Saturday, September 30, 2023

புத்தகம் என்றால் என்ன?

புத்தகம் என்றால் என்ன? இந்தக் கேள்வி விநோதமானதாகவும் முட்டாள்த் தனமாகவும் தெரியலாம். புத்தகம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது என்ன? நாம் அடிக்கடி புழங்குகின்ற, வாசிப்பதற்கு இலகுவாக கவர்ச்சியாகவும் சீராகவும் காகிதத்தாள்களில் எழுத்துக்கள் அச்சிடப்பட்டு, அவற்றை ஒன்று சேர்த்து நேர்த்தியாகக் கட்டப்பட்ட ஒரு பௌதீகப் பொருளான நவீன அச்சுப்புத்தகம் ஒன்றுதானே. நவீன அச்சியந்திரம் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஜெர்மனியரான ஜொகன்னஸ் கட்டன்பேர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை நாம் அறிந்திருப்போம். 1455 இல் அவரால் அச்சிடப்பட்ட பைபிளே முதல் நவீன அச்சுப்புத்தகம். இதற்கமைய நவீன அச்சு புத்தகத்தின் தோற்றமும் வரலாறும் ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்குட்பட்டது.


கட்டன்பேர்க் அச்சிட்ட பைபிளின் தோற்றம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கிறித்தவர்களின் புனிதப் புத்தகம் கட்டன்பேர்க் காலம் வரை எவ்வாறு இருந்தது. பைபிளின் பழைய ஏற்பாடு ஆரம்பத்தில் விலங்குத் தோலாலான ‘பார்ச்மென்ட்’ (Parchment) எனும் பொருளாலான ‘சுருள் புத்தகமாக' (Scroll) இருந்தது. பின்னர் இன்றைய அச்சு புத்தக வடிவமைப்பின் மூதாதையான ‘கொடெக்ஸ்’ (Codex) புத்தகமாகவும் இருந்தது. அதேபோல் 5000 ஆண்டுகள் பழமையான, உலகின் முதல் காவியமான ‘கில்காமேஷ்’ சுமேரியாவில் ‘களிமண் தட்டு’ (Clay Tablets) புத்தகமாகவே இருந்தது. இந்தக் களிமண் தட்டுப்


புத்தகமே உலகின் முதற் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  நம் செவ்வியல் இலக்கியங்களான ‘பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள்’ போன்றவை பனை ஓலைகளிலான ஏட்டுச் சுவடிகளில் புத்தகங்களாக இருந்தன. இவையெல்லாம் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கவில்லை.
சீனாவில் ‘கன்பூசியஸின் சிந்தனைகள்’  பட்டுத்துணிகளிலும் பின்னர் கடதாசியிலும் புத்தகங்களாக இருந்தன. கடதாசியின் அறிமுகத்தோடு சீனாவில் அச்சடிப்பின் முதல் முன்முயற்சிகள் தோற்றம் பெற்றன.


தற்காலத்தில் மிகவும் பிரபலமான புத்தகமொன்றை ஒருவர் அச்சுப் புத்தகமாகவும் இன்னொருவர்  மின்புத்தகமாகவும் வாசிக்கின்றார்கள் என எடுத்துக்கொள்வோம்; இதில் அச்சுப் புத்தகமாக வாசிப்பவரை மட்டும் புத்தகத்தை வாசிப்பதாக நாம் கருதாமல், இருவருமே புத்தகத்தை வாசிப்பதாக நாம்‌ ஏற்றுக்கொள்கிறோம்‌ அல்லவா? மின் புத்தகம் தொட்டுணரமுடியாத மென்பொருளாக இருக்கின்ற போதிலும் அந்த வேறுபாட்டை நாம் கவனத்தில் கொள்வதில்லையல்லவா?


மேலே நாம் பார்த்தவற்றிலிருந்து புத்தகம் என்பதில் தொட்டுணரக்கூடிய களிமண்தட்டு, பார்ச்மென்ட், ஓலைச்சுவடி, பட்டுத் துணி, கடதாசி உள்ளிட்ட பௌதிக பொருள் என்ற விடயமோ  தொட்டுணரமுடியாத மென்பொருள் என்ற விடயமோ, அதுபோல  தட்டு, சுருள், கோடெக்ஸ், சுவடி, மின்புத்தகம் போன்ற வெவ்வேறு மூலங்களும் வடிவங்களும் தரக்கூடிய வேறுபாடுகளோ கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் அனைத்தும் புத்தகங்கள் என்றே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.


