Wednesday, August 17, 2011

திருகோணமலை உள்ளூராட்சி தேர்தல் : ஒரு கள அனுபவம் -உரையாடலுக்காக


உள்ளுராட்சி சபைகள் இலங்கை அரச கட்டமைப்பில் மிகச்சிறிய அதிகார அலகாகும். குறிப்பிட்ட உள்ளுராட்சி எல்லைக்குள் வாழ்கின்ற மக்களால் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்ற குறித்த உள்ளுராட்சி எல்லைக்குள் ஆளுகின்ற குட்டி அரசாங்கமாகும். அத்துடன் இது மக்களுடன் நெருங்கிய தொடர்புடையது. பொதுச்சுகாதார வசதிகள், வீதி அபிவிருத்திகள், உட்கட்டமைப்பு வசதிகள், நூலகம், சனசமூக நிலையம், பாரம்பரிய வைத்தியசாலைகள், நாட்சந்தைகள், கடைகள் மற்றும் சிற்றுண்டிசாலைகள் ஆகியவற்றை நேரடியாக நிர்வாகம் மற்றும் ஒழுங்கு படுத்தும் அதிகாரம் இச்சபைகளுக்கு உரியது. இச்சபைகள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகின்ற தேர்தல் மூலம் மக்களால் தேர்தெடுக்கப்படுகின்றது. ஆகவே இத்தேர்தலில் மக்கள் பங்கேற்வேண்டியது அப்பகுதி மக்களின் நன்மைக்கு அவசிமானது.

ஊள்ளுராட்சி சபைத்தேர்தல்கள் தேசிய அளவிலான தேர்தலைப் போலல்லாது ஒரளவு சுதந்திரமாகவும் சுயத்தன்மைகொண்டதாகவும் அமைகின்றன்றது. தேசியளவிலான கட்சிகளின் அதிகாரங்களிலிருந்து ஓரளவு விடுபட்டு அப்பிரதேச நன்மைகருதி செயற்படும் வாய்ப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. தவிர அரசியலில் புதியவர்கள் நுழைவதற்கு வழியாக இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களே அமைகின்றன. திருகோணமலையில் இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல்களில் 50மூ இற்கும் அதிகமானோர் புதியவர்களாகவே இருந்தார்கள். சில இடங்களில் இது 80மூ ற்கும் அதிகமாகவும் காணப்பட்டது.

பெருமளவு வருமானங்களை கடந்த கால திருகோணமலை நகரசபை, பிரதேசசபைத் தலைவர்கள், உபதலைவர்கள் ஈட்டியபடியால் பிரதேசபை பதவிஎன்பது வருமானம் ஈட்டக்கூடிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இதனால் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் பெரும்பாலும் கட்டிட ஒப்பந்தக் காரர்களாகவும், பெரும் வியாபாரிகளாகவுமே காணப்படுகிறார்கள். தமிழ்க் கட்சிகளும் இதுவிடயத்தில் அக்கறை கொள்ளாமல் செலவில்லாமல் தமது கட்சி எப்படியாயினும் வெற்றிபெற்றால் சரி என்ற மனநிலையிலேயே செயற்படுகின்றன.

தனிப்பட்ட வேட்பாளர்களின் செல்வாக்கு என்பதை விட தமிழ்க்கட்சிக்கே வாக்குகள் என்ற நிலமையே தமிழ்த் தேசிய தரப்பில் காணப்படுகிறது. மறுபுறத்தே அரசாங்கத் தரப்பில் இது மறுதலையாக கட்சிகளுக்கல்லாமல் வேட்பாளர்களுக்கே வாக்குகள் எனறு காணப்படுகிறது. இதனால் அரசாங்க வேட்பாளர்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையான குடும்ப உறுப்பினர்களையும் உறவினர்களையம் கொண்டவர்களாகவே தேர்வு செய்யப்பட்டார்கள். சிலர் செல்வாக்குள்ள இளைஞர் கழக இளைஞர்களாகவும் காணப்பட்டார்கள்.

ஊள்ளுராட்சி தேர்தல்களில் முக்கியமாக எமது கிராமத்தவர், எமது உறவினர், எமது சாதியச் சேர்ந்தவர் என்பன போன்ற உள்ளுர் தன்மைகள் முக்கியமானவையாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் காணப்பட்டன. சாதி என்ற விடயத்தைப் பொறுத்தவரை திருகோணமலையில் குறிப்பிட்ட ஒரு சாதியின் மேலாண்மை என்பதைவிட தத்தமது சாதி ஆதிக்கம் பெறவேண்டும் என்ற தன்மையே காணப்படுகிறது. உள்ளுராட்சி சபைத் தலைவராக வருபரே அபிவிருத்தி வேலைகளை அதிகமாக செய்ய முடியும் என்ற நிலை காணப்படுவதால் தாம் வாழ்கின் சூழலின் நன்மைகருதி மேற்குறிப்பிட்ட உள்ளுர்தன்மைகள் அழுத்தமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுகின்றன.

