Friday, January 22, 2010

படைப்புலகத்தின் அதிகாரம் கட்டவிழ்ப்பும் கண்துடைப்பும்

01-10-2006ம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டின் 'உயிரெழுத்து' பகுதியில் பிரசுரமான கட்டுரை


ஒரு படைப்பு என்பது அந்தப் படைப்பு உருவாகிய காலச் சமூகத்தை அல்லது அச்சமூகத்தின் ஒரு பகுதியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிக்காட்டுவது. எதிர்காலத்தில் வரலாற்றை எழுதுவதற்கு துணை நிற்க போகின்றது. எனவே அந்த சமூகத்தின் நல்ல அம்சங்களை அல்லது சீர்கேடுகளை சிற்தளவாவது அந்தப்படைப்பு வெளிக் கொணர வேண்டும். மாறாக சிலவற்றை மறைக்கின்ற அல்லது கற்பனைக் காட்சிப் படிமங்களையும் நடைமுறையில் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், முடியாதவற்றை மட்டும் வெளிப்படுத்தக்கூடாது. ஏனெனில் படைப்பு என்பது அதிகாரத்தின் பக்கம் மிக முக்கியமாக அதை நியாயப்படுத்தும் பணியில் பங்கு வகிக்கின்றது. அதேபோல் அதிகாரத்தை கேள்வி கேட்பதிலும் அதை விமர்சிப்பதிலும் வேறு வழிகளை காட்டுவதிலும் படைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு அதிகாரம் என்று சொல்லும்போது எதைத் தடை செய்ய வேண்டும்? மனிதர்கள் செய்வதில் என்ன தடைகளை ஏற்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கும் காரணியே அதிகாரம் என்கிறார் மிகையில் பூகோ.

அதிகாரத்தின் வியூகங்கள் எப்போதுமே அறிவைச் சார்ந்திருக்கும். எனவே அறிவு தான் அதிகாரத்தை உற்பத்தி செய்கிறது. அறிவாளிகள் தான் அதிகாரம் செய்ய முடியும். இந்த அறிவுலகம் என்பது படைப்புகளாலானது. அது அறிவியல் விஞ்ஞானம், சமயம், தத்துவம் எதுவாகவும் இருக்கட்டும் அதுவும் ஒரு படைப்புத்தானே. எனவே ஆதிக்கத்திலுள்ள அறிவாளிகள் தம் அதிகாரத்தை நிலைநாட்டக்கூடியவாறு தான் தம் படைப்புக்களை மேற்கொள்கிறார்கள். இதற்கான உபாயமாகத்தான் நடைமுறை சார்ந்த விடயங்களை தவிர்த்து கற்பனை படிமங்கள், மற்றும் மேலே குறிப்பிட்ட வகையறாக்களை தம்படைப்புக்களில் முதன்மைப்படுத்துகிறார்கள். இதை நாம் தெளிவாக உணர வேண்டும். இதை உணர்வதற்கு பின் நவீனத்துவம் பெரிதும் உதவுகிறது. இதற்கு மாற்றாக தற்போது மக்கள் விளிம்பு நிலை மக்கள் ஆகியவர்களின் வாழ்வியல்களையும் வரலாறுகளையும் எழுதுவதற்கு பின் நவீனத்துவம் இடமளிக்கிறது. இந்தப் பின்னணியில்தான் பின் நவீனத்துவத்துக்கான எதிர்ப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின் நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களாக பெரும்பாலும் அறிவாளிகள் என்னும் பெயரில் உள்ள படைப்புலக அதிகாரவர்க்கத்தினரே இருக்கிறார்கள் என்பதுவும் இங்கு குறிப்பிட்ட வேண்டிய விடயம். இவர்கள்தான் படைப்புப் பற்றியதும் படைப்பாளிகள் பற்றியதுமான பார்வைகளை உருவாக்குகிறார்கள்.