அப்படியாயின் எதை புத்தகமாகக் கொள்கிறோம்? அவை வேறுபட்ட வடிவங்களிலும் தன்மைகளிலும் அமைந்துள்ளபோதிலும் அவை சாராம்சத்தில் ‘பிரதி அல்லது பனுவல் அல்லது உரை மூலத்தை’ பதிவுசெய்து வைத்திருத்தல், அவற்றை வாசகருக்கு ஊடுகடத்தல் என்ற ஒரே மாதிரியான அல்லது குறைந்தபட்சம் ஒத்த தொழிற்பாட்டையே செய்கின்றன.  பௌதீக வடிவங்கள் அல்லது தொட்டுணர முடியாத் தன்மை, என்பவற்றைவிட அவை பதிவுசெய்து ஊடுகடத்துகின்ற ‘பிரதி அல்லது பனுவல் அல்லது உரை மூலமே’ (Text) புத்தகம் என்பதால் இங்கு அர்த்தப்படுத்தப்படுகிறது. 


புத்தகங்கள் பொதுவாக இலக்கியம், சமயம், தத்துவம், அரசியல், கல்வி மற்றும் ஆய்வுசார் பிரதிகளுடனேயே தொடர்புபடுத்திக் கொள்ளப்படுகின்றன.  ஆயினும் தோட்டக்கலை, வாகனத் திருத்தம் போன்ற


தொழில் சார்ந்தவை, சமையற் குறிப்புகள், சிற்ப சாத்திரம், கட்டிடக்கலை, அகராதிகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் போன்ற பலவகைப்பட்ட கருப்பொருள் சார்ந்து புத்தகங்கள் இருக்கின்றன.  அதுபோலவே புத்தகம் என்பதை எழுத்துக்களுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்க்கின்றதே வழக்கமாக இருக்கின்றது.  சிறுவயதில் படம் பார்த்து கதை சொன்ன படங்கள் மட்டும் கொண்ட சிறுவர் கதைப்புத்தகங்கள், வர்ணம் தீட்டும் புத்தகங்கள், ஓவியப் புத்தம், உலக மற்றும் பிரதேச வரைபடப்புத்தகங்கள் (ATLAS), சித்திரக்கதைகள், ஒளிப்படப் புத்தகங்கள் (Photo Books), (மன அழுத்த சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகின்ற) வளர்ந்தோருக்கான வர்ணம் தீட்டும் புத்தகங்கள் (Colouring books for adults) போன்றவற்றில் புத்தகப்பிரதி எழுத்துக்களாக இல்லாமல் படங்களாகவும் உருக்களாகவும் இருக்கின்றது.


பிரதியை அல்லது பனுவலை புத்தகம் என்று சொல்கிறோம் எனக் கருதினால் ஒரு வாரப்பத்திரிகை அல்லது வார இதழில் வெளிவருகின்ற தொடர்கதைகள், விடயம் சார் தொடர் கட்டுரைகள், சிறுகதைகள், பத்திகள் போன்றவற்றை ஏன் நாம் புத்தகம் என்ற சொல்வதில்லை? ஒரு போட்டோ அல்பத்தை (Photo Album) புத்தகம் என்ற வகைக்குள் அடக்குவதில்லையே? வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த அதே பிரதி பின்னர் எவ்வாறு புத்தகமாக மாறுகிறது, பல்வேறு மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளோ கட்டுரைகளோ பிரதி வேறுபாடு இல்லாதபோதும் பின்னர் எந்தச் செயல்முறையினூடாக புத்தகமாக மாறுகின்றன?


புத்தகம் என்பதன் முக்கிய கூறுகளாக அமைப்பொழுங்கு, வடிவம் என்பன எடுத்துக்கொள்ளுகின்ற பங்கினை மேற்குறித்த உசாவல்களூடாகவே கண்டடைய முடியும்.  தமிழ் மரபிலும், நூல் என்பதைக் குறித்து ஆராயுமிடங்களில் அமைப்பொழுங்கு, வடிவம், போன்ற விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துப்பட்டுள்ளது. நன்னூல் இவ்விடயத்தில் அறியப்பட்டது. இங்கு குறிக்கப்படும் அமைப்பொழுங்கு, வடிவம் என்பன பௌதீகத் தன்மையை மையப்படுத்தியதாகவே ஏற்படுத்தப்பட்டவை. 

