட - இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்
வன்முறையால் உதிரிகளாக்கப்பட்டவர்களின் கதைகள்!
யாழ்ப்பாணம்,
வன்னி, கிழக்கு தவிர அதிகம்
பேசப்படாத ஒடுங்கியும், பதுங்கியும் வாழ விதிக்கப்பட்ட இன்னுமின்னும்
சிலதரப்புகள் இருக்கின்றன. அவர்களின் கதைகளைப் பேசுகிறது. போராட்டகாலத்துக்கு சமாந்தரமாக, நேரடியாகப் பங்குகொள்ளாத தரப்பொன்றின் மீது திணிக்கப்பட்ட புற,
அக ரீதியான கீறல்களை அப்படியே
உள்ளபடியே போகிறபோக்கில் அதே வீரியத்துடன் சொல்கிறது.
ஆரம்பத்தில்
அவ்வளவு வசீகரமாகவோ, உடனே உள்ளீர்த்துக்கொள்வதாகவோ இருக்கவில்லை. எழுத்து
கொஞ்சம் கடினமானதாகத் தெரிந்தது. ஒருசில பக்கங்களிலேயே மெல்ல
மெல்ல நெருங்கி ஆக்கிரமித்துக் கொண்டது.
ஒரு
கட்டத்தில் ரத்தமும், சதையும், நிணமும் மெல்லச் சூழ்ந்து,
அவ்வப்போது சற்றே திடுக்கிட செய்துவிட்டது.
வாசிக்கும்போது நானிருந்த மனநிலையா என்று தெரியவில்லை. வெறுமையையும்,
வலியையும், ஒருவித அச்சவுணர்வையும் கூடவே
தீராத அலைக்கழிப்பையும் கொடுத்துவிட்டது. அதிகம் சொல்லப்படாத, சமூகத்தின்
கதைகள் இவை!
மென்னிழைகளால்
நெய்யும் பூமி - சி.கிரிஷாந்
எந்தவொரு
கலைக்கும் ஞாபகத்துக்கும் உள்ள தொடர்பென்பது மிக
அந்தரங்கமானது. அது தான் கலையின்
வேலை. ஞாபகத்தை ஞாபகத்தின் மூலம் ஞாபகப்படுத்துதல். அதன்
மூலம் அந்தரங்கமான வகையில் அதை அனுபவிப்பவனிடம்
ஏற்படுத்துவது கிளர்த்துவது.
ஈழத்து
சிறுகதை வரலாற்றில் பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களினதும் ஒரு
கதையைத் தானும் படித்திருக்கிறேன். மிகப்
பிரபலமானவர்களின் எல்லா தொகுப்புக்களையும் படித்திருக்கிறேன்.
ஆனால் முழுமை கூடிய இப்படி
ஒரு தொகுப்பை
படித்ததில்லை. ஒரு மகத்தான கலைஞனின்
கைகளுக்குத் தான் இப்படி எழுதுவது
சாத்தியம் . வாழ்வின் எல்லைகளற்ற சாத்தியங்களை தொடராமல், சாதாரண வாழ்வின் சாத்தியங்களின்
விரித்துச் சென்று அகமும் புறமுமாய்
விரியும் கதைப்
பரப்புக்களை நெய்கிறார் கௌரிபாலன்.
இந்த
தொகுப்பை பற்றி எதுவும் அதிகம்
பேசத் தேவையில்லை. தொகுப்பு தானே தன்னளவில் அதிகம்
பேசக் கூடியது. அதன் உள்ளமைப்பே அதன்
எல்லைகளை எந்தவொரு புற வார்த்தையையும் விட
விரித்துச் செல்லும் வல்லமை கொண்டது. ஆனாலும்
ஒரு வாசக அனுபவ அடிப்படையில்
இந்த கதைகளின் போக்கை அது வாசகனை
இழுக்கும் பக்கங்களை ஏனைய முக்கிய அம்சங்களை
தொகுத்துச் சொல்லலாம். அதுவே இந்த பத்தியால்
ஆகக் கூடிய சாத்தியம்.
முதலாவது
இவர் யார் என்பதை இவரை
எங்கே வைக்கலாம் என்பதை பார்க்கலாம். ஈழத்தைப்
பொறுத்தவரையில் உருவாகியிருக்கும் மிக முக்கியமான இந்த
தலைமுறை கதை சொல்லிகளின் படைப்புக்கள்
எள்ளலையும் மிக அதீத அரசியல்
நிலைப்பாடுகளையும் பேசுவதாக உள்ளது. ஆனால், இவர்களிடம்
இருந்து வெகு சுவாரசியமான படைப்புக்களை
அடையாளம் கண்டிருக்கிறோம். இவர்கள் எல்லோரிலும் இருந்து
மாற்றாக உருவாகியிருக்கும் கதை சொல்லல் முறை. வாழ்வை தரிசிக்கும்
தளம் என்பவை கௌரிபாலனை தனித்துவப்
படுத்துகிறது.
இவர்
யாருக்காக கதை சொல்கிறார்? என்னை
பொறுத்தவரையில் யாருக்காகவும் சொல்லவில்லை. கதை தன்னைத் தானே
வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு எளிமையான இதயத்தை
காலம் தேர்வு செய்திருக்கிறது.