இதன் மூலம் தரமான படைப்பு, கலைத்துவமானபடைப்பு, பிரசார படைப்பு, மக்கள் இலக்கியம், வெகுசன இலக்கியம் என வகைப்படுத்தி அறிவுலகத்தை தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறார்கள் இவர்கள் வகைப்படுத்தும் தரமான உன்னத இலக்கியம் பெரும்பாலும் சாதாரணமானவனுக்கு புரியாத அல்;லது புரிந்து கொள்ளக் கூடிய கடினமானதொன்றாகவே இருக்கிறது. இதன் மூலம் படைப்பாளியை (தம்போன்றவர்களை) சமூகத்தில் ஒரு உன்னதமான இடத்திலும் சாதாரணத்திலிருந்து பிரித்தும் வைக்கிறார்கள் அதனால் தான் படைப்பாளி எல்லோரும் விரும்பும், மதிக்கும் ஒருவராக இருக்கின்றார். படைப்பாளிக்கு பொறுப்புணர்வு மிக அவசியம் என வலியுறுத்துவதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது. தமிழில் இது அதிகமாகவே உள்ளது. இதன் மூலம் சாதாரணனுக்கு படைப்புலகம் பற்றிய பயத்தையும் இவர்கள் ஏற்றுக் கொள்வது என்பது இனி அவனை நிராகரிக்க முடியாது என்ற அளில்தான் இவர்கள் படைப்பாளியை மட்டுமல்லாமல் வாசகனையும் தம் அளவுகோல்களுக்கு உட்படுத்தி இதைத்தான் வாசிக்க வேண்டும். இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்று அதிகாரம் செலுத்துகிறார்கள். இதன் மூலம் பின் நவீனத்துவம் கோரும் வாசக சுதந்திரத்தை படைப்பை தீர்மானிப்பதில் உள்ள வாசகனின் பங்களிப்பை நிராகரிக்கிறார்கள். இவ்வாறு படைப்புலகின் அதிகாரங்களை கட்டவிழ்க்கிறது பின் நவீனத்துவம்.

மரபான படைப்புலகத்தின் அதிகாரத்தை கட்டவிழ்க்கும் பின் நவீனத்துவவாதிகள், இப்போது படைப்புல அதிகாரத்தை தம்வசப்படுத்தி அந்த அதிகாரத்தை இன்னும் பலமடையச் செய்யும் வேலைகளையே செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது கருத்துக்கள் மட்டுமல்ல, மொழிநடை கூட சாதாரணனால் அல்ல மரபானவர்மல்ல, மொழிநடை கூட சாதாரணனால் அல்ல மரபானவர்களினாலும் கூட புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இதன் மூலம் மக்களிடமிருந்து மட்டுமல்ல, நடைமுறை உலகத்திலிருந்தும் இவர்கள் விலகுவதோடு இலக்கிய உலகையும் விலக்கிவைக்கும் வேலையையே செய்கிறார்கள்.

அதாவது மரபான படைப்புலகத்தவர்கள் மாதிரியே இவர்களும் பின் நவீனத்துவம் பற்றிப் பேசாதவர்கள். அறியாதவர்கள் படைப்புலகில் பாமரர்கள் என்ற தோற்றப்மைப்பை நிலைப்படுத்தும் வகையில் மரபுக் கட்டமைப்பில் உச்சத்திலிருக்கும் சிலரை தம் கூற்றுக்குகாளக மாற்றுகிறார்கள்.

அவர்களும் பின் நவீனத்துவத்தை ஒதுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் குழப்பமாக ஏதாவது உளறி, ஏற்கனவே விலகி இருக்கும் வாசகனை ஒரே அடியாக மூலைக்கே துரத்திவிடுகிறார்கள். இவ்வாறு மரபானவர்களும் அதைக் கட்டுடைப்பவர்களும் தத்தம் சார்பில் நின்று அறிவு வாதம் செய்யும்போது குழப்பங்கள் அதிகமாகி மூலையிலிருக்கும் வாசகன் வெளித்தள்ளப்படுகிறான். அவனும் வேறு வழியின்றி சமூகத்தின் அதிகார வர்க்கம் சொல்லும் ஏகாதிபத்திய மாயைகளில் சிக்கி உள்விழுங்கப்படுகிறான். இவ்வாறு தமிழ்ப் பின் நவீனத்துவம் ஏகாதிபத்தியத்தை வளர்ப்பதற்கு பயன்படுகிறது.

