Wednesday, June 29, 2011

தமிழனாக மட்டுமல்ல இலங்கையனாகவும் என்னால் செய்ய முடிவது பிராத்தனை மட்டுமே

இலங்கையின் தமிழ்ப் பிரஜையாக என்னால் என்ன செய்ய முடியும். எதுவுமே செய்யமுடியாது என்பது உடனடியான பதிலாக இருக்கும். சரி இலங்கைப் பிரஜையாக என்னால் என்ன செய்யமுடியும். அதற்கும் ஒன்றும் செய்யமுடியாது என்ற பதிலையே விசனமாக சொல்லமுடியும். என்னால் சிலவற்றைச் செய்யமுடியும் ஆனால் இங்கு நான் குறிப்பிடுவது அரசால் நான் செய்ய அனுமதிக்கின்றவற்றைப் பற்றியே. நான் செய்வதற்கு அரசால் அனுமதிக்கப்படுபவை என்னுடைய உரிமைகள் என அழைக்கப்படக்கூடியன.

மனிதன் கொளரவமாக வாழ்வதற்க தேவையானவை எல்லாம் மனித உரிமைகள் என்றாலும் அடிப்படையில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்/சாற்றுரை(Universal Declaration of Human Rights -UDHR)யில் சொல்லப’பட்ட 30 உரிமைகளும் பிறக்கும் போதே உள்ளதும் யாராலும் பாராதீனப்படுத்தப்பட முடியாதவனவாகவும் உலகளாவிய ரீதியில் உள்ளன. இதனடிப்படையில் பின்னர் சர்வதேச மனிஉரிமைகள் சட்டமும் சர்வதேச மனிதாபிமான சட்டமும் ஆக்கப்பட்டன. இவற்றை தமது நாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு உறதிப்படுத்துவதாக ஐ.நா வில் உள்ள பலநாடுகள் கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கையும் இவற்றில் கையெழுத்திட்டது. அதன்படியே சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் சொல்லப்பட்ட உரிமைகள் சிலவற்றை தனது பிரஜைகளுக்கு வழங்குவதாக இலங்கை அரசு அரசியல் சாசனத்தில் 3வது அத்தியாத்தில் உறுதியளித்துள்ளது.

இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களில் உள்ளவற்றை ஒரு நாடு தனது அரசியல் அமைப்பில் ஏற்று உறுதிப்படுத்திய உரிமைகள் அந்நாட்டின் “அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என அழைக்கப்படும். இதன்படி பார்த்தால் இலங்கைப் பிரஜையான எனக்கு அனுபவிப்பதற்காக சில உரிமைகள் அரசியல் சாசனத்தாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளன. பின்னர் ஏன் இலங்கையனாக என்னால் பிராத்தனை மட்டுமே செய்ய முடியும் எனக்கூறுகிறேன். அதற்கு நான் இலங்கை அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்தப்பட்டவற்றையும் அதன்பின்னாலுள்ள மட்டுப்பாடுகளையும் உங்களுக்கு சொல்லவேண்டிவரும்.

இலங்கையின் அரசியல் அமைப்பின் அத்தியாயம் III இல் உறுப்புரை 10 தொடக்கம் 14 வரை அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை முழுமையாக தந்தால் அதுவே தனியாக நீண்டுவிடும் என்பதால் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானதை முழுமையாகவும் ஏனையவற்றைச் சுருக்கியும் தருகிறேன். இதில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அடிப்படை உரிமைகள் என்ற வெளியீட்டில் உள்ளவை.

உறுப்புரை : 10

ஆளொவ்வருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராகயிருத்தற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

உறுப்புரை : 11

ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.

உறுப்புரை: 12

சமத்த்துவத்திற்கான உரிமையைக்கூறுகிறது. இது (12.1), (12.2), (12.3), (12.4) ஆகிய பகுதிகளைக்கொண்டது.

12.1 : சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சம்மானவர்கள்;அத்துடன்
சட்டத்தினால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.

