ஊற்றெடுக்கும் உணர்வுகள்
ஓவ்வொரு கணத்தையும்
குதறுகின்றன
சுற்றி நெருக்கும் அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன
சுடு குழல்களின் கண்களினூடாக
என்வீட்டு குளியலறையிலும்
எட்டிப்பார்த்து என் நிர்வாணத்தில்
தனது வெற்றியை எக்காளமிடுகிறது
பேரினவாதம்
உழை.. உழை… ஓய்வொழிச்சலன்றி உழை
உன் உயிர் பொருள் ஆவி எல்லாம் என்
சுயநல அரசியலின் செருப்புகளாக
உன்குடும்ப சிறகுகள் பறக்க அல்ல அவை
பத்திரமாக இருப்பதற்கேனும் உழை என
என் ஏழ்மையின் வலியில் காலூன்றி எம்
மூலாதரத்தை உறிஞ்சி தன் வல்லமை பறைசாற்றுகிறது
ஏகாதிபத்தியம்
கறைகளின் மத்தியில் பரிசுத்தம் அவமானம்
என்றபடிக்கு உருமாறி உயிர்களின்
இருப்பை மறுப்பதை நியாயமாக்கி வாலாட்டுகிறது
மனிதாபிமானம்
அதிகாரத்தின் அகோரத்தையும்
நய வஞ்சகத்தின் துரோகத்தையும்
துணைக்கழைத்து ஊடகங்களில்
உற்பத்தி செய்யும் பொய்களில் பளிச்சிடுகிறது
ஜனநாயகம்
எதிர்ப்புகளுக்கான பரிசுகளால்
உள்ளொடங்கி உள்ளொடுங்கி இருப்பொழிந்து - அச்சம்
அசைவுகளை அந்நியமாகக்குகின்றபோது
நிகழும் அனிச்சை செயலென
உள்ளெழும் ஆசைகள்
ஆர்ப்பரிக்கின்றன
தன் நம்பகத்தன்மையை துறந்த இரவுகளில்
வறுமைக்கும் வெறுமைக்கும் கொடுமைக்கும் நீதிக்குமாக
அதன் ஒவ்வொரு குரலும் வழிந்தோடி
வெளிகளின் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
தேடுகிறது தன் விடுதலையை….
'கள்' இணையச் சஞ்சிகையில் பிரசுரமான கவிதையின் மீள்பிரசுரம் நன்றி கள் குழுமம்
No comments:
Post a Comment