ஒரு காலம் மரபுவாதிகளை மறுதலித்து யதார்த்தத்தை வலிறுத்தி மார்க்கசியர்கள் கட்டமைத்து வைத்த அதிகாரத்துவ அளவு கோல்களையும் கதையாடல்களையும் கட்டவிழ்ப்பதாகக் கூறும் பின் நவீனத்துவவாதிகள், தம்மளவில் அதே வகையான சொல்லாடல்களையும், சில அளவு கோல்களையும் நிலை நிறுத்தும் அதிகாரப் போக்கான அதிகாரிகளாக மாறியுள்ளனர். வுhசகனை கடிவாளமிட்டு பிரதியை இவ்வகையில்தான் வாசிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் ஒரு மைய நிலைப்பாட்டை இவர்கள் கொண்டிருக்கிறார்கள். தட்டைத் தன்மை, பெருங்கதையாடல், வெளியை ஏற்படுத்துதல், கட்டுடைத்தல் எனச் சில போலவும் மார்க்சிய விமர்சகர்கள் போலவும் விதிகளுக்குள் கட்டுப்பட்ட பார்வையை இவர்கள் வாசகர்கள் மத்தியில் திணிக்கிறார்கள். பிரதிக்கு முன்னர் பிரதிபற்றி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். கட்டமைக்கிறார்கள். இதன் மூலம் வாசகனை ஒரு சுயதேடல் உள்ளவனாகவே தனது சுய முடிவுக்கு வரக்கூடியவனாகவோ மாற்றாது தமது விமர்சன அதிகாரத்துக்குள் கையகப்படுத்த முயல்கிறார்கள்.

மரபுகளை கட்டவிழ்க்கும் இவர்கள் தம்மைப்பற்றியும் தம்படைப்புக்கள் பற்றியும் சுய விமர்சன ரீதியிலான கட்டவிழ்ப்புகளைச் செய்யாது சில கண் துடைப்புக்களை மட்டுமே செய்கிறார்.

எவ்வாறு எனில் சிலதை மட்டுமே, தமக்கு ஒவ்வாத சிலரது படைப்பை மட்டுமே கட்டவிழ்கிறார்கள். மரபானவர்கள் போலவே இவர்களும் ஒரு குழுவாக குறுங் குழுவாக மகப்பான்மையில் செயற்படுகிறார்கள்.

தம்மைச் சேர்ந்தவர்களின் படைப்பை அது மிகக் குழப்பமானதாக இருந்தாலும் அதை வெகுவாக சிலாகிக்கிறார்கள். இவர்களின் கருத்துகளின் படி எவன் ஒருவன் யாருக்கும் புரியாத வகையில் ஒரு படைப்பை அல்லது பிரதியை ஆக்குகிறானோ அவனே மிகச்சிறந்த படைப்பாளி. இது நீடிக்குமானால் படைப்புலகத்திற்கு புதிய படைப்பாளிகளின் வாசகர்களின் வருகை குறையும் அத்தோடு படைப்புகளும் படைப்பாளிகளும் மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டு விடும். பின் நவீனத்துவம் நவீனத்துவக் காலத்துக்கு முந்தைய முன் நவீன நிலையை அடைவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். இந்நிலை ஏற்படாது பின் நவீனத்துவாதிகள் தம்மை சுயபட்டவிழ்ப்பு செய்ய வேண்டுமேயொழிய கண்டதுடைப்புக்களல்ல.

No comments:

Post a Comment