கதை
சொல்லும் நுட்பத்தில் இவர் தனது முத்திரையை
உருவாக்குகிறார் இ அதன் மிக
நுட்பமான விவரணைகள். அறுபடாத அல்லது தெறிக்காத
நீண்ட காட்சி தொடர் அமைப்புக்கள்,
உவமைகள். படிமங்கள் மூலம் ஒரு காட்சி
உலகை அங்குலம் அங்குலமாக நெய்கிறார். கதையின் மொழி உடைத்துப்
பரப்பிய கவிதை வரிகள். வேறு
என்ன சொல்ல? உவமைகளிற்கு ஒரு
உதாரணம் "திசை தப்பிய
சமுத்திர வெளியில் படகு அலைந்த போது,
வானில் தும்பிக்கை கொண்ட முகில் கூட்டம்
சில நாட்கள் பின் தொடர்ந்து
வர தாம் கரை தட்டியதாக,
அப்பா சொன்ன போது, தான்
பிள்ளையாரப்பாவை வேண்டிக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள்."
டோர்னாடோ
சூறாவளியையும் மனித நம்பிக்கைகள் உலகைப்
பார்த்து விரியும் விதத்தையும் இவ்வளவு அழகாக பதிவு
செய்த வரிகளை அடையும் தருணங்களில்
கலைஞனின் மந்திர
விரல்கள் சொற்களை சொற்களால் உருவாக்கிய
படி நம்பிக்கையை வாழ்வினால் உருவாக்குகிறது.
ஒவ்வொரு
கதையாக விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை
மிக நேர்த்தியான படைப்புக்கள் என்று எல்லாவற்றையுமே சொல்கிறேன், உலகத்தரமான
கதைகள் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு
இந்த கதைகளை பரிந்துரைக்கிறேன்.
மனித
வாழ்வின் சிதைவுகளை, மனித மனங்களின் ஒழுங்கமைப்பை,
மனித கண்ணீரின் விலைமதிப்பை ஒவ்வொரு கதையும் தனக்கே
உரிய ஒழுங்குருவாக்கலுடன் படைக்கிறது.
தான் வாழும் பூமியை ஒரு
கலைஞன் நேசிக்கிறான், தனது எளிய வாழ்வை நேசிக்கிறான்,
தனது மனிதர்களை. தனது இயற்கையை இதனது
இயலாமைகளை எல்லாவற்றையும். அதனாலேயே அவன் படைக்கிறான். அவன்
மூலமாக படைப்பும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
'காற்றில்
மிதக்கும் தழும்பின் நிழல் புத்தகத்தின் ஆரம்பத்தில்
சில வரிகள் உண்டு. 'யுத்தத்தின்
எச்சங்களாக இ மனச் சிதைவுகளுடனும்,
உடற்ச் சிதைவுகளுடனும், உடல் உறுப்புகளுக்குள் செல்த்
துண்டுகளுடனும், துப்பாக்கி ரவைகளுடனும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கு, இந்த
புத்தகத்தை சமர்பிக்கிறார் என்று, அதுவே அவரின்
படைப்பு அனுபவங்களின் வெளிப்பாடும்.
யுத்தம்
முடிவடைந்த பின் யுத்தத்தின் மக்கள்
என்னவானார்கள்? யார் அவர்களை பராமரிக்கிறார்கள்,
யாருக்காக போராடினோம் என்ற கேள்வி எப்படி
எழுந்தது. இந்த வாழ்வும் போராடமும் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும்
இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான்,
அப்படியான மனிதர்களுக்கு இந்த சமூகம் பொருட்படுத்தும்
படியாக எதனையும் செய்யவில்லை,
மதிக்கக்கூட இல்லை, அதற்குப் பதில்
பயப்பிடுகிறது. ஒதுக்கி வைக்கிறது, எளிமையான ஒரு துளிக் கண்ணீர்
தான் அவர்களுக்காக நாம் சிந்தியது. கண்ணீரைவிட
அடர்த்தியானது இரத்தம். அவர்களுக்கு கொடுக்க இந்த கலைஞனுக்கு
இருப்பது இவை தான். ஞாபகத்துக்கும்
வாழ்வுக்குமான மாயப் புதிரிலிருந்து பிறக்கும்
இக்கதைகள், இந்த மனிதர்களின் வாழ்வின்
மறக்க முடியாத தழும்புகள். அலைகளில்
சிதறியும் காடுகளில்
பதுங்கியும், வீடுகளில் ஒடுங்கியும் வாழ்ந்த ஒரு சமூகத்தின்
கதைகள் தான் இவை, இவர்களுக்கு
இக் கதைகள் இருளில் கண்ணீரொளிரும்
மெழுகுவர்த்திகள்.
90 களின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தவர் என்பது உண்மையா? அப்படியானால் இவர் இன்னொரு கெளரிபாலனோ? நான் வாசித்த கெளரிபாலன் 7௦ களிலேயே வாசித்த ஞாபகம். தோட்டது மக்களை நாவலில் சித்தரித்த அதே ஆசிரியர் இல்லையோ ?
ReplyDeleteபெயர் ஒற்றுமையில் குழம்பி விட்டேன். பெனடிக்ட் பாலனை நிநைதுகொண்டு இதை எழுதிவிட்டேன். குழப்பத்துக்கு மன்னிக்கவும்.
ReplyDelete