உறுப்புரை : 13

எதேச்சையாக கைதுசெய்யப்படாமலும் தடுத்துவைக்கப்படாமலும் அத்துடன் தண்டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்திரம். கடந்தகாலத்தை உள்ளடக்கும் பயனுடையனவான தண்டனைச்சட்டவாக்களைச் தடைசெய்தல் பற்றி கூறகிறது. இது (13.1), (13.2), (13.3), (13.4), (13.5), (13.6), (13.7) ஆகிய பகுதிகளைக் கொண்டது.

உறுப்புரை : 14

(1) ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு உரித்துடையவராவார் :-

(அ) வெளிப்படுத்தலுட்பட பேச்சுச் சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும்

(ஆ) அமைதியான முறையிலே ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்

(இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம்

(ஈ) தொழிற் சங்கமொன்றை அமைக்கவும் அதிற் சேரவும் உள்ள சுதந்திரம்

(உ) தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து, பகிரங்கமாகவேனும் அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும், அனுசரிப்பிலும், சாதனையிலும், போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்

(ஊ) தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்தக்
கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது
சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரம்

(எ) ஏதேனும் சட்டமுறையான முயற்சியில், உயர் தொழிலில், வியாபாரத்தில், தொழிலில் அல்லது தொழில்முயற்சியில் தானாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதற்கான சுதந்திரம்

(ஏ) இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ஆன சுதந்திரம் அத்துடன்

(ஐ) இலங்கைக்குத் திரும்பிவருவதற்கான சுதந்திரம்

இந்த நான்கு உறுப்புரைகளிலும் முழுச்சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 14ம் உறுப்புரையில் ஏறத்தாழ முக்கியமான எல்லா சுதந்திரங்களும் உறதிசெய்யப்பட்டுள்ளது. ஆம் இப்படித்தான் நானும் நம்பினேன் 15வது உறுப்புரையைப் படிக்கும் வரை

உறுப்புரை : 15
அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகளை கூறுகிறது. இது (15.1), (15.2), (15.3), (15.4), (15.5), (15.6) எனப் பகுதிபகுதியாக அடிப்படை உரிமைகள் மீது மட்டுப்பாடுகளை விதிக்கிறது. அடுத்து வரும் (15.7) ஆம் உறுப்புரையோ ஏறத்தாழ அடிப்படை உரிமைகள் முழுவதன் மீதும் மட்டுப்பாடுகள் விதிக்கிறது. அதன் மட்டுப்பாடுகள் பின்வருமாறு உள்ளது

உறுப்புரை: (15.7)

12 ஆம் 13 (1) ஆம், 13(2) ஆம், 14 ஆம் உறுப்புரைகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லா அடிப்படை உரிமைகளினதும் பிரயோகமும் தொழிற்பாடும், தேசிய பாதுகாப்பு, பொது மக்கள் ஒழுங்கு, பொது மக்கள் சுகாதாரத்தை அல்லது ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் என்பவற்றின் நலன்கருதி, அல்லது மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றிக்கு முறையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துக்காக அல்லது சனநாயகச் சமூகத்தின் பொதுச் சேமநலத்தின் நீதியான தேவைப்பாடுகளை ஈடுசெய்யும் நோக்கத்துக்காகச் சட்டத்தினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைவனவாதல் வேண்டும்.

கடந்த 30 வருடங்களாக தேசிய பாதுகாப்புக்காக அவசரகால விதிகளின் கீழ் ஆளப்பட்டுவரும் இலங்கையில் தேசியப் பாதுகாப்புக்காக மேற்சொன்ன மட்டுபாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆக மட்டுப்பாடுகளுக்கு உள்ளாகமல் அரசியலமைப்பினால் இலங்கைப்பிரசைகளுக்கு உறுதி செய்யப்பட்ட உரிமைகள் இரண்டு

