ஒரு
சமூகத்தின் ஆன்மாவை உயிர்ப்போடு வைத்திருப்பதில் வரலாற்றுணர்வு முக்கியமானது. அதிலும்
தேசிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தேசம் எனும் வகையில் ஈழத் தமிழ்த் தேசத்திற்கு வரலாற்றுணர்வு
மிக முக்கியமான ஒன்றாகிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலந்தொட்டு இலங்கை வரலாற்றுத்
எழுத்துக்களில் வஞ்சிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் வரலாறுகளைப் பலவேறு வகைளில் மீட்டெடுக்கப்படுவது
காலத்தின் அவசிய அவசர தேவையாகிறது.
தாய்
மண்ணும் மரபும் சார்ந்து அம்மக்களின் முன்னோர்கள் சந்தித்த எழுச்சிகளும் வீழ்ச்சிகளும்
அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு சிலிர்ப்பான புதிய அனுபவத்தைத் தந்தபடியே இருக்கும். மரபுகளிலும்
சூழல்களிலும் நாம் காட்டும் அக்கறையீனமும் வரலாறு மீதான எமது அலட்சியமும் எதிர்கால
சந்ததியை அதன் சொந்த மண்ணின் மீதான பற்றுணர்விலிருந்து அந்நியப்படுத்திவிடும்.
வரலாற்றை
எழுதுவது வரலராற்று ஆய்வாளர்களின் பணி ஆன போதிலும் வரலாற்றுணர்வை வளர்தெடுப்பதில்
'வரலாற்றை' வெகுசன மயப்படுத்துவது இன்றியமையாததாக அமைகின்றது. வரலாற்றை வெகுசன மயமாக்கியதில்
வரலாற்றிஞர்களைவிட வெகுசன ஊடக எழுத்தாளர்களினாலும்
கதாசிரியர்களாலுமே அதிகம் சாத்தியமாகிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றில் 'சோழர்கள்'
வரலாற்று நாயகர்களாக அதிகம் அறியப்பட்டவர்கள். தமிழ் நிலத்தின் பெருமிதங்களாக கடந்த
அரை நூற்றாண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையாலும் நினைவுகொள்ளப் படுவதர்கள். இதற்கு காரணம்
வரலாற்று அறிஞர்களான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மற்றும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ஆகியோரைவிட
கல்கியும் சாண்டில்யனும் அகிலனும் ஏனைய வரலாற்று நாவலாசிரியர்களும் தான் என்பதை நாம்
மறந்து விடலாகாது. ஆயினும் இந்நாவலாசியார்கள் வெறுமனே கற்பனையாக அல்லாமல் முன்பு குறிப்பிட்ட
வரலாற்று அறிஞர்களின் ஆய்வுகளை வெகுசன வாசிப்புக்கு உகந்த வடிவில் வெகுசன வரலாற்று
எழுத்துக்களாக ஆக்கியதன் மூலமே இது சாத்தியப்பட்டது.
துறைசார்
அறிஞர்களுக்கான பற்றாக்குறையும், புலப்பெயர்வும்
ஈழத் தமிழினத்தின் வரலாற்று ஆய்வுகளில் தடைக்கற்களாக அமைந்துள்ளது. துரதிஸ்டவசமாக
'தமிழின்' முதல் வரலாற்று நாவலை எழுதி வரலாற்று நாவலைத் தொடக்கி வைத்த ஈழத்தின் இலக்கிய
உலகிலிருந்து வளமான வரலாற்று நாவலாசிரியர்கள்
உருவாகவில்லை. இந்நிலையில் ஈழத் தமிழ் சமூகத்தின் 'வரலாற்றுணர்வின்' உருவாக்கம் வரலாறு
மீதும் தம் தாய் மண்ணின் மீதும் பற்றுதல் கொண்டு செயற்படுபவர்களாலாலேயே தொடர்ந்து முன்னெடுக்கப்
பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய வரலாற்று நாவலாசிரியர்களுக்கில்லாத முக்கிய பங்களிப்பு
இவர்களுக்கு உள்ளது. வரலாற்றை எழுதுவதற்கான
மூல ஆதாரங்களைத் தேடி ஆவணப்படுத்துவதுடன் அவற்றை வரலாற்று ஆய்வாளர்களின் பார்வைக்கு
கொண்டு முறையான வரலாற்று எழுத்துக்குள் அவற்றை உள்ளடக்கும் படி செய்துவிட்டுத்தான்
அவர்கள் வெகுசன வரலாற்றை எழுத்துக்களை உருவாக்குகிறார்கள்.