  • தலைப்பு - Title,
  • நேரியல் தன்மை வாய்ந்து அல்லது சீரான கட்டமைப்பு: பக்க இலக்கங்கள், அத்தியாயங்கள், வரிசை (அகரவரிசை, ஓசையொழுங்கு போன்றன) - Linear structure: page numbers, chapters, alphabetical order
  • பிரதான பிரதி அல்லது உரைமூலம் - Body [text and images]

ஆகிய அமைப்பொழுங்கு சார்ந்து பௌதீகத் தன்மையில் ஒன்றிணைக்கப்பட்ட தன்மை என்பவற்றைக் கொண்டிருப்பது புத்தகம் என்பதாக நூலியலாளர்கள் கருதுகிறார்கள்.


வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த தொடர்கதை ஒன்றை மேலே குறித்த ஒழுங்கிற்கமைய ஒன்றிணைத்து கட்டிவைக்கும் போது அது புத்தகமாகிறது. அதுபோலவே பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை தொகுத்து புத்தக அமைப்பொழுங்கில் ஒன்றிணைத்து கட்டிவைக்கும் அது ஒரு புத்தகமாகிறது. புத்தகமாக்குவதற்கு கையெழுத்துப்பிரதியாக கதைகள், கவிதைகள் அல்லது கட்டுரைகளை மேலே குறிப்பிட்ட அமைப்பொழுங்கில் எழுதி வைக்கும் போது அது ஆரம்பநிலை புத்தகமாகிறது.



புத்தகம் என்பதன் அமைப்பொழுங்கு, பௌதீக ஒன்றிணைப்பு என்பவற்றை விளங்கிக் கொள்ள மேலும் ஒரு விடயத்தை பார்க்கலாம். ஒரு வெற்றுத்தாளை எடுத்துக்கொண்டால் தாளாக அது பிரதி, புத்தகம் எவற்றுக்குள்ளும் அடங்குவதில்லை. ஆனால் முன் குறிப்பிட்ட வர்ணம் தீட்டும் புத்தகங்களில் ஒரு நோக்கோடு இணைக்கப்படுகின்ற வெற்றுத்தாள் அல்லது தாள்கள் அதன் உள்ளடக்கதோடு இணைந்து ஒரு புத்தகத்தின் பக்கம் அல்லது பக்கங்களாகின்றன. அதுபோல் வெற்றுத்தாள்களை மட்டும் ஒன்றிணைத்து கட்டும் போது அது அப்பியாசப்பயிற்சி அல்லது குறிப்புப் புத்தகமாக (Exercise Book or Note book) மாற்றம் பெறுமே தவிர அது புத்தமாக ஆகுவதில்லை. பக்கங்களை ஒரு வடிவ எல்லைக்குள் அடக்காமல் தாறுமாறான வடிவங்களில் அல்லது தொடர்பற்ற, பொருளற்ற,   வகையில் ஒன்றிணைக்கப்பட்டது ஒரு புத்தகமாக கருதப்படுவதில்லை. இதுபோன்ற சிக்கல்கள் புத்தகம் என்பதற்கான வரையறுப்பில் இன்னும் சில விடயங்களை தேவையாக்கின. அத்துடன் ஆண்டு, அரையாண்டு இதழ்கள், ஆய்விதழ்கள், சிறுபிரசுரங்கள் போன்றவற்றை புத்தகம் என்பதிலிருந்து வேறுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளதால் 1964 யுனொஸ்கோ புத்தக வரையறையில் “பருவ வெளியீடல்லாத, முன் அட்டைகள் தவிர்ந்து 49 பக்கங்கள் கொண்டவை என புத்தகத்திற்கு ஒரு நிபந்தனை செய்கிறது.


ஆதலால் முன்பு குறிப்பிட்ட 03 அம்சங்களுக்கு மேலதிகமாக:

  • பருவ வெளியீடல்லாத  (Non-periodical)
  • குறைந்த பட்ச அளவு (A minimum length)
  • பிரதியின் உள்ளடக்க முக்கியத்துவம் (Emphasis on textual content)
  •  புத்தகம் தருகின்ற தகவல் கட்டமைப்பு (Book information architecture)
  • வடிவ எல்லைகள் (Boundaries to its form)

போன்ற அம்சங்களை புத்தகம் என்பதற்கான அடிப்படை கூறுகளாக நூலியலாளர்கள் முன்வைக்கின்றனர்.