  1. உறுப்புரை 10 ஆல் வெளிப்படுத்தப்பட்ட “ஆளொவ்வருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராகயிருத்தற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.
  2. உறுப்புரை 11 ஆல் வெளிப்படுத்தப்பட்ட ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
ஆகிய இரண்டுமே. இதில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற உலகிலேயே கொடுமையான சட்டம் உள்ள இலங்கையில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கைதுசெய்யப்பட்ட பலர் திரும்பவில்லை அப்படி திரும்பியவர்களில் சித்திரவதைக்கு உள்ளாகதவர் எவருமில்லை. அதன்படிக்கு 11ம் உறுப்புரையும் இலங்கையில் உறதிசெய்யப்படவில்லை.

இறுதியாக மிஞ்சி இருப்பது 10வது உறுப்புரையால் உறுதி செய்யப்பட்ட உரிமையே. 10 ஆம் உறுப்புரை உறதிப்படுத்தும் உரிமையை மீண்டும் கவனமாகப் பாருங்கள்

உறுப்புரை : 10
ஆளொவ்வருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராகயிருத்தற்கான அல்லது மேற்கொள்வதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

இதில் நம்பிக்கை கொள்வதற்கும் சிந்தனை செய்வதற்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்த அல்ல வெளிப்படுத்தல் சுதந்திரத்தை உள்ளடக்கிய உறுப்புரை 14.1.அ மட்டுப்பாடுகளுக்கு உரியது.


அதேபோல் மனச்சாட்சியைப் பின்வற்றவும் மதத்தைப் பின்பற்றவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மதத்தை தனியாக அல்லது கூட்டாக அந்தரங்கமாகவேனும் பகிரங்கமாகவும் வழிபடவும் அனுசரிக்கவும் அனுமதியளிக்கும் உறுப்புரை 14.1.உம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக இலங்கையின் அரசியலமைப்பு தனது பிரஜைகளுக்கு மனதிற்குள்ளேயே பிராத்தனை செய்யும் உரிமையையே உறுதிப்படுததியுள்ளது. என்னாலும் அதையே செய்யமுடியும். நீங்களும் மனதிற்குள் பிராத்தனை செய்யுங்கள் விலங்குகளால் சோகங்களால் இறுக்கப்பட்ட நாம் முன்னேறி செல்வதற்காக.



1 comment:

  1. தோழர் சந்த்தியதேவன், கட்டுரை நன்றாகவும், இறுதி வரிகள் நையாண்டியாகவும் உள்ளது. இலங்கை அரசியல் அமைப்பின் சில கூறுகளை அறிந்து கொள்வதற்கும் உதவியாக உள்ளது...

    முகப்புத்தகத்தில் கட்டுரையை பகிர்ந்து கொண்ட ரெஷானுக்கும் நன்றிகள்.

    //நான் செய்வதற்கு அரசால் அனுமதிக்கப்படுபவை என்னுடைய உரிமைகள் என அழைக்கப்படக்கூடியன.//

    //இதன்படி பார்த்தால் இலங்கைப் பிரஜையான எனக்கு அனுபவிப்பதற்காக சில உரிமைகள் அரசியல் சாசனத்தாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளன. //

    உரிமைகள் எனப்படும் வார்த்தை சலுகைகள் எனும் பதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது...

    நீங்கள் மேற்குறிப்பிட்ட வாக்கியத்தில் சலுகை எனும் சொல்லாடல் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் உரிமை என்பது எந்த அரசாலும் கொடுக்கப்பட்டு ஒரு குடிமகன் பெற்றுக் கொள்வதல்ல...

    இலங்கை இலங்கை ஜனநாய சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பில், பேச்சளவில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள் ஒரு பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு போன்றதாகவே நடைமுறையில் உள்ளது. பசுவிற்கு வழங்கப்பட்ட சலுகை கயிற்றின் நீளத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இது, வீட்டு வாயில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மிருகத்தைப் போல் கிடைப்பதைத் தின்று வாழ்ந்துவிட்டுப் போ என்பதான சலுகை.

    ReplyDelete