அத்தகைய
ஒருவராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அருணா செல்லத்துரையால் எழுதப்பட்டு அண்மையில்
வெளி வந்திருக்கும் நூல் 'அடங்காப்பற்று வன்னியில்
ஆதிகாலத் தமிழர் வரலாறு'. மேடைநாடகம் மற்றும் வானொலி நாடகக் கலைஞராக வெகுசன ரசனையை
அறிந்து கொண்ட அவர் தனது சொந்த மண்ணின் மீதான தீராத பற்றுதியால் வன்னியின் வரலாற்றை
ஏற்கனவே நான்கு பாகங்களாக வெளிக்கொணர்ந்தவராவார். தனதும் தனது மக்களின் ஆதி வரலாற்றை
ஆவணப்படுத்தவும் பரவல்ப்படுத்தவும் கொண்ட பேரவாவால் உருவானது இந்நூல். போர் தின்ற பூமியான
'அடங்காப் பற்று வன்னியில்' உள்ள வரலாற்றுப் பொக்கிசங்களை போர் சிதைத்தழித்ததுபோக மிஞ்சியதை
அபிவிருத்தியின் பெயராலும் இராணுவ முக்கியத்துவத்தின் பேராலும் திட்டமிட்ட அழிக்கப்பட்டும்
மறைக்கப்பட்டும் வருகின்ற சூழலில் கிடைக்கின்ற ஆதாரங்களை எதிர்கால உலகிற்கு இனங்காட்டிச்
செல்லும் தூரநோக்கை இந்நூல் கொண்டுள்ளது.
யுத்த
காலத்தில் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டதால் ஏறத்தாழ அசைவற்று தேங்கி அண்மைக்காலத்தில்
மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளினால் வெளிச்சத்திற்கு வந்த நாகர்களின் வரலாறு தொடர்பான தகவல்களின்
தொடர்ச்சியாக வன்னியின் குடியேற்றத்தின் மூல வேர்களை நாகர்களின் நாகரிகத்தோடு தொடர்புறுத்துவதுடன்
நூலாசிரியரின் சொந்த தேடல்களில் வெளிப்பட்ட தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கியுள்ளது
இந்நூல். இலங்கையின் சிறந்த வரலாற்றாசியர்களில்
ஒருவரான பேரா.சி.பத்மநாதனின் கருத்துச் செறிவுமிக்க அணிந்துரை குறித்த விடயம் தொடர்பான
அறிமுகத்தையும் இந்நூலின் சமகாலப் பங்களிப்பை வலியுறுத்துகிறது. 'அருணா செல்லத்துரையின்
கண்டுபிடிப்புகளினால் இருள்மயமாகிவிட்ட வன்னியின் ஆதி வரலாறு இப்பொழுது தெளிவாகவும்
விபரமாகவும் தெரிகின்றது என்ற அவரது கூற்று நூலாசிரியரின் தேடலுக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
வன்னியின்
ஆதி வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமுள்ள
சான்றுகளை அடையாளங் காட்டுகின்ற தெளிவான வர்ணப் புகைப்படங்கள் நூலின் இறுதி அலகாக அமைந்துள்ளது.
வரலாற்றை மரபோடும் சூழலோடும் கோர்வைப்படுத்தி ஒரு சமூக விழிப்புணர்வினை உருவாக்குவதாக
இப்புகைப்படத் தொகுப்பு இந்நூலின் அரைவாசியளவுக்கு அமைந்துள்ளது. இது இந்நூலின் முக்கியத்துவத்தில்
முதன்மையானது. ஏனெனில் இதில் குறிப்பிட்ட தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகளில்
கணிசமானவை இன்றில்லை அல்லது இன்று எம்மால் அவற்றை அணுக முடியாத நிலையில் எதிர்கால ஆய்வுகளுக்கு
இவையே முதன்மை ஆதாரமாக மாறுப்போகின்ற நிலையே தென்படுகின்றது. இப்படங்களில் மூலப்பிரதிகளை
முறையாக ஆவணப்படுத்தும் நிறுவனங்களுக்கும் கையளித்தல் மிகவும் பயனுடையது. தமிழ் பதிப்புலகத்தின்
தற்போதைய நிலையில் பெரும்பொருட்செலவை கோரும் வர்ணப் படங்களை வெளியிட்டமைக்கு அருணா
வெளியீட்டகத்தைப் பாராட்ட வேண்டும்.

வன்னியின்
ஆதி வரலாற்றுத் தடங்களை ஆறுகள், குளங்கள், மற்றும் அணைக்கட்டுகளளாடு தொடர்புறுத்தி
ஆராய்வது முன்பு குறித்த மாதிரி வரலாற்றுப் பயனை மட்டுமின்றி அவற்றின் பேணுகை பற்றிய
விழிப்புணர்வையும் ஏற்படுத்த உதவுக்கூடும். இலிங்க வழிபாடு மற்றும் நாக, நாகலிங்க வழிபாடுகள்
பற்றிய குறிகாட்டல் ஆர்வத்தை தூண்டக்கூடியதுடன் குறித்த திசைநோக்கிய தேடலையும் உண்டாக்க
வல்லவை. ஆதித் தமிழ் பௌத்த சான்றுகளையும் இணைத்திருப்பது பார்க்குமிடமெல்லாம் பரவிவரும்
புத்தசிலைகளை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள ஒரு பருவரைபை தரும்.
வன்னியினதும்
ஈழத்தமிழர்களினதும் ஆதி வரலாற்றினை கட்டியெழுப்பத் தேவையான அடையாளப்படுத்தல்களைச் செய்துள்ள
இந்நூல் இத்திசையில் ஆர்வமுள்ளவர்கள் கவனத்திற்கு அவசியம் வரவேண்டிய நூல்களிலொன்று.
x
No comments:
Post a Comment