பௌதீகத் தன்மையை மையப்படுத்திய, பௌதீகப் புத்தகத்திற்கான இவ்வடிப்படைகள் அபௌதீகத் தன்மை கொண்ட மின்புத்தகங்களுக்கு பொருத்தமானதா? பெரும்பாலும் பௌதீக புத்தகங்களின் மின்வருடல்களையே மின்புத்தகங்களாக அதிகம் பயன்படுத்தும் தமிழ்ச் சூழலில் இக்கேள்விக்கான தேவை இல்லை. இருப்பினும், தொட்டுணரமுடியா அபௌதீக தன்மை கொண்டதாக இருந்தாலும் ஒரு புத்தகமாக அது எப்படிக் கருதப்படுகின்றது என்ற வகையில் மின் புத்தகங்களிலும் இவ்வடிப்படைகள் மாறாமல் இருக்கின்றது என்பதை முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டும்.

இதுவரை நாம் புத்தகம் என்பதை காட்சிபுலனான கண்ணோடு


தொடர்புடையதாகவே அணுகியுள்ளோம்.  தற்காலத்தில் கவன ஈர்ப்புப் பெற்றவையாக உள்ள கேள்விப்புலனோடு தொடர்புடைய ‘ஒலி நூல்கள்’ எவ்விதம் புத்தகமாக கருதப்படுகின்றன என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? கண்ணால் பார்த்து வாசிக்கும் புத்தகங்களுக்கு நிகரான வரலாற்றுத் தொன்மை கேள்விப் புலனால் அறியும் ஒலிநூல்களுக்கும் உள்ளது. எழுதாக்கிளவி எனப்படுகின்ற வேதங்களும், பாணர்களால் பாடப்பட்ட சங்கக் கவிதைகளின் ஆரம்பங்களும் ஒலிநூல்களாகவே இருந்தன. முன்பு வழக்கில் இருந்த கதாகாலசேபங்களும் ஆப்பிரிக்க பழங்குடி சமூகங்களில் உள்ள ‘கதைசொல்லி’களும் ஒருவகையான ஒலி நூல்களே.


பண்டைய ஒலிநூற்கள் எல்லாம் நவீன காலத்தில் அச்சுப் புத்தகங்களாக மாற்றமடைந்து விட்டுள்ள நிலையில் தற்காலத்தில் பெரும்பான்மையான ஒலி நூல்கள் பௌதீக புத்தகங்களின் ஒலி பெயர்ப்பாகவே வெளிவருகின்றன. ஆகையால் புத்தகத்திற்கான அடிப்படைக் கூறுகள் இவற்றுக்கும் பொருந்தமுடையனவாக உள்ளன.

அண்மைகாலத்தில் மனிதப் புத்தகங்கள் என்ற ஒரு விடயம் உருவாகியுள்ளது.


அதேபோல் Books என்ற ஒரு விடயமும் பரீட்சார்த்தமாக உள்ளதாக அறியமுடிகிறது. புத்தக அடிப்படைகளுக்கு சவாலாக இருக்கின்றன. இவ்வாறு புத்தகத்தின் பரிணாமம் வளர்சியடைந்துகொண்டே வருகிறது. இவைபோன்ற பரிணாமம் மற்றும் பரிமானங்களின் தொடர்ச்சி புத்தகம் என்பதை வரையறை செய்வதில் சவால்களை தோற்றுவித்துள்ளன. 


UNESCO, International Standard Book Number - ISBN மற்றும் Library of Congress USA போன்றவை புத்தகங்களுக்கான நியம வரையறையைச் செய்துள்ளன. AMEZAN, Google books போன்றவையும் வேறுபல புத்தக வர்த்தக நிறுவனங்களும் தத்தமது வணிகநோக்கில் புத்தக வரையறையைச் செய்துள்ளன. இவையும் புதிய இற்றைப்படுத்தலுக்களுக்கு (updates) ஏற்ப மாறக்கூடும்.


புத்தகம் என்பது என்ன என்ற கேள்விக்கான பதில் பரந்து விரிந்தது. முன்பே குறித்தமாதிரி அதன் தொடர்ச்சியான வளர்ச்சி, வரையறை செய்வதை சிக்கலாக்கி உள்ளது. இவையெல்லாவற்றை இந்த கட்டுரை கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் விரித்தும் துல்லியமாக்கியும் இவ்விடயத்தை வளர்த்து செல்லவும் உரையாடவும் ஒரு முன்வைப்புத்தான். இதுதொடர்பில உரையாடல்கள் தொடர வேண்டும்.