கிராமத்தின் அனைத்து சங்க நடவடிக்கைகளிலும், கூட்டங்களிலும், செயற்பாடுகளிலும் பெண்கள் பெருமளவு பங்கேற்ற போதும் அனைத்து கட்சிகளிலும் பெண்வேட்பார்கள் எண்ணிக்கை 1 அல்லது 2 ஆகவே காணப்பட்டது. சமூக செயற்பாடுகளில் தீவிரமாக பங்கெடுக்கின்ற கிராமப் பெண்கள் மத்தியில்க்கூட தேர்தல், அரசியல் என்பது ஆண்களுக்கானது எனற கருத்தே நிலவுகின்றது.

இந்நிலமையை கருத்தில் கொண்டு பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவித்தல் எனும் நோக்கோடு செயற்பட்ட தேசிய அரசார்பற்ற நிறுவனம் அரசியலில் போட்டியிட விருப்புமுள்ள பெண்களை அழைத்து பயிற்சி வழங்கியது. இதன் போது தேர்தலில் போட்டியிட விரும்பிய பெண்கள் தத்தமது கட்சிகளை தாமே தெரிவு செய்து கொள்ள விடப்பட்டார்கள். இதனால் ஒரேதாக பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள் வௌ;வேறு கொள்கையுடைய எதிர்ரெதிரான கட்சிகளில் போட்டியிட்டார்கள். சில இடங்களில் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஒரே கிராமப் பெண்க்ள கூட வேறு வேறு கட்சிகளில் போட்டியிட வேண்டி ஏற்பட்டது. பேரும்பாலும் தமிழ்தேசிய தரப்பில் போட்டியிட தமிழ் பெண்கள் விரும்பிய போதும் பழமைவாத சிந்தனையுள்ள தமிழ்கட்சிகளின் தலைமை அதற்கு இடமளிக்கவில்லை. ஏற்கனவே தாம் தேர்தலில் போட்டியிடுவதாகப் பிரசாச்சாரம் செய்த அப்பெண்கள் இதனால் தேர்தலில் போட்டியிட்டால் போதும் என்று வாய்ப்பு வழங்கிய ஏதாவது ஒரு கட்சியில் போட்டியிட்ட நிலமையும் காணப்பட்டது.

சுனாமிக்குப் பின்னர் அனைத்து சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் தம்முள் உள்வாங்கிய அரசார்பற்ற நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் அரசியல் சார்பற்றவராக, அரசியலில் கலக்காதவராக இருத்தலே சிறந்தது என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சிந்தனையை, தாம் உள்ளவாங்கிய அனைத்து கிராமமட்ட சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஆழமாக பதியச் செய்ததினால் சமூக மட்ட அமைப்புக்கள் தேர்தல் என்றாலோ அரசியல் என்றாலோ தமக்கு சம்பந்தமற்றதாகவே நோக்குகின்றன. மேலும் அவை அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்று செய்றபாடுகளை மேற்கொண்டு பழகியதன்மையையே தேர்தல் வேட்பாளர்களிடமும் கடைப்பிடிக்கின்றன. இது எமது சமூகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளால் ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று.

தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது கண்காணிப்பு பணிகளுக்க உதவியாக சக அரசசார்பற்ற நிறவனங்களையே நாடிய படியால் அவை பொருத்தமற்ற, தேர்தல் மற்றும் அரசியல் பழக்கமற்ற நபர்களையும் பெரும்பாலும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களையும் இக்கண்காணிப்பு பணிகளுக்கு வழங்கியிருந்தன. இது கண்காணிப்பை அர்த்தமற்றதாக்கியிருந்தது. இதற்கு மாறாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் சமூக அக்கறையுள்ளவர்களை இனங்கண்டு அவர்கள் மூலம் தேர்தல் கண்காணிப்பை செய்தல் பயனுடையது.


அரசியல் நீக்கப்பட்ட சமூகசேவையே சிறந்தது என்ற சிந்தனையை ஊன்றச் செய்த அரசார்பற்ற நிறுவனற்கள் தமது செய்றபாடுகளில் இதற்கு மாறாக பின்தங்கிய அரசியல் குழுக்களினது அரசியல் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் செயல்பாட்டிலும் தேர்தல் கண்காணிப்பு போன்ற அரசியல் முக்கிய நிகழ்வகளிலும் பங்கெடுத்துக் கொள்கின்றன. இதனை நாம் முக்கியமாக கவனத்தில் கொண்டு அரசார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சிநிரல் பற்றி சிந்திக்க் வேண்டும்

இறுதியாக உள்ளுராட்சி சபைத்தேர்தல்களில் முன்பு ஊழல் மற்றும் முறைகெடுகளில் பிரபலமாக அம்பலப்பட்டவர்களையும் வெறுமனே தம் அந்தஸ்த்துக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றேன் என கூறி போட்டியிடுகின்றவர்களையுமே மக்கள் தலைவர்களாகவும் உபதலைவர்களாகவும் தெரிவு செய்திருக்கிறார்கள். இந்த மனநிலை பற்றி விரிவாக உரையாட வேண்டும்

No comments:

